MNREGA இன் கீழ் பார்வதிக்கு கடைசியாக ஒரு வருடத்திற்கு முன்பு, மே 2023இல் வேலை கிடைத்தது. அதுவும் வெறும் ஐந்து நாட்களுக்கு மட்டும்.
பார்வதி (அவர் இந்த பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) கவுர் மதுகர் ஷாபூர் கிராமத்தில் ஒரு சாலையை சமன் செய்யும் வேலை செய்தார். MNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்) கீழ், அரசால் உறுதியளிக்கப்பட்ட ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை, ஜாதவ் (பட்டியலிடப்பட்ட சாதி) சமூகத்தைச் சேர்ந்த இந்த 45 வயது தினக்கூலித் தொழிலாளிக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை. "பாதி வயிறை நிரப்பி தான் நாங்கள் பிழைக்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.
அது மட்டுமல்லாமல், 2020ல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வாங்க இந்த தம்பதியர் சமர்பித்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், காத்திராமல் பார்வதியும் அவரது கணவர் சோட்டே லாலும், இரண்டு அறைகள் கொண்ட ஒரு பக்கா வீடு கட்ட, உறவினர்களிடம் இருந்து ரூ.90,000 கடன் வாங்கியுள்ளனர்.
“யாராவது வாக்கு கேட்டு வந்தால், வீடு வழங்கும் பட்டியலில் இல்லாத பெயர், வாக்காளர் பட்டியலில் மட்டும் எப்படி உள்ளது என்பதை கேட்பேன்?” என்கிறார். MNREGAஇன் கீழ் பணிபுரிந்த பார்வதியின் கணவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் வந்ததால், அவரால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. இன்று அவர் வாரணாசி நகரில் உள்ள ஒரு தொழிலாளர் மண்டிக்கு எப்போதாவது செல்கிறார், அங்கு அவருக்கு நாளொன்றுக்கு ரூ.400-500 ஊதியம் கிடைக்கும்.
MNREGA, கிராமப்புற பயிலாத தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது. ஆனால் வாரணாசி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் முழுவதும் கூறும் பொதுவான புகார் என்னவென்றால், "கடைசி இரண்டு பிரதானிகளில்" அதாவது கடந்த இரண்டு சர்பஞ்ச் பதவிக் காலம் அல்லது தோராயமாக 10 ஆண்டு காலத்தில், ஆண்டுதோறும் 20-25 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது என்பதாகும்.
பார்வதி இப்போது தேவையில்லாத கடனில் சிக்கித் தவிக்கிறார். அரசின் எந்த உதவியும் இல்லாமல், தாகூர் சமூகத்தின் வயல்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார். அவர்களும் அறுவடை மற்றும் விதைப்பு காலங்களில் சுமார் 15 நாட்கள் வேலைக்கு 10 கிலோ உணவு தானியங்களைக் கொடுக்கிறார்கள்.




















