“செல்பேசி, தொலைக்காட்சி, வீடியோ கேம் ஆகியவை வந்ததால், பொம்மலாட்டம், கதை சொல்லல் பாரம்பரியம் காணாமல் போகிறது.” பூரண் பட், ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள தாந்தா ராம்கர் என்ற இடத்தைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் ஆவார். சொந்தமாகப் பாவைகள் செய்து குழந்தைகள் நிகழ்வுகள், திருமண விழாக்கள், அரசு நிகழ்வுகள் ஆகியவற்றில் நாடகங்கள் நிகழ்த்தப்பட்ட காலத்தை நினைவுகூர்கிறார் 30 வயது பூரண் பட்.
“இன்று மக்கள் மாறுபட்ட நிகழ்வுகளை விரும்புகிறார்கள். முன்பு பெண்கள் டோலக்கில் பாட்டிசைப்பார்கள். இப்போது, ஹார்மோனியத்தில் திரைப்படப் பாடல்களை இசைக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆதரவு கிடைத்தால், நமது முன்னோர்கள் சொல்லித் தந்த கலையை எதிர்காலத்துக்கு கொண்டு செல்ல எங்களால் முடியும்,” என்கிறார் அவர்.
முப்பதாண்டு காலம் முன்பு ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்ட பலகலை மையமான ஜவஹர் கலா கேந்திராவுக்கு இந்த ஆண்டு (2023) ஆகஸ்டில் சென்றிருந்தார் பட். ராஜஸ்தான் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்களின் குழுக்கள் அங்கு நடந்த அரசு விழாவில் கூடியிருந்தன. அந்த விழாவில்தான் தங்கள் கலைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போராடி வரும் அந்தக் கலைஞர்களுக்கு என்று ஒரு புதிய திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது.
‘முக்கிய மந்திரி லோக் கலாக்கார் புரொத்சாகன் யோஜனா’ என்பது அந்த திட்டத்தின் பெயர். ஒவ்வொரு நாட்டுப்புறக் கலைஞர் குடும்பத்துக்கும் அவர்கள் வாழும் இடத்திலேயே ஆண்டுக்கு 100 நாள் வேலை கிடைக்க உத்தரவாதம் செய்கிறது இந்த திட்டம். ஊரக குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பை உறுதி செய்த ‘தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் -2005’ இதற்கு முன்னுதாரணமாக அமைந்தது.
கைவினைஞர்களுக்காக 2023 செப்டம்பர் மாதம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தது ஒன்றிய அரசு. ஆனால், கால்பெலியா, தேரதாளி, பகுரூபியா போன்ற பல நிகழ்த்துக் கலைக் குடிகளின் நலனுக்காகப் போடப்பட்ட முதல் திட்டம் இதுதான். ராஜஸ்தானில் இருந்து ஒன்றிரண்டு லட்சம் நாட்டுப் புறக் கலைஞர்கள் இருப்பதாக செயற்பாட்டாளர்கள் மதிப்பிடுகிறார்கள். சரியான கணக்கெடுப்பை யாரும் நடத்தவில்லை. போக்குவரத்து, விநியோகம் போன்ற பிரிவுகளில் செயல்படும் உதிரித் தொழிலாளர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.










