முதலில் மழையின்மை, பின்னர் காலம் தப்பிய மழை ஆகியவை சத்ரா தேவியின் பயிர்களை நாசமாக்கின. “நாங்கள் பஜ்ரா [கம்பு] பயிரிட்டோம். அது நன்றாக வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையில், மழை பெய்யவில்லை. பின்னர் அறுவடை காலத்தில் பெய்த மழை, பயிர்களை நாசமாக்கியது,” என்று ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் உள்ள கிர்கிரி கிராமத்தைச் சேர்ந்த இந்த 45 வயது விவசாயி கூறுகிறார்.
கரௌலியின் பொருளாதாரம், அதிகப்படியாக விவசாயத்தை சார்ந்துள்ளது. அங்கு வசிக்கும் பெரும்பான்மையானோர், பயிரிடுபவர்கள் அல்லது விவசாய தொழிலாளர்கள் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) ஆவர். மாநிலத்தின் இப்பகுதியில் பல காலமாக தண்ணீர் பஞ்சம் இருப்பதால், விவசாயம் பெரும்பாலும் மானாவாரியாக உள்ளது.
மீனா சமூகத்தைச் (மாநிலத்தில் ஓபிசியாகப் பட்டியலிடப்பட்டவர்) சேர்ந்த சத்ரா தேவி, கடந்த 10 ஆண்டுகளின் மழைப்பொழிவில் காலநிலை மாற்றத்தைக் கண்டதாகக் கூறுகிறார். ராஜஸ்தான், இந்தியாவின் மிகப்பெரிய (பரப்பளவில்) மாநிலம். அங்குள்ள 70 சதவீத மக்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தான் வாழ்வாதாரமாக உள்ளது.


