2023ம் ஆண்டின் ஜூன் மாத மத்தியில் அவுரங்காபாத்தின் டிவிஷினல் கமிஷனரின் (DC) அலுவலகத்துக்கு முன் தர்ணா அமர்ந்தார் அஜிம் ஷேக்.
கொளுத்தும் வெயிலிலும் 26 வயது ஆகும் அவர், நீரை தவிர எதையும் உட்கொள்ளவில்லை. உண்ணாவிரதம் முடிந்தபோது, அவர் பலவீனமாக மயக்கத்தில் இருந்தார். நேராக நடக்கக்கூட முடியவில்லை.
அவரின் கோரிக்கை என்ன? காவல்துறையில் ஒரு புகார் அளிக்க வேண்டும். ஆனால் அவரின் கிராமத்துக்கருகே இருக்கும் ஜால்னா மாவட்ட காவல் நிலையத்தில் அவரது புகார் பதிவு செய்யப்படவில்லை.
மே 19, 2023 அன்று மராத்தா சமூகத்தை சேர்ந்த உள்ளூர் சொனாவனே குடும்பத்தின் உறுப்பினர்கள், அஜிமின் வீட்டுக்குள் இரவு 11 மணிக்கு புகுந்து குடும்பத்தினரை கற்களாலும் தடிகளாலும் தாக்கினர். அவரின் சகோதரருக்கும் பெற்றோருக்கும் காயங்கள். “முதிய வயதில் இருக்கும் என் தாயை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது. அது கொடூரமான தாக்குதல்,” என்கிறார் அவர் பாரியிடம். “அவர்கள் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட நகையையும் ரொக்கத்தையும் கூட திருடிச் சென்றனர்.”
அக்கும்பலில் இருந்ததாக அஜிம் சொன்ன நிதின் சொனாவனேவிடம் கட்டுரையாளர் பேச முயற்சித்தபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்து, “இச்சம்பவம் பற்றி எதுவும் எனக்கு தெரியாது,” எனக் கூறியிருக்கிறார்.
அஜிமின் வீடு, எட்டு ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கிறது. மத்திய மகாராஷ்டிராவின் பொகார்தான் தாலுகாவிலுள்ள பலேஷ்கடா முர்தாத் கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அஜிமின் வீடு இருக்கிறது.
“அது தனியாக, இரவில் அமைதியாக இருக்கும்,” என்கிறார் அவர். “எங்களால் உதவிக்கு கூட யாரையும அழைக்க முடியாது.”







