“இன்று டிவியும் செல்பேசிகளும் இருக்கின்றன. அவற்றை கொண்டு மக்கள் பொழுது போக்கிக் கொள்கின்றனர்,” என்கிறார் முஸ்லிம் கலீஃபா தோலக் கருவியின் வளையங்களை இறுக்கிக் கொண்டே.

12ம் நூற்றாண்டை சேர்ந்த அல்ஹா மற்றும் உதால் ஆகிய வீரர்கள் பற்றிய கதையை முஸ்லிம் கலீஃபா பாடுகிறார். பிகாரின் சமஸ்டிப்பூரை சேர்ந்த தோலக் இசைஞரும் நாட்டுப்புற பாடகருமான அவர், ஐம்பது ஆண்டுகளாக இதை செய்து வருகிறார். அவரின் குரல் கணீரென, பல காலமாக பாடி வரும் ஒருவரின் குரலை ஒத்ததாக இருக்கிறது.

நெல், கோதுமை, சோளம் போன்றவற்றை அறுவடை செய்யும் ஏப்ரல்-மே மாதங்களில் அவர் தோலக்குடன் வயல்களுக்கு சென்று விவசாயிகளுக்காக பாடுவார். இரண்டு மணி நேரம் பாடினால், பதிலுக்கு புதிதாக அறுவடை செய்யப்பட்டிருக்கும் தானியத்தில் 10 கிலோ கொடுக்கப்படும். “மூன்று பயிர்களை அறுவடை செய்ய ஒரு மாதம் ஆகும். எனவே முழு மாதத்தையும் நான் வயல்களில்தான் கழிப்பேன்,” என்கிறார் அவர். திருமண காலங்களில் அவருக்கான தேவை அதிகரித்து, மூன்று மாதங்களில் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை வருமானம் கிட்டும்.

52 அத்தியாயங்களை கொண்ட விரிவான பாடலை முழுமையாக பாடி முடிக்க பல நாட்களாகும். அதை கேட்க பார்வையாளர்கள் தொடர்ந்து அமைதியாக கவனிக்க வேண்டும். ”ஆனால் இன்று யார் அதிக நேரம் கவனிப்பார்?” எனக் கேட்கிறார் கலீஃபா. காலிஸ்பூர் கிராமத்தை சேர்ந்த 60 வயது கலீஃபாவின் வருமானம் சரிந்து வருகிறது. அவரின் சொந்த குழந்தைகள் கூட அல்ஹா-உதாலில் ஆர்வம் கொள்வதில்லை என புலம்புகிறார்.

இஸ்லாமியரான கலீஃபா, பட்டியல் சமூகமாக வரையறுக்கப்பட்டிருக்கும் நாட் சமூகத்தை சேர்ந்தவர். மாநிலத்தில் தற்போது இருக்கும் நாட் சமூகத்தினரின் எண்ணிக்கை 58,819. “ஆனால் 10-20 கிராமங்களில் (அல்ஹா-உதால் பாடும்) ஒன்றிரண்டு பேரை மட்டும்தான் நீங்கள் பார்க்க முடியும்,” என்கிறார் மே 2023-ல் நம்முடன் கலீஃபா பேசுகையில்.

Muslim Khalifa (left) sings the tales of Alha-Udal for the farming community in Samastipur district. The folklore (right) about 12th century warriors has 52 episodes and take several days to narrate completely
PHOTO • Umesh Kumar Ray
Muslim Khalifa (left) sings the tales of Alha-Udal for the farming community in Samastipur district. The folklore (right) about 12th century warriors has 52 episodes and take several days to narrate completely
PHOTO • Umesh Kumar Ray

முஸ்லிம் கலீஃபா (இடது) சமஸ்டிப்பூர் மாவட்ட விவசாயிகளுக்காக அல்ஹா-உதால் பாடுகிறார். 12ம் நூற்றாண்டு வீரர்கள் பற்றிய அந்த நாட்டுப்புற பாடல் (வலது) 52 அத்தியாயங்களை கொண்டது. பாடி முடிக்க பல நாட்கள் ஆகும்

