"ஒவ்வொரு முறை பட்டியில் [உலை] தீ மூட்டும்போதும் எனக்கு காயம் ஏற்படுகிறது", என்கிறார்.
சல்மா லோஹரின் விரல்களில் தழும்புகள், இடது கையில் இரண்டு வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. அந்தக் காயங்களை வேகமாக ஆற்றுவதற்கு உலையிலிருந்து ஒரு பிடி சாம்பலை எடுத்து அதில் பூசுகிறார்.
சோனிபட்டின் பஹல்கர் சந்தையில் ஜக்கி எனப்படும், தொடர் கூடாரங்களை அமைத்து தங்கியுள்ள ஆறு குடும்பங்களில், 41 வயதான அவரது குடும்பமும் ஒன்று. ஒருபுறம் பரபரப்பான மார்க்கெட் சாலை, மறுபுறம் நகராட்சி குப்பைக் கிடங்கு, அருகிலேயே அரசாங்க கழிப்பறை மற்றும் தண்ணீர் தொட்டி வேறு. சல்மாவும், அவரது குடும்பமும் இந்த `வசதி’களை நம்பித்தான் தங்கியுள்ளனர்.
கூடாரங்களுக்கு மின் இணைப்பெல்லாம் கிடையாது, 4-6 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தால், முழு கூடாரமும் வெள்ளத்தில் மூழ்கிவிடும் – கடந்த அக்டோபரில் (2023) மூழ்கியதுபோல. அப்படியான நேரங்களில் அவர்கள் கட்டிலில் கால்களை மடக்கி உட்கார்ந்து, தண்ணீர் வடியும் வரை காத்திருபார்கள் – இதற்கே 2-3 நாட்கள் ஆகும். "அப்படியேன நேரங்களில் ரொம்ப நாறும்", என்கிறார் சல்மாவின் மகன் தில்ஷாத்.
"வேற எங்க போவது?" என கேட்கிறார் சல்மா. "குப்பைகளுக்கு பக்கத்திலேயே குடியிருப்பதால் அடிக்கடி உடம்புக்கு (நோய்) வருகிறது. குப்பையில் மொய்க்கும் ஈக்கள், எங்கள் உணவிலும் மொய்க்கின்றன. ஆனா, வேற எங்கே போவது?"
காடியா, கதியா அல்லது கடுலியா லோஹர்கள் என அழைக்கப்படும் இவர்கள் ராஜஸ்தானில் நாடோடி பழங்குடியினராகவும் (என்.டி), பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் பட்டியலிடப்பட்டுள்ளனர். இச்சமூகத்தினர் டெல்லி, ஹரியானாவிலும் வசிக்கின்றனர். ராஜஸ்தானில் நாடோடி பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டுள்ள அவர்கள், ஹரியானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராவர்.
அவர்கள் கூடாரமிட்டுள்ள மார்க்கெட் மாநில நெடுஞ்சாலை 11-க்கு அருகில் உள்ளது. அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள், இனிப்பு வகைகள், சமைலுக்குப் பயன்படுத்தப்படும் மசாலாக்கள், மின் சாதனங்கள் போன்ற பலவற்றை விற்கும் இடமாக அது வாடிக்கையாளர்கள் பலரையும் கவர்கிறது. பலர் ஸ்டால்களை அமைத்து விற்பனை செய்துவிட்டு, சந்தை முடிந்தவுடன் கிளம்பிச் செல்கிறார்கள்.




















