கொஞ்சம் மந்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும் மல்லிகை மொட்டு, நகக்கணு அளவே உள்ள மலர். மல்லிகைத் தோட்டத்தில், இங்கொன்றும், அங்கொன்றுமாக மலர்ந்திருக்கும் மல்லிகை மலர்களின் வாசனை நம் நாசியைத் துளைக்கிறது. மல்லிகை மலர் ஒரு அரிய பரிசு. மேகங்கள் சூழ் வானின் கீழ், புழுதிபடிந்த மண்ணில் நிற்கும் செடியில் விளையும் அற்புதம்.
ஆனால், மல்லிகை மலர்த்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கோ அந்த நறுமணத்தை நின்று ரசிக்க நேரமில்லை. மல்லிகை மொட்டுக்களைப் பறித்து, அவை மலரும் முன்பே, பூக்கடைகளுக்கு அனுப்பி விட வேண்டும். விநாயக சதுர்த்திக்கு இன்னும் நாலு நாட்களே இருக்கின்றன. மார்க்கெட்டில் நல்ல ரேட் கிடைக்கும்.
வேலையாட்கள், கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும் உபயோகித்து மல்லிகை மொட்டுக்களை விரைந்து கிள்ளிப் பறிக்கிறார்கள். கைப்பிடியளவு மொட்டுக்கள் சேர்ந்ததும், அவற்றை தம் மடியில் போடுகிறார்கள். விரைவாகப் பறித்து முன்செல்லும் அவர்கள் பணியில் ஒரு லயம் இருக்கிறது. மூன்று வயதுக்குழந்தையின் உயரமே இருக்கும் செடிகளின் கிளைகளை விலக்கி, மொட்டுக்களை மிக லாவகமாகப் பறிக்கிறார்கள். கைகள் வேலை செய்கையில், வாய்கள் பேசிக் கொள்கின்றன. ரேடியோவில் தமிழ்ச் சினிமாப் பாடல்கள் ஒலிக்கின்றன. கீழ் வானில் சூரியன் மெல்ல மேலெழுந்து வருகிறான்..
விரைவில் இந்தப் பூக்கள் மதுரையின் மாட்டுத்தாவணி மார்க்கெட்டைச் சென்றடையும். அங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அவை பயணிக்கவிருக்கின்றன.
திருமங்கலம், உசிலபட்டி தாலூக்காவின் மல்லிகைப் பண்ணைகளுக்கு 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் ’பாரி’யின் சார்பில் பயணித்தோம். இந்தப் பண்ணைகள் மதுரை நகரில் இருந்து ஒரு மணிநேரப் பயண தூரத்தில் உள்ளவை. மீனாட்சி அம்மன் வசிக்கும் பரபரப்பான மதுரை பூ மார்க்கெட்டில், மல்லிகை சிறு கூறுகளாக விற்கப்படுகிறது.




























