ஷஷி ருபேஜாவுக்கு உறுதியாக தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு தெரிந்து விட்டது. அவர் பூத்தையல் போடுவதை பார்த்துக் கொண்டிருந்த கணவரை அவர் கவனித்து விட்டார். “ஃபுல்காரி வேலை செய்வதை பார்த்து நான் கடினமாக வேலை பார்ப்பதாக அவர் நினைத்திருக்க வேண்டும்,” என்கிறார் ஷஷி சந்தோஷமான நினைவை குறிப்பிட்டபடி. அவர் கைகளில் பாதி முடிந்த ஃபுல்காரி இருந்தது.
பஞ்சாபின் குளிர்கால நாள் அது. தோழி பீம்லாவுடன் ஷஷி இளம் வெயிலில் அமர்ந்திருக்கிறார். தங்களின் அன்றாட வாழ்க்கைகள் பற்றி பேசிக் கொண்டிருக்க, அவர்களது கைகள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் கவனம், துணியில் வண்ண நூல்களைக் கொண்டு ஃபுல்காரி வடிவங்களை தைத்துக் கொண்டிருந்த ஊசிகளில் இருந்து சிதறவில்லை.
“ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒருவர் ஃபுல்காரி துணி தைப்பவராக இருந்த காலம் ஒன்று இருந்தது,” என்கிறார் 56 வயது நிறைந்த அவர். பாடியாலா நகரத்தில் வசிக்கும் அவர், சிவப்பு துப்பட்டாவில் போட்டுக் கொண்டிருக்கும் பூத்தையலில் இன்னொரு தையலை கவனமாக தைக்கிறார்.
ஃபுல்காரி என்பது துப்பட்டா, சல்வார் கமீஸ் மற்றும் புடவை போன்ற துணிகளில் பூக்கள் தைக்கப்படும் பூத்தையல் பாணி ஆகும். மரக் கட்டைகளை துணியில் வைத்து முதலில் வடிவங்கள், குறிக்கப்படும். அந்த அடையாளங்களை சுற்றி கலைஞர்கள் பின்னர், பாடியாலா நகரிலிருந்து பெறப்பட்ட வண்ணப் பட்டு மற்றும் பருத்தி நூல்கள் கொண்டு பூத்தையல் போடுவார்கள்.