The 60-year-old Khalifa at his home in Khalispur village
PHOTO • Umesh Kumar Ray

60 வயது கலீஃபா, காலிஸ்பூர் கிராமத்திலுள்ள தன் வீட்டில்

காலிஸ்பூரிலுள்ள குடிசை வீட்டில் ஒரு தோலக் கருவி சுவரில் தொங்குகிறது. மர ஸ்டூல் ஒன்றும் பிற உடைமைகளும் அங்கிருக்கின்றன. ஆறு தலைமுறைகளாக கலீஃபாவின் முன்னோர்கள் இதே குடிசையில்தான் வாழ்ந்திருக்கின்றனர். அவர், தன் மனைவி மொமினாவுடன் இங்கு வசித்து வருகிறார். அல்ஹா-உதால் பாடலை பாடும்படி நாம் கேட்டதற்கு அடுத்த நாள் காலை வரும்படி சொல்கிறார். ஏனென்றால் மாலை நேரங்கள் பாட உகந்ததல்ல என்றார். அடுத்த நாள், மீசைக்கு மையடித்துவிட்டு ஸ்டூலில் தோலக் கருவியுடன் அமருகிறார்.

தோலக்கின் இரு பக்கங்களிலும் உள்ள கயிறை இறுக்க அவருக்கு ஐந்து நிமிடங்கள் ஆகிறது. அடுத்து அவர், கயிறில் தொங்கும் பித்தளை வளையங்களை நகர்த்தி, வாசித்து சத்தத்தை பரிசோதிக்கிறார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு, உச்சஸ்தாயியில் அல்ஹா-உதால் அவர் பாட நாங்கள் கேட்டோம். பெத்வா ஆறு, போர் மற்றும் மஹோபாவில் இரு சகோதரர்களின் தீரம் ஆகியவற்றை பாடல் சொல்கிறது. ஒரு காலத்தில் அவர் அல்ஹா-உதால் பாட 10 கோஸ் (கிட்டத்தட்ட 31 கிலோமீட்டர்) தூரம் வரை பயணித்திருப்பதாக சொல்கிறார்.

பாடி முடித்த பிறகு, தோலக்கின் தோல் இலகுவாகும் வகையில் பித்தளை வளையங்களை இறக்கி விட்டு மீண்டும் சுவரில் கருவியை மாட்டுகிறார். “தோலை நாம் இலகுவாக்கவில்லை எனில், சேதமாகி விடும். மழையோ மின்னலோ இருந்தால், தோலக் வெடித்து விடும்,” என்கிறார் அவர். “ஏன் அப்படி நடக்கிறது என எனக்கு தெரியாது.”

தோலக்கின் சட்டகம் மரத்தால் செய்யப்பட்டது. 40 வருட பழமையானது. கருவியின் வடிவம் அப்படியே இருக்கிறது. கயிறுகளும் தோலும் மட்டும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு மாற்றப்படும். “தோலக்கின் சட்டகம் சரியாக இருக்கிறது. பூச்சிகள் வராமலிருக்க கடுகு எண்ணெய் தடவுவோம்.”

கடந்த 20-30 வருடங்கள் அல்ஹா-உதால் பாடகர்களின் பொற்காலமென அவர் கருதுகிறார். அந்தக் காலக்கட்டத்தில் பிதேசியா நாச் நிகழ்ச்சிகளில் பாட தேவை இருந்தது. “நிலவுரிமையாளர்கள், அவர்களின் இடங்களுக்கு எங்களை அழைத்து பாட வைத்து கேட்பார்கள்.”

52 அத்தியாயங்களை கொண்ட விரிவான பாடலை முழுமையாக பாடி முடிக்க பல நாட்களாகும். ‘அவ்வளவு நேரம் இன்று யார் கவனிப்பார்கள்?’ எனக் கேட்கிறார் கலீஃபா

காணொளி: முஸ்லிம் கலீஃபா அல்ஹா-உதாலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்

காலஞ்சென்ற போஜ்பூரி நாடக ஆசிரியரான பிகாரி தாகூர் எழுதிய நாடகம், பிதேசியா. வேலை தேடி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்த கதையை கொண்ட போஜ்பூரின் நாட்டுப்புற பாரம்பரியங்களில் அதுவும் ஒன்று. இக்கதைகள் பாடலாகவும் நடனமாகவும் நிகழ்த்தப்படும்.

