“என் மாணவர்கள் மீதான அளவற்ற அன்பும், முழுமையான ஏற்பும் முக்கியம் என்பதை ஓர் ஆசிரியராக நான் கற்றுக் கொண்டேன்!”
மென்மையாக, ஆனால் உறுதியாக மேதா தெங்க்ஷா தன் கருத்தை முன் வைக்கிறார். சிறப்பு ஆசிரியரான அவர், சாதனா கிராமத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். பல்வேறு வயதுகளையும் அறிதிறன்களையும் கொண்ட 30 பேர் அங்கு படிக்கின்றனர். அடிப்படை வாழ்க்கைத் திறன்கள், கலை, இசை மற்றும் நடனம் ஆகியவற்றுடன் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
புனே மாவட்டத்தின் முல்ஷி ஒன்றியத்தில் சாதனா கிராமம் இருக்கிறது. அறிதிறன் குறைபாடு கொண்ட வளர்ந்தவர்களுக்கான விடுதியுடன் கூடிய கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் ‘தனித்துவ நண்பர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். ஒரு இதழியலாளராக பயிற்சி பெற்ற மேதா, தன்னுடைய பொறுப்பை 10 பேருக்கான கிரக மாதா (வீட்டுத் தாய்) என விளக்குகிறார். “தாயாக இருக்கும் ஆசிரியர்” எனக் குறிப்பிடுகிறார்.
காது கேளாதோருக்கான தயாரி பள்ளியின் சிறப்பு ஆசிரியர் சத்யபாமா அல்ஹத் சொல்கையில், “விடுதிப் பள்ளியில் இருக்கும் எங்களை போன்ற ஆசிரியர்கள், பெற்றொரின் பங்கையும் வகிக்கிறார்கள். வீட்டில் இல்லை என்கிற வருத்தம் பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது,” என்கிறார். ஷ்ராவன் மதத்தில் கொண்டாடப்படும் நாக் பஞ்சமி விழாவின் பாரம்பரிய விளையாட்டான புகாதி விளையாட்டை விளையாட சில சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார் அவர். தயாரியில் 40 விடுதி மாணவர்களும் 12 நாள்தோறும் பள்ளிக்கு வந்து படிக்கும் மாணவர்களும் படிக்கின்றனர். அப்பள்ளியின் மாணவர்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, தில்லி, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களிலிருந்து வந்திருக்கின்றனர்.
































