“யே பரா லாக்வாலா நா? இஸி கி பாத் கர் ரகே ஹை நா?” என்கிறார் 30 வயது ஷாகித் ஹுசேன், செல்பேசியிலுள்ள வாட்சப் மெசேஜை காட்டி. 12 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கும் வருமான வரிக்கான வரம்பு குறித்த குறுந்தகவல் அது. பெங்களூருவின் மெட்ரோ பாதையில் வேலை பார்க்கும் நாகார்ஜுனா கட்டுமான நிறுவனத்தில் க்ரேன் இயக்கும் வேலையை பார்க்கிறார் ஷாகித்.
”12 லட்ச ரூபாய் வரம்பு வரை வருமான வரி விலக்கு பற்றி நிறைய கேள்விப்படுகிறோம்,” என்கிறார் அங்கு வேலை பார்க்கும் மற்றொருவரான ப்ரிஜேஷ் யாதவ். “இங்குள்ள எவரும் வருடத்துக்கு 3.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதில்லை.” 20 வயதுகளில் இருக்கும் பிரிஜேஷ், உத்தர்ப்பிரதேச தியோரியா மாவட்டத்தின் துமாரியா கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்.
“வேலை இருந்தால், மாதத்துக்கு 30,000 ரூபாய் வரை நாங்கள் ஈட்டுவோம்,” என்கிறார் பிகாரின் கைமூர் மாவட்டத்தின் பியூர் கிராமத்தை சேர்ந்த ஷாகித். வேலை தேடி பல மாநிலங்களுக்கு அவர் சென்றிருக்கிறார். “இந்த வேலைக்கு பிறகு, நிறுவனம் எங்களை வேறு எங்காவது அனுப்பும். அல்லது 10-15 ரூபாய் அதிகமாக கிடைக்கும் வேறு வேலை நாங்கள் தேடுவோம்.”






