“என் குடும்பம்தான் என்னை ஏற்றுக்கொள்ளத் தயங்கியது. மீனவர்கள் அல்ல. படகு உரிமையாளர்கள் எனக்கு கைராசி இருப்பதாகப் பார்க்கிறார்கள். அவர்கள் என்னை புறக்கணிக்கவில்லை. நான் யார் என்று அவர்கள் கவலைப்படவில்லை. அவர்களது மீனை நான் விற்கவேண்டும் என்று மட்டும்தான் நினைக்கிறார்கள்.”
கடலூர் பழைய நகர் துறைமுகத்தில் மீன் ஏலம் விடும் 30 பெண்களில் ஒருவரான மனீஷாவுக்கு 37 வயது. “என்னால் சத்தமாக விற்க முடிவதால், அதிக விலைகளையும் பெற முடிகிறது. பலரும் என்னிடமிருந்து மீன் வாங்க விரும்புகின்றனர்,” என்னும் அவரின் குரல், பிற வியாபாரிகளின் குரல்களை தாண்டி உயர்ந்து வாடிக்கையாளர்களை அழைக்கிறது.
பாலினம் உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு முன்பிருந்தே மீன் ஏலம் விடுவது, கருவாடு விற்பது ஆகிய வேலைகளை செய்து வருகிறார் அவர். வாழ்வாதாரத்துக்கான இந்த வேலைக்காக அவர் தினமும் படகு உரிமையாளர்கள், மீனவர்களோடு பழக வேண்டியிருக்கிறது. “அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மற்றவர்களைவிட நான் நன்றாக ஏலம் விடுவேன்.”
படகு முதலாளிகளின் தார்மீக ஆதரவு இல்லாமல் 2012-ம் ஆண்டு அந்த அறுவை சிகிச்சையை அவர் செய்துகொண்டிருக்க முடியாது. அவர்களில் ஒருவரை, தனது நெருங்கிய நண்பராக, நம்பிக்கைக்கு உரியவராக ஆக்கிக்கொண்ட மனீஷா அறுவை சிகிச்சைக்குப் பிறகு உள்ளூர் கோவில் ஒன்றில் அவரையே, திருமணமும் செய்துகொண்டார்.
















