மாயா தாமி 30 கிலோ எரிவாயு சிலிண்டரை முதுகில் சுமந்து மூன்று கிலோ மீட்டர் நடந்து, 200 படிக்கட்டுகள் ஏறி அன்றைய நாளின் முதல் வாடிக்கையாளருக்கு வழங்குகிறார்.
32 வயதாகும் அவர், தூரத்தில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி, "இப்போது நான் அந்த மலைக்குன்றுக்கு இன்னொரு சிலிண்டரை கொண்டுபோக வேண்டும்" என்கிறார். கூலியாக ரூ.80 வாங்கிக்கொண்டு உடனே அடுத்த இடத்திற்கு புறப்படுகிறார். அடுத்த ஆறு மணி நேரத்திற்கு, அவர் எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு போய் டெலிவரி கொடுப்பார்.
"சுமை அதிகமாக இருக்கும்போது, ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, நாங்கள் ஆண்கள் அல்ல என்பதால் மக்கள் பெரும்பாலும் பேரம் பேசுகிறார்கள்" என்கிறார் மாயா. ஒரு பெண் சுமை தூக்கி ரூ.80 சம்பாதிக்கிறார், அதே தூரத்திற்கு ஒரு ஆண் ரூ.100 பெறுகிறார்.
மேற்கு வங்கத்தின் பரபரப்பான நகரமான டார்ஜிலிங், கிழக்கு இமயமலையில் 2,042 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதன் மலைப்பாங்கான நிலப்பரப்பு சாலைவழி போக்குவரத்திற்கு தடையாக உள்ளது. அங்கு குடியிருப்பவர்கள் காய்கறிகள், தண்ணீர், சமையல் சிலிண்டர்கள், போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், வீட்டிற்கு தேவையான பிற பொருட்களைப் கொண்டு வர சுமை தூக்கிகளையே நம்பியுள்ளனர். வாகனங்களால் அத்தகைய சரிவுகளில் ஏற முடியாது. ஒன்று, அவர்களே எடுத்துச் செல்ல வேண்டும், அல்லது எரிவாயு நிறுவனம் மூலமோ, கடைகளில் இருந்து சுமை தூக்கிகள் மூலமோ அனுப்ப வேண்டும்.











