“நீர் மட்டம் உயர்ந்தால், எங்களின் உயிர் ஆடும்,” என்கிறார் ஹரேஸ்வர் தாஸ். அசாமின் பக்ரிபாரியில் வசிக்கும் அவர், புதிமரி ஆற்றில் உயரும் நீர் மட்டம் வீடுகளையும் பயிர்களையும் அழித்துவிடும் என்பதால் மழைக்காலங்களில் கிராமம் விழிப்போடு இருக்கும் என்கிறார்.
“மழை பெய்தால், உடைகளை மூட்டைக் கட்டி நாங்கள் தயாராக இருப்போம். கடந்த முறை வந்த வெள்ளம் கல் வீடுகளை கூட அழித்துவிட்டது. மூங்கில்களையும் களிமண்ணையும் கொண்ட புதிய சுவர்கள் மீண்டும் எழுப்பப்பட்டன,” என்கிறார் அவரின் மனைவி சாபித்ரி தாஸ்.
”(தற்போது பழுதாகிவிட்ட) டிவியை சாக்குப் பையில் போட்டு, கூரை மேல் வைத்தேன்,” என்கிறார் நிராதா தாஸ். முந்தைய தொலைக்காட்சியையும் பழைய வெள்ளங்கள் சேதப்படுத்தியதாக கூறுகிறார்.
ஜூன் 16, 2023 இரவு மழை கடுமையாக பெய்தது. கடந்த வருடம் கரையில் உடைந்து போன பகுதியை சரி செய்ய மணல் பைகளை வைத்திருந்தார்கள் மக்கள். இரண்டு நாட்கள் சென்றன. மழை ஓய்வதாக இல்லை. பக்ரிபாரியும் அருகாமை கிராமங்களான தெபர்காவோன், மடோய்கடா, நிஸ் கவுர்பஹா, கந்திகர், பிகாபரா மற்றும் லஹாபாரா ஆகியவை, பலவீனமான கரைப்பகுதி மீண்டும் உடையக்கூடும் என்கிற பயத்தில் காவலுக்கு இருந்தன.
நல்ல வேளையாக, நான்கு நாட்களில் மழை குறைந்து, நீரும் வடியத் தொடங்கியது.
“கரை உடைந்தால் நீர் குண்டு போல, வழியிலுள்ள எல்லாவற்றையும் அழித்துவிடும்,” என விளக்குகிறார் உள்ளூர் ஆசிரியரான ஹரேஸ்வர் தாஸ். ஓய்வு பெற்றுவிட்ட 85 வயதுக்காரரான அவர், கே.பி.தியுல்குச்சி உயர்நிலை பள்ளியில் அசாமிய மொழி கற்பித்துக் கொண்டிருந்தார்.
1965ம் ஆண்டு கட்டப்பட்ட கரை, நன்மைகளை விட தீமைகளையே அதிகம் செய்தது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். “பயிர் நிலங்களை மீட்டுருவாக்குவதற்கு பதிலாக அவை மூழ்கடிக்கவே செய்தன.”




















