லாட் ஹைகோ ஒரு எளிமையான உணவாகத் தோன்றலாம். ஏனெனில் அதற்கு இரண்டு பொருட்கள் மட்டுமே தேவை - புலம் (உப்பு) மற்றும் சாசங் (மஞ்சள்)]]. ஆனால் உண்மையான சவால், சமைக்கும் பக்குவத்தில் உள்ளது என்று சமையல்காரர் கூறுகிறார்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹோ ஆதிவாசி பிரிவைச் சேர்ந்தவர், சமையல்காரர் பிர்சா ஹெம்ப்ரோம். லாட் ஹைகோ இல்லாமல் மழைக்காலம் முழுமையடையாது என்று அவர் கூறுகிறார். அந்த பாரம்பரிய மீன் உணவின் செய்முறையை அவர் தனது பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டார்.
குந்த்பானி வட்டத்திலுள்ள ஜான்கோசாசன் கிராமத்தில் வசிக்கும் 71 வயதான மீனவர் மற்றும் விவசாயி, ஹோ மொழி மட்டுமே பேசுகிறார். இது ஆஸ்திரோ ஆசியப் பழங்குடி மொழி ஆகும். ஜார்க்கண்டில், 2013 ஆம் ஆண்டின் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த சமூகத்தின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது; ஹோ மக்கள் குறைந்த எண்ணிக்கையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் வாழ்கின்றனர் ( இந்தியாவில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் புள்ளிவிவரம் , 2013).
மழைக்காலங்களில் அருகிலுள்ள நீர் வயல்களில் இருந்து புதிய ஹேட் ஹைகோ (உல்லா கெண்டை), இச்சே ஹைகோ (இறால்), பம் புய், தாண்டிகே மற்றும் துடி மீன்களின் கலவையைப் பிடித்து கவனமாக சுத்தம் செய்கிறார். பின்னர், அவற்றை புதிதாக பறித்த காக்காற்று பட்டாயில் (பூசணி இலைகள்) வைக்கிறார். சரியான அளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்ப்பது முக்கியம். "உப்புக் கூடினால் கரிக்கும். குறைந்தால் சப்பென்று ஆகிவிடும். நல்ல ருசிக்கு உப்பு சரியாக இருக்க வேண்டும்," என்கிறார் ஹெம்ப்ரோம்.
மீன் கருகாமல் இருப்பதை உறுதி செய்ய, மெல்லிய பூசணி இலைகளின் மீது தடிமனான குங்கிலிய இலைகளை கூடுதலாக அடுக்கி அவர் மூடி வைக்கிறார். இது இலைகளையும், பச்சை மீன்களையும் பாதுகாக்கிறது என்று அவர் கூறுகிறார். மீன் தயாரானதும், பூசணி இலைகளுடன் சேர்த்து சாப்பிட விரும்புகிறார். அவர் கூறுகையில், "வழக்கமாக நான் மீன்களை மூடுவதற்கு பயன்படுத்தப்படும் இலைகளை தூக்கி எறிவேன். ஆனால் இவை பூசணி இலைகள். எனவே நான் அதை சாப்பிடுவேன். சரியாக சமைத்தால் இலைகள் கூட சுவையாக இருக்கும்," என்கிறார்.
இந்த காணொளிக்காக ஹோ மொழியிலிருந்து இந்திக்கு மொழிபெயர்த்த அர்மான் ஜமுதாவுக்கு பாரி நன்றித் தெரிவிக்கிறது.
பாரியின் அருகிவரும் மொழிகள் திட்டம், இந்தியாவில் அருகி வரும் மொழிகளை, எளிய மக்களின் குரல்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹோ, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் பழங்குடிகளால் பேசப்படும் ஆஸ்திரோ ஆசியாடிக் மொழிகளின் முண்டா கிளையைச் சேர்ந்தவர். யுனெஸ்கோவின் அட்லஸ் ஆஃப் லாங்குவேஜஸ், ஹோ மொழியை இந்தியாவின் அருகி வரும் மொழிகளில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் பேசப்படும் மொழி இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழில்: சவிதா