"பந்தர் கி ஃபெரி லாவோ, பந்தர் கி ஃபெரி லாவோ... [குரங்குகளுக்கு உணவு கொடுங்கள்...]"
ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் உள்ள ஷியோகஞ்ச் நகரின் சந்துகளில் சைக்கிளில் செல்லும் ஜுஜாராம் தர்மிஜி சந்த் சொல்கிறார், "மக்கள் ரொட்டி போன்ற எஞ்சிய உணவுகளையும், சமைத்த மற்றும் சமைக்காத காய்கறிகளையும் எப்போதும் வழங்குகிறார்கள்," என்று அவர் குறிப்பிடுகிறார். "ஆறு முதல் ஏழு சந்துகளில் இருந்து நான் உணவை சேகரிப்பதற்குள் ஒரு சாக்கை நிரப்பி விடுவேன்," என்று அவர் கூறுகிறார். 15 முதல் 20 கிலோ கொள்ளளவு கொண்ட ஒரு பிளாஸ்டிக் பையை பயன்படுத்துகிறார் அவர்.
ஒவ்வொரு ஆண்டும் எட்டு மாதங்களுக்கு தினமும் காலை 8.30 மணி முதல் குரங்குகளுக்கு உணவு சேகரிப்பதில் ஜுஜாராம் பரபரப்பாக இருக்கிறார். மூட்டை நிரம்பியவுடன், அவர் சைக்கிளில் இருந்து தனது மொபட்டிற்கு மாற்றி எட்டு கிலோமீட்டர் பயணத்தில் தேசிய நெடுஞ்சாலை 62-ல் இருந்து சிரோஹி தாலுகாவில் பல்ரி கிராமத்தின் தென்கிழக்கில் மலைகளால் சூழப்பட்ட ஒரு சிறிய கோயிலான கங்கேஷ்வர் மஹாதேவ் மந்திருக்கு செல்கிறார்.
காலை 11 மணியளவில் கோயிலை அடைந்து "ஆவோ, ஆவோ" ("வா, வா") என்று குரங்குகளை அழைக்கிறார். மந்திரம் போல, 200 முதல் 300 லங்கூர்கள் (செம்னோபிதெகஸ் ப்ரியம்) உடனடியாக வருகின்றன. அவை அவரை முறைத்துப் பார்த்தபடி, நல்ல பிள்ளைகளைப் போல விருந்துக்காக காத்திருக்கின்றன. ஆனால் அவர் ரொட்டிகளை காற்றில் வீசும்போது நல்ல பழக்கவழக்கங்கள் மறைந்துவிடும். விலங்குகள் விரைவாக சென்று கையில் பிடிபட்ட அனைத்து உணவுகளையும் விழுங்குகின்றன. ஒரே நேரத்தில் ஏராளமான லங்கூர்கள் விரைவாக கூடுகின்றன. இந்தக் காட்டில் இருக்கும் 700 குரங்குகளுக்கும் அரை மணி நேரத்தில் உணவளிப்பதாக ஜுஜாராம் சொல்கிறார். "அவை கோடையில் உருளைக்கிழங்கு, பிஸ்கட், சுரைக்காய், கேரட், ரொட்டி மற்றும் சுண்டல் போன்றவற்றை விரும்புகின்றன," என்று அவர் கூறுகிறார்.
அவற்றுக்கு மற்றவர்கள் உணவளிக்க முயன்றால் ஆக்ரோஷமான முகச்சுளிப்பை எதிர்கொள்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். "அவை வெளியாட்களைக் கண்டு அஞ்சுகின்றன – அவற்றின் மீது மக்கள் பெரும்பாலும் கற்களை எறிந்து காயப்படுத்துகின்றனர். மக்கள் அவற்றை காயப்படுத்துவது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள்?" என்று அவர் கேட்கிறார்.









