ராகி களி சமைக்கப்படும் மணத்தை நாகராஜ் பந்தன் நினைவுகூருகிறார். சிறுவராக இருக்கும்போது தினசரி அதற்காக ஆர்வத்துடன் அவர் இருப்பார்.
ஐம்பது வருடங்கள் கழித்தும் அந்த ராகி களிக்கு ஈடு இணை இல்லை. “இன்று கிடைக்கும் ராகிக்கும் அந்த மணமோ ருசியோ இருப்பதில்லை,” என்னும் அவர், எப்போதேனும்தான் ராகி செய்யப்படுவதாகவும் கூறுகிறார்.
பட்டியல் பழங்குடியான இருளர் சமூகத்தை சேர்ந்தவர் நாகராஜ். நீலகிரியின் பொக்காபுரத்தில் வசிக்கிறார். அவரது பெற்றோர் விளைவித்த ராகி, சோளம், கம்பு மற்றும் சாமை போன்ற தானியங்களுக்கு மத்தியில்தான் அவர் வளர்ந்தார். குடும்பத்துக்கான கொஞ்சத்தை ஒதுக்கிக் கொண்டு மிச்சத்தை சந்தையில் விற்பார்கள்.
வளர்ந்த பிறகு நாகராஜ், நிலத்தை பராமரிக்கத் தொடங்கிய பிறகு, தந்தை காலத்தில் வந்த விளைச்சலை விட கணிசமாக குறைவதை கவனித்தார். “நாங்கள் உண்ணுமளவுக்குதான் ராகி விளைந்தது. சில நேரங்களில் அது கூட விளையவில்லை,” என்கிறார் அவர். எனினும் தொடர்ந்து ராகி வளர்க்கும் அவர், பீன்ஸ் மற்றும் கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை ஊடுபயிராக இரண்டு ஏக்கர் நிலத்தில் விதைக்கிறார்.
பிற விவசாயிகளும் இந்த மாற்றத்தை கவனித்திருக்கின்றனர். 10-12 சாக்குகள் வரை தந்தைக்கு ராகி கிடைத்ததாக மாரி சொல்கிறார். ஆனால் தற்போது இரண்டு ஏக்கர் நிலத்திலிருந்து வெறும் 2-3 சாக்குகள்தான் கிடைப்பதாக 45 வயது விவசாயி சொல்கிறார்.
நாகராஜ் மற்றும் மாரி ஆகியோரின் அனுபவங்கள் அதிகாரப்பூர்வ தரவுகளிலும் பிரதிபலிக்கிறது. நீலகிரியில் 1948-49ல் 1,369 ஹெக்டேர் நிலத்தில் விளைவிக்கப்பட்ட ராகி, 1998-99-ல் வெறும் 86 ஹெக்டேராக சுருங்கியிருக்கிறது.
கடந்த கணக்கெடுப்பின்படி (2022) தானிய விளைச்சல், மாவட்டத்தின் ஒரு ஹெக்டேரில் மட்டும்தான் இருக்கிறது.