அல்ஹா-உதால் பாடும் அவரைப் போன்ற பாடகர்களை, நிலவுடமையாளர்கள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என கலீஃபா நினைவுகூருகிறார். “வருடத்தில் எங்களுக்கென நேரம் கிடைக்காத அளவுக்கு எங்களின் தேவை இருந்த காலக்கட்டம் ஒன்று இருந்தது. என் தொண்டை வலிக்குமளவுக்கு நான் பாடியிருக்கிறேன். பல முறை, நான் (நிலவுரிமையாளர்களுக்கு) மறுப்பு கூட தெரிவித்திருக்கிறேன்.”

*****

அல்ஹா-உதால் கதை வடகிழக்கு இந்தியாவில் பிரபலம். அல்ஹா மற்றும் உதால் ஆகிய சகோதரர்கள், இன்றைய உத்தரப்பிரதேசத்தின் மஹோபா பகுதியை 12ம் நூற்றாண்டில் ஆண்ட சந்தெல் அரசன் பர்மலிடம் தளபதிகளாக பணியாற்றியவர்கள் எனக் குறிப்பிடுகிறது கரினே ஸ்கோமரின் The World of Music பத்திரிகையின் ஒரு கட்டுரை. மஹோபாவை காக்கும் பணியில் இருந்த அல்ஹா-உதால், வீரம் நிறைந்த திறன் படைத்த வீரர்களாக அறியப்படுபவர்கள். மஹோபா மற்றும் தில்லி ஆகிய அரசுகளுக்கு இடையான போருடன் அல்ஹா-உதால் கதை முடிகிறது.

கலீஃபா, தன் பூர்விகம் மஹோபா என்கிறார். அவருடைய முன்னோர்கள் மஹோபா பகுதியில் வசித்திருந்து அக்பரின் ஆட்சியின் போது கிளம்பி பிகாரை சென்றடைந்தார்கள் என்கிறார். மேலும் அவரது முன்னோர்கள் ரஜபுத்திர சாதியை சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். பிகாரை அடைந்ததும் அவரின் முன்னோர்கள், அல்ஹா-உதால் பாடும் குடும்ப பாரம்பரியத்தை பிழைப்புக்காக செய்யத் தொடங்கியிருக்கின்றனர். பல தலைமுறைகளுக்கு அக்கலை கடத்தப்பட்டிருக்கிறது.

கலீஃபாவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அவரின் தந்தை, சிராஜுல் கலீஃபா மறைந்தார். தாய்தான் அவரை வளர்த்தார். “வளருகையில், அல்ஹா-உதால் பாடும் எவரைக் கண்டாலும் நான் பாடல் கேட்பேன்,” என நினைவுகூருகிறார். “ஒருமுறை கேட்டாலே எனக்கு மனப்பாடம் ஆகிவிடும். சரஸ்வதியின் வரம் அது. எனக்கு இந்த (அல்ஹா-உதால்) பாடல் மிகவும் பிடித்துப் போனது. வேறு எந்த வேலையிலும் நாட்டம் செல்லவில்லை.”

Before his performance, he takes five minutes to tighten the ropes on his dholak and drums his fingers to check the sound and goes on to sing the Alha-Udal saga.
PHOTO • Umesh Kumar Ray
Before his performance, he takes five minutes to tighten the ropes on his dholak and drums his fingers to check the sound and goes on to sing the Alha-Udal saga.
PHOTO • Umesh Kumar Ray

நிகழ்ச்சிக்கு முன், தோலக்கின் கயிறை இறுக்க ஐந்து நிமிடங்களை எடுத்துக் கொள்கிறார். சத்தத்தை பரிசோதிக்க வாசித்து பார்த்து விட்டு, பிறகு அல்ஹா-உதால் பாடத் தொடங்குகிறார்

அச்சமயத்தில் ரஹ்மான் கலீஃபா என்கிற பாடகரை சந்தித்திருக்கிறார். அவரை குரு என குறிப்பிடுகிறார். “அவருடன் நான் நிகழ்ச்சிகளுக்கு செல்வதுண்டு. அவருக்கு பொருட்கள் தூக்கி செல்ல உதவுவேன்,” என்கிறார் அவர். சில நேரங்களில் ரஹ்மான் அவரிடம் தோலக் கொடுத்து பாடச் சொல்லியிருக்கிறார். “அல்ஹா-உதாலின் 10-20 அத்தியாயங்களை அவருடன் இருக்கும்போது நான் மனப்பாடம் செய்திருக்கிறேன்.”

