கணேஷ் ஷிண்டேவின் விலைமதிப்பற்ற உடைமையான சிவப்பு ட்ராக்ட்ரை 2022ம் ஆண்டில் அவர் வாங்கினார். மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்திலுள்ள காலி கிராமத்து பருத்தி விவசாயியான ஷிண்டே, தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்கிறார். ஆனால் சமீப வருடங்களாக கடும் சரிவை பருத்தி விலை சந்தித்து வரும் நிலையில், வருமானத்துக்கான பிற வழிகளையும் தேட வேண்டிய நிலை ஷிண்டேவுக்கு ஏற்பட்டது. எனவே அரசாங்க வங்கியில் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ட்ராக்டர் வாங்கினார்.
“என் வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கங்காகெத் டவுனுக்கு ட்ராக்டரை ஓட்டிச் சென்று சந்திப்பில் காத்திருப்பேன்,” என்கிறார் 44 வயதாகும் அவர். “கட்டுமானப் பணிக்கு மணலை எடுத்து செல்ல வாகனம் தேவைப்படுபவர்கள், என்னுடைய ட்ராக்டரை வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். வேலை கிடைக்கும் நாட்களில் இது நாளொன்றுக்கு 500-லிருந்து 800 ரூபாய் வரை பெற்றுத் தரும்.” கங்காகெடுக்கு காலையில் கிளம்புவதற்கு முன், விவசாயத்தை சில மணி நேரங்களேனும் பார்த்துக் கொள்கிறார்.
ஒன்றிய பட்ஜெட் பற்றிய செய்திகளை அவர் கவனித்திருக்கிறார். பட்ஜெட் மீதுள்ள நம்பிக்கை காரணம் அல்ல. ட்ராக்டருக்கு வாடிக்கையாளர் கிடைக்க நிறைய நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால் அந்த செய்திகளை அவர் கவனித்திருக்கிறார். “ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான ஒதுக்கீடு அப்படியேதான் இருக்கிறது,” என்கிறார். காலி கிராமத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஷிண்டே, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால் பெரிய மாற்றமொன்றும் களத்தில் நேரவில்லை என்கிறார். “வேலைவாய்ப்பு உருவாக்க பணம் பெரியளவில் பயன்படுத்தப்படவில்லை. வெறுமனே திட்டம் காகிதத்தில் மட்டும்தான் இருக்கிறது.”



