அலி முகமது லோனே ”ஒன்றிய பட்ஜெட் அதிகாரிகளுக்கானது” என நம்புகிறார். மத்திய தர வர்க்கத்தினருக்கும் அரசு அதிகாரிகளுக்குமானது என்கிற பொருளில் அவர் சொல்கிறார். காஷ்மீரின் பராமுல்லா மாவட்டத்தில் சிறு பேக்கரி கடை வைத்திருக்கும் அவரை போன்றோருக்கு பட்ஜெட் எதையும் செய்யவில்லை என்ற பொருளையும் அவரின் கூற்று கொண்டிருக்கிறது.
”2024ம் ஆண்டில் 50 கிலோ மாவை 1,400 ரூபாய்க்கு வாங்கினேன். இப்போது அதன் விலை ரூ.2,200 ஆக இருக்கிறது,” என்கிறார் 52 வயதாகும் அவர் டேங்க்மார்க் ஒன்றியத்திலுள்ள மஹீன் கிராமத்தில். “விலைகளை குறைக்க உதவும் ஏதேனும் பட்ஜெட்டில் இருந்தால், எனக்கு ஆர்வம் எழலாம். இல்லையெனில், நான் சொன்னது போல, இந்த பட்ஜெட் அதிகாரிகளுக்கானதுதான்.”
ஸ்ரீநகரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மஹீன் கிராமம், டேங்க்மார்க் மற்றும் ட்ராங் ஆகிய குளிர்கால சுற்றுலா தலங்களுக்கு இடையில் அமைந்திருக்கிறது. 250 குடும்பங்கள் வசிக்கும் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். குதிரை வாடகைக்கு விடுதல், சறுக்குப் பலகை இழுத்தல், வழிகாட்டும் பணிகள் போன்ற வேலைகள் செய்கின்றனர். குளிர் கால நிலையால், மஹீன் பிரதானமாக சோளம் தயாரிக்கிறார்.






