மத்திய இந்தியாவில் உள்ள கர்கோன் மாநகரில், அது ஒரு வெயிலடிக்கும் ஏப்ரல் மாதப் பகல் பொழுது. மக்களின் அதிகாலை சலசலப்பைக் குலைத்தபடி வருகிறது நெருங்கி வரும் புல்டோசரின் உறுமல் சத்தம். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அந்த நகரின் பரபரப்பான, கூட்டம் மிகுந்த சாந்தினி சௌக் பகுதிக்குள் நுழைந்துகொண்டிருக்கின்றன அந்த புல்டோசர்கள். பதற்றமடைந்த மக்கள், தங்கள் வீடுகளில் இருந்தும், சிறிய கடைகளில் இருந்தும் வெளியே ஓடிவருகிறார்கள்.
சில நிமிடங்களில், ஒரு புல்டோசரின் முரட்டுத்தனமான இரும்புக் கரங்கள் தனது கடையையும், அதற்குள் இருந்த விலைமதிப்புள்ள பொருட்களையும் இடித்து நாசமாக்குவதை பீதியில் பார்க்கிறார் 35 வயது வாசிம் அகமது. “நான் சம்பாதித்த பணத்தையெல்லாம் இந்த மளிகைக் கடையில்தான் போட்டேன்,” என்றார் அவர்.
மாநில அரசின் உத்தரவின் பேரில், இந்த புல்டோசர்கள் ஏப்ரல் 11, 2022 அன்று இவரது சின்னஞ்சிறு கடையை மட்டுமல்ல, முஸ்லிம்கள் அதிகம் வாழும் கர்கோன் பகுதியில் உள்ள 50 கடைகள், வீடுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கின. ராம நவமி விழாவின்போது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்ட “கலவரக்காரர்கள்” மீது மத்தியப் பிரதேச மாநில அரசு மேற்கொண்ட ‘பழிவாங்கும் நீதி’ நடவடிக்கையே இந்த தனியார் சொத்தழிப்பு நடவடிக்கை.
ஆனால், வாசிம் கல் எறிந்தார் என்று அரசாங்கம் வாதிட முடியாது. ஏனென்றால், அவர் இரண்டு கைகளும் இல்லாதவர். கல் எடுத்து அடிப்பதெல்லாம் இருக்கட்டும். அவரால் அடுத்தவர் உதவியில்லாமல் தேநீர் கூட அருந்த முடியாது.
“அந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என்கிறார் வாசிம்.
2005-ம் ஆண்டு நடந்த விபத்தில் இரண்டு கைகளையும் இழப்பதற்கு முன்னால் அவர் பெயிண்டராக இருந்தார். “ஒரு நாள் வேலையில் இருந்தபோது என் உடலில் மின்சாரம் பாய்ந்தது. என் உயிரைக் காப்பதற்காக டாக்டர்கள் எனது இரண்டு கைகளையும் துண்டித்துவிட்டனர். அந்தப் பெரும் இழப்பில் இருந்து மீண்டு வர (கடை மூலமாக) ஒரு வழியைக் கண்டுபிடித்தேன்,” என்று கூறும் அவரது குரலில், அந்த துன்பத்தில் வருந்தி காலத்தை வீணாக்கவில்லை என்ற பெருமை தெரிகிறது.








