பெரும்பாலான இந்திய விவசாயிகளுக்கு தெரிந்திருக்கும் சில ஆங்கில வார்த்தைகளில் ‘சுவாமிநாதன் ரிப்போர்ட்’ அல்லது ‘சுவாமிநாதன் கமிஷன் ரிப்போர்ட்’ ஆகியவையும் நிச்சயமாக இருக்கும். அந்த அறிக்கை முன் வைக்கும் முக்கியமான பரிந்துரையும் அவர்களுக்கு தெரியும்: குறைந்தபட்ச ஆதார விலை (MSP) = விளைச்சலுக்கு ஆகும் விரிவான செலவு + 50 சதவிகிதம் (C2 + 50 சதவிகிதம் என்றும் குறிப்பிடப்படும்).
அரசாங்கத்தாலோ அதிகாரவர்க்கத்தாலோ அறிவியல் நிறுவனங்களாலோ மட்டும் நினைவுகூரப்படுபவர் அல்ல பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன். விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் (NCF) அறிக்கையை அமல்படுத்தக் கோரும் கோடிக்கணக்கான விவசாயிகளின் மனங்களில் நிறைந்தவர் அவர்.
பெரிய பங்களிப்பும் தாக்கமும் ஏற்படுத்தக் கூடிய NCF அறிக்கைகளை ‘சுவாமிநாதன் அறிக்கை’ என்றுதான் இந்திய விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். ஆணையத்தின் தலைவராக அவர் இருந்தார்.
ஆனால் அந்த அறிக்கைகளை இருட்டடிப்பு செய்து, UPA மற்றும் NDA ஆகிய இரு அரசாங்கங்களும் ஏமாற்றின. முதல் அறிக்கை டிசம்பர் 2004-ல் சமர்ப்பிக்கப்பட்டது. கடைசி அறிக்கை அக்டோபர் 2006-ல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அவற்றின் பொருட்டு நாம் கேட்கும் விவசாய நெருக்கடி விவாதிக்கும் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு என்பது நடக்கவே இல்லை. பிரச்சினை சார்ந்து ஒரு மணி நேர விவாதம் கூட நாடாளுமன்றத்தில் நடக்கவில்லை. முதல் அறிக்கை வந்து 19 வருடங்கள் ஆகிவிட்டன.
2014ம் ஆண்டில் சுவாமிநாதன் அறிக்கையையும் அதன் குறிப்பான அம்சமான குறைந்தபட்ச ஆதார விலை பரிந்துரையையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது மோடி அரசாங்கம். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள், அத்தகைய பரிந்துரை அமல்படுத்தினால் சந்தை விலைகள் பாதிப்படையும் என வேகவேகமாக பிரமாணப் பத்திரத்தை அளித்தனர்.
ஒருவேளை அந்த அறிக்கைகள், விவசாயிகளுக்கு அதிக சார்புடன் இருப்பதாக UPA-வும் NDA-வும் கருதியிருக்கலாம். ஏனெனில் இரு அரசாங்கங்களும் இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்க முயன்று கொண்டிருந்தன. சுதந்திரத்துக்கு பிறகு விவசாயத்தை ஆக்கப்பூர்வமாக அணுகிய ஒரே விஷயம் அறிக்கைதான். அதை அளித்த சுவாமிநாதனை பொறுத்தவரை, விவசாய வளர்ச்சியை விளைச்சலை கொண்டு இல்லாமல் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதை கொண்டே அளவிட வேண்டும்.






