‘விராட் கோலி’ பெயர் பிரபலம். இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரருக்கு இங்கு துங்க்ரா சோட்டாவில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஒரு குளிர்கால காலையில் 10 மணிக்கு பிறகு ஒரு டஜனுக்கும் மேலான இளையோர் விளையாட்டில் மூழ்கியிருக்கின்றனர். பசிய சோள வயல்களுக்கு நடுவே உள்ள சதுர நிலத்துண்டு கிரிக்கெட் மைதானம் என்பது பார்த்ததும் உங்களுக்கு தெரியாது. ஆனால் பன்ஸ்வாரா மாவட்டத்தின் இந்த கிராமத்தை சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு க்ரீஸ் போடுவது தொடங்கி பவுண்டரி போடுவது வரை அந்த மைதானத்தின் எல்லா பகுதிகளும் தெரியும்.
கிரிக்கெட் ரசிகர்களிடம் எந்த வீரரை பிடிக்கும் எனக் கேட்பதுதான் உரையாடலை தொடங்குவதற்கான சிறந்த வழி என அனைவருக்கும் தெரியும். இங்கு விராட் கோலி என்கிற பெயரை கொண்டு உரையாடல் தொடங்கப்பட்டாலும் ரோகித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், முகமது சிராஜ் என அடுத்தடுத்து பெயர்கள் சொல்லப்படுகின்றன.
இறுதியாக 18 வயது ஷிவ்ராம் லபானா சொல்கையில், “எனக்கு ஸ்மிருதி மந்தானா பிடிக்கும்,” என்கிறார். இடது கை ஆட்டக்காரரான அவர், இந்திய டி20 பெண்கள் கிரிக்கெட்டின் முன்னாள் தலைவராக இருந்தவர். நாட்டின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.
ஆனால் இடது கை ஆட்டக்காரராக அவரின் பெயர் மட்டும் மைதானத்தில் பேசப்படவில்லை.
பவுலர்களும் பேட்ஸ்மென்களாகவும் ஆக விரும்பும் சிறுவர்கள் பேச்சொலிக்கு நடுவே ஒற்றை சிறுமியாக அவர் மட்டும் தனித்து நிற்கிறார். ஒன்பது வயதாகும் ஹிடாஷி ராகுல் ஹர்கிஷி, வெள்ளை ஷூக்கள், முழங்கால் பேட்கள், தொடை மற்றும் தோளுக்கான பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றுடன் முழு கிரிக்கெட் உடை தரித்து நிற்கிறார்.










