“வாக்குச்சீட்டு சரியாக இருந்தது. எந்திரத்தில் பொத்தானை அழுத்தியதும் யாருக்கு வாக்கு விழுகிறது என்பது தெரிவதில்லை!”
வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டுகளைதான் விரும்புவதாக கல்முதீன் அன்சாரி கூறுகிறார். உள்ளுர் கால்நடைச் சந்தையில் ஜார்க்கண்டின் கொளுத்தும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ள ஒரு துண்டை தலையில் சுற்றி அணிந்திருக்கும் பலாமுவின் கும்னி கிராமத்தை சேர்ந்த 52 வயதுக்காரர் அவர். மேல்துண்டு அல்லது தலைப்பாகை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மெல்லிய பருத்தி துணி. கம்சா என்பது தேவைக்கேற்ப தைத்துக் கொள்ளக் கூடிய துணி. 13 கிலோமீட்டர் நடந்து அவர் பதாரில் நடக்கும் இந்த வாரச்சந்தைக்கு தன் காளையை விற்க அவர் வந்திருக்கிறார். “எங்களுக்கு பணம் தேவை,” என்கிறார் அவர்.
கடந்த வருடம் (2023), அவரின் நெற்பயிர் முழுமையாக அழிந்தது. குறுவை பயிராக கடுகு விதைத்திருந்தார். ஆனால் மூன்றில் ஒரு பகுதி, பூச்சிகளால் அழிந்தது. “கிட்டத்தட்ட 2.5 குவிண்டால் அறுவடை செய்தோம். அது மொத்தமாக கடனை அடைக்க போய்விட்டது,” என்கிறார் கல்முதீன்.
விவசாயியான கல்முதீன் நான்கு பிகா (கிட்டத்தட்ட மூன்று ஏக்கர்) நிலத்தில் விவசாயம் பார்க்கிறார். உள்ளூர் வட்டிக்காரர்களிடம் பெற்ற கடன்களில் உழலுகிறார். “நிறைய பணம் வாங்கி விட்டார்கள்,” என்னும் அவர், 100 ரூபாய்க்கு ஐந்து ரூபாய் வட்டி என்பதால் பெருஞ்சிரமமாக இருப்பதாக கூறுகிறார். “16,000 ரூபாய் கடன் வாங்கினேன். 20,000 ரூபாயாகி விட்டது. அதில் 5,000 ரூபாய்தான் அடைத்திருக்கிறேன்.”
காளையை விற்பதுதான் அவருக்கிருக்கும் ஒரே வழி. “இதனால்தான் விவசாயிகள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். விவசாயம் செய்யும் நான் காளையை விற்க வேண்டியிருக்கிறது,” என்கிறார் 2023ம் ஆண்டில் மழை வரும் என நம்பி காத்திருந்த கல்முதீன்.












