ஆட்டம் தொடங்கிவிட்டது என்பதற்கும் இம்முறை நாம் 400-ஐ தாண்டுவோம் என்பதற்கும் இடையில், எங்களின் மாநிலம் சிறு இந்தியாவாக இருக்கிறது. அரசாங்க திட்டங்கள், சிண்டிகேட் மாஃபியாக்கள், அரசாங்க முழக்கங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றின் கலவையாக இருக்கிறது.
இங்கு வேலைகளில் மாட்டிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களும் நம்பிக்கையற்ற மாநிலத்தில் சிக்கிக் கொண்ட வேலையற்ற இளைஞர்களும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மோதலில் சிக்குண்ட சாமானியர்களும் காலநிலை மாற்றத்தில் மாட்டியிருக்கும் விவசாயிகளும் அடிப்படைவாத அரசியலை எதிர்க்கும் சிறுபான்மையினரும் இருக்கின்றனர். நரம்புகள் தளர்கின்றன. உடல்கள் உடைக்கப்படுகின்றன. சாதி, வர்க்கம், பாலினம், மொழி, இனம், மதம் எல்லாமும் குறுக்கு வெட்டாக ஓடி எல்லா குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்த குழப்பத்தினூடாக பயணிக்கையில் நமக்கு குழப்பமான குரல்கள் கேட்கிறது. கையறுநிலையில் உடல் நடுங்குபவர்களின் குரல்களும் அதிகாரத்தில் எவர் வந்தாலும் நிலை மாறாது என்கிற தெளிவின் குரல்களும். சந்தேஷ்காலி தொடங்கி இமயமலையின் தேயிலைத் தோட்டங்கள் வரை, கொல்கத்தாவிலிருந்து மறக்கப்பட்ட ராரின் பகுதிகள் வரை, நாங்கள் சுற்றுகிறோம். கேட்கிறோம். கூடுகிறோம். புகைப்படம் எடுக்கிறோம். பேசுகிறோம்.

















