வாத்தின் இறகுகள், நபா குமாரின் பட்டறை முழுக்க சிதறிக் கிடக்கிறது. சுத்தமான இறகுகள், அழுக்கான இறகுகள், வெட்டப்பட்ட இற்றகுகள், பல வடிவங்களிலான இறகுகள், வெள்ளை நிறத்தின் பல வண்ண இறகுகள் கிடக்கின்றன. திறந்து கிடக்கும் ஜன்னலின் வழியாக வரும் தென்றல் காற்றில், அந்த இறகுகள் எழும்பி, சற்று சுற்றி கீழே விழுகின்றன.
உலுபெரியாவில் இருக்கும் நபா குமாரின் மூன்று மாடி வீட்டில் நாம் தரைத்தளத்தில் இருக்கிறோம். பட்டறையில் நிரம்பியிருக்கும் காற்றில் கத்திரிக்கோல்கள் வெட்டும் சப்தங்கள் நிரம்பியிருக்கின்றன. இங்குதான் இந்தியாவின் பூப்பந்தாட்ட இறகுப்பந்துகள் செய்யப்படுகின்றன. “வெள்ளை வாத்து இறகுகள், செயற்கை அல்லது மரத்திலான அரைக்கோள மூடியின் அடித்தளங்கள், பசையும் பருத்திநூலும் சேர்ந்த நைலானும்தான் இறகுப்பந்து செய்ய தேவையானவை,” என அவர் விளக்குகிறார், ஒன்றை எடுத்துக் காட்டி.
ஆகஸ்ட் 2023ல் ஒரு திங்கட்கிழமையின் வெயிலான காலை எட்டு மணி அது. ஐந்து வாரம் கழித்து, இந்திய இறகுப் பந்தாட்ட வீரர்கள் தென்கொரிய வீரர்களை 21-18; 21-16 என்ற புள்ளியில் வீழ்த்தி முதல் தங்கக் கோப்பை ஆசிய விளையாட்டுகளில் பெறவிருந்தனர்.
உலுபெரியாவில் கைவினைஞர்களில் செருப்புகளும் சைக்கிள்களும் தயாரிப்பு ஆலைக்கு வெளியே அணிவகுத்திருக்கின்றன. இஸ்திரி போட்ட பழுப்பு சிவப்பு சட்டை மற்றும் காற்சட்டைகளை அணிந்து நபா குமாரும் தயாராக இருக்கிறார்.
“பூப்பந்தாட்ட பந்துகளை 12 வயதாக இருக்கும்போது பானிபன் கிராமத்திலிருக்கும் பட்டறையில் நான் வாத்து இறகுகள் கொண்டு செய்யத் தொடங்கினேன்,” என்கிறார் 61 வயது நிறைந்த அவர். இத்துறையில் தன் பணியை அவர் இறகு வடிவமைப்பாளராக தொடங்கினார். கையில் கத்திரிக்கோல் பிடித்து, மூன்று அங்குல நீள இறகுகளை அவர் வடிவமைத்தார். இறகுப்பந்துகளை கைவினைஞர்கள் பந்துகள் எனக் குறிப்பிடுகின்றன்ர.
“ ஜெ.போஸ் அண்ட் கம்பெனிதான் (வங்கத்தில்) முதல் ஆலை. பிர்புர் கிராமத்தில் 1920களில் உருவானது. படிப்படியாக ஜெ.போஸின் பணியாளர்கள் தத்தம் சொந்த ஆலைகளை அவரவர் கிராமங்களில் உருவாக்கினர். அத்தகைய ஓர் ஆலையில்தான் இக்கலையை நான் கற்றுக் கொண்டேன்,” என கூறுகிறார்.
