படிப்பை முடிக்கவில்லை என்றாலும் கலீஃபாவுக்கு கல்வியில் நாட்டம் இல்லாமல் இல்லை. அரசுப் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அவரை ஒரு நாள் ஆசிரியர் அடித்ததால், அவர் பள்ளியிலிருந்து நின்று விட்டார்.

”எனக்கு அப்போது 7-8 வயது இருக்கும்,” என்கிறார் அவர். “சிறு வயதிலிருந்தே எனக்கு நல்ல குரல். எனவே பள்ளி ஆசிரியர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும். அடிக்கடி பாடச் சொல்லி கேட்பார்கள். ஒரு ஆசிரியர் ஒருமுறை, பிரார்த்தனை நேரத்தில் செய்த தவறுக்காக என்னை கடுமையாக அடித்துவிட்டார். எனக்கு கோபம் வந்து, நான் பள்ளிக்கு போவதை நிறுத்தி விட்டேன்.”

முஸ்லிம் கலீஃபாவின் கதையே தனிக்கதை. அல்ஹா-உதால் பாடல்கள் கொண்டு வந்த பரிசுகளுக்கு அவர் சந்தோஷப்பட்டாலும் சில வருத்தங்களையும் கொண்டிருக்கிறார். மூன்று குழந்தைகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்தது அவர் பாடி ஈட்டிய வருமானத்தில்தான். ஆனால் பாடியும் தோலக் வாசித்து மட்டும் குடும்பத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்கிறார். சில வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அழைக்கப்படும் அவர், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 300-500 ரூபாய் பெறுகிறார்.

அவரின் மகன் என்ன சொத்து சம்பாதித்திருக்கிறாய் என ஒருநாள் கேட்டதில் அவர் (கலீஃபா) மனமுடைந்து போயிருக்கிறார். அச்சம்பவத்தை நினைவுகூருகையில் அவரது முகத்தில் சோக நிழல் படிகிறது. “(என் மகனின்) கேள்வி என் ஓட்டத்தை நிறுத்தியது. அல்ஹா-உதால் பாடி நான் ஒன்றும் சேர்க்கவில்லை என்பதை உணர்ந்தேன். வீடு கட்ட ஒரு நிலம் கூட என்னால் வாங்க முடியவில்லை. எங்கு சென்றாலும் நல்ல மரியாதை கிடைக்கும். ஆனால் பணம் இருந்தால்தான் வயிறு நிறையும்.

“பல தலைமுறைகளாக என் குடும்பம் இங்கு வாழ்ந்திருக்கிறது. ஆனால் என் குடிசை இருக்கும் இந்த நிலம் அரசு நிலம். அரசாங்க குளத்தின் கரையில் அமைந்திருக்கிறது.”

After a performance, the musician loosens the leather ropes on his dholak and hangs it back on the wall.
PHOTO • Umesh Kumar Ray
After a performance, the musician loosens the leather ropes on his dholak and hangs it back on the wall
PHOTO • Umesh Kumar Ray

நிகழ்ச்சி முடிந்த பிறகு இசைஞர், தோலக்கின் தோல் கயிறுகளை இலகுவாக்கி சுவரில் மீண்டும் தொங்க விடுகிறார்

Khalifa and his 55-year-old wife, Momina, in front of their hut. Momina used to work as a tattoo artist in nearby villages
PHOTO • Umesh Kumar Ray

கலீஃபாவும் 55 வயது மனைவி மொமினாவும் அவர்களின் குடிசைக்கு வெளியே. அருகாமை கிராமங்களில் பச்சை குத்தும் வேலையை மொமினா செய்கிறார்

அவரின் மனைவியான ஐம்பத்து ஐந்து வயது மொமினா, ஒரு காலத்தில் பச்சை குத்தும் கலைஞராக இருந்தார். இப்போது ஆஸ்துமா நோயாலும் காது கேட்காமலும் அவதிப்படுகிறார். “தொடக்கத்தில், நாங்கள் கிராமம் கிராமமாக பயணித்திருக்கிறோம். நானே பச்சை குத்தியிருக்கிறேன். இப்போது என் உடலில் சக்தி இல்லை. என் கணவரால்தான் உயிருடன் இருக்கிறேன்,” என்கிறார் அவர்.

