எப்போதும் போல, திருமணம் நடக்க இடத்தை அமைக்க கடுமையாக உழைக்கிறார் அனில் நார்கண்டே. ஆனால் நடக்கவிருக்கும் திருப்பத்தை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
பந்தாராவின் அலெசூர் கிராமத்தில் இசை அளிப்பவராகவும் அலங்காரம் செய்பவராகவும் இருக்கும் 36 வயது விவசாயியான அவர், மஞ்சள் நிற ஷாமியானாவை அண்டை கிராமத்தில் நடக்கும் ஒரு திருமணத்துக்காக போட்டிருந்தார். பிளாஸ்டிக் பூக்களால் அலங்கரித்திருந்தார். விருந்தாளிகளுக்கான நாற்காலிகளை அனுப்பி வைத்தார். மணமகனுக்கும் மணமகளுக்கும் அடர்சிவப்பு நிற சோஃபா. இசைக்கான DJ கருவியும் வெளிச்சத்துக்கான விளக்குகளும் போட்டிருந்தார்.
மணமகனின் எளிய செங்கல் வீடு திருமணத்தை முன்னிட்டு அழகாகியிருந்தது. மணமகள் மத்தியப்பிரதேச சியோனியிலிருந்தூ சத்புரா மலைகளை கடந்து வருகிறார்.
அற்புதமான தொடக்கமாக தன் வியாபாரத்துக்கு இருக்குமென அந்த நிகழ்வை அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. திருமண நாளின் மாலையில் நிலைமை மாறியதாக சொல்கிறார் அனில். வேலைக்காக புலம்பெயர்ந்து சென்றிருந்த 27 வயது மணமகன், திருமணத்துக்கு முதல் நாள் ஓடி விட்டார்.
”பெற்றோரை தொலைபேசியில் அழைத்து, திருமணம் நிறுத்தப்படவில்லை எனில் விஷம் குடித்து விடப் போவதாக கூறினார்,” என நினைவுகூருகிரார் அனில். “வேறொரு பெண்ணை அவர் விரும்பியிருந்தார்.”
திருமணம் நிறுத்தப்படுவதற்கு முன், மணமகளும் திருமண கூட்டமும் வந்து விட்டார்கள். சந்தோஷமாக இருந்திருக்க வேண்டிய தருணம், மணமகனின் பெற்றோருக்கும் கிராமத்துக்கும் தர்மசங்கடமாக மாறியிருந்தது.
மனமுடைந்திருந்த மணமகனின் தந்தை, பணம் கொடுக்க முடியாது என அனிலிடம் கூறினார்.