கலீஃபாவின் தனிப்பட்ட இழப்புகளை தாண்டி ஒரு பெருந்துயரம் அவருக்கு இருக்கிறது. இளம் தலைமுறைக்கு அல்ஹா-உதாலில் ஆர்வமில்லை என அவருக்கு புரிந்தாலும் அவரது குடும்பத்தில் அவருக்கு பிறகு அக்கலையை தொடர எவரும் இல்லை.

“என் தந்தையும் தாத்தாவும் அவர்களின் முன்னோர்களும் அல்ஹா-உதால் மட்டும்தான் பாடியிருக்கின்றனர். நான் இப்போது பாடுகிறேன். என் மகன் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. என் குழந்தைகளுக்கு இதில் ஆர்வம் இல்லை,” என புலம்புகிறார். “எங்களுக்கு அதில் ஈடுபாடு இருந்ததால் நாங்கள் பாடினோம். ஆனால் இளம் தலைமுறைக்கு அதை பற்றி கவலையே இல்லை.”

“முன்பெல்லாம், குர்தாக் பஜா - ஷெனாய், தபலா போல கருவிகள் உடன் வாசிக்கப்படும் முறை - திருமண நிகழ்ச்சிகளில் இருந்தன. ஆனால் பிறகு அங்க்ரெஜி பஜா வந்துவிட்டது. அதில் ட்ரம்கள், ட்ரம்பட்டுகள், ஷெனாய்கள், கீபோர்டுகள் போன்ற பல இசைக்கருவிகள் ஒன்றாக இசைக்கப்படுகின்றன. இன்னும் உள்ளூர் பாடகர்கள் அங்க்ரெஜி பஜா இசைக்கு பாடும் முறையும் இருக்கிறது. இப்போது டிஜேதான் எல்லா இடங்களிலும் இருக்கிறார். மற்ற இசைக்கருவிகள் இல்லாமல் போய்விட்டது,” என்கிறார் கலீஃபா.

“என் மரணத்துக்குப் பிறகு, இக்கலையின் மிச்சம் எதுவும் (என் குடும்பத்தில்) இருக்காது என்பது கவலையாக இருக்கிறது,” என்கிறார் அவர்.

இக்கட்டுரை, பிகாரில் விளிம்புநிலை சமூகத்தினருக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த தொழிற்சங்கவாதியின் நினைவில் வழங்கப்படும் மானிய ஆதரவில் எழுதப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

Umesh Kumar Ray

ଉମେଶ କୁମାର ରାଏ ହେଉଛନ୍ତି ଜଣେ ‘ପରୀ’ ଫେଲୋ (୨୦୨୨)। ସେ ବିହାରେ ରହୁଥିବା ଜଣେ ମୁକ୍ତବୃତ୍ତ ସାମ୍ବାଦିକ ଯେ କି ସମାଜର ଅବହେଳିତ ବର୍ଗଙ୍କ ଉପରେ ଲେଖାଲେଖି କରନ୍ତି।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Umesh Kumar Ray
Editor : Devesh
vairagidev@gmail.com

ଦେବେଶ ଜଣେ କବି, ସାମ୍ବାଦିକ, ଚଳଚ୍ଚିତ୍ର ନିର୍ମାତା ଓ ଅନୁବାଦକ। ସେ ପିପୁଲ୍ସ ଆର୍କାଇଭ୍‌ ଅଫ୍‌ ରୁରାଲ ଇଣ୍ଡିଆରେ ହିନ୍ଦୀ ଭାଷା ସମ୍ପାଦକ ଓ ହିନ୍ଦୀ ଅନୁବାଦ ସମ୍ପାଦକ।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Devesh
Editor : Shaoni Sarkar

ଶାଓନି ସରକାର କୋଲକାତାରେ ରହୁଥିବା ଜଣେ ମୃକ୍ତବୃତ୍ତିର ସାମ୍ବାଦିକ।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Shaoni Sarkar
Translator : Rajasangeethan

ରାଜସଙ୍ଗୀତନ୍‌ ଚେନ୍ନାଇରେ ରହୁଥିବା ଜଣେ ଲେଖକ। ସେ ଏକ ଅଗ୍ରଣୀ ତାମିଲ ସମାଚାର ଚାନେଲରେ ସାମ୍ବାଦିକ ଭାବେ କାର୍ଯ୍ୟରତ ଅଛନ୍ତି।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Rajasangeethan