அந்தேரி ரயிலின் அமைதியான தன்மை, அதற்குள் நுழையும் பயணிகளில் சத்தங்களுக்கு முரணாக இருக்கிறது. கதவின் பிடி, கை என கைக்கு எது கிடைக்கிறதே அதைப் பிடித்து அவர்கள் ஏறுகின்றனர். ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு தடுமாறிக் கொண்டு காலி சீட்டுக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். கேட்டுப் பார்க்கின்றனர். வாதிடுகின்றனர். சமயங்களில் ஏற்கனவே அமர்ந்திருப்பவர்களை தள்ளவும் செய்கின்றனர்.
பயணிகளில் 31 வயது கிஷன் ஜோகியும் நீல நிற ராஜஸ்தானி பாவாடை சட்டை அணிந்திருக்கும் 10 வயது பார்தியும் இருக்கின்றனர். மேற்கு நகர்ப்புற ரயில்களில் தந்தையும் மகளும் ஏறிய அந்த ஏழு மணி ரயில் அந்த மாலை நேரத்தில் அவர்கள் ஏறிய ஐந்தாவது ரயில்.
ரயில் வேகமெடுத்த சற்று நேரத்தில் பயணிகள் அவரவர் இடங்களை எடுத்துக் கொள்கின்றனர். கிஷனின் சாரங்கி இசை காற்றை நிறைக்கிறது.
“தேரி ஆங்கே ஃபூல் புலாயா.. பாதே ஹை ஃபூல் புலாயா…”
மூன்று கம்பிகள் மீது வில் வைத்து வாசிக்கப்படும் அக்கருவி மென்மையான செறிவான இசையை எழுப்புகிறது. கருவியின் மறுமுனையில் சிறு சத்த அறை, அவரது நெஞ்சுக்கும் இடது கைக்கும் இடையில் இருக்கிறது. அவர் வாசிக்கும் 2022ம் ஆண்டு பாலிவுட் படத்தின் பிரபலமான பாடலான ஃபூல் புலாயா இசை மெய்மறக்கச் செய்கிறது.
சில பயணிகள் வெறுமனே அமர்ந்திருப்பதற்கு பதிலாக, அருமையான இசையை கேட்க திரும்புகிறார்கள். சிலர் தங்களது செல்பேசிகளை எடுத்து அதை பதிவு செய்கிறார்கள். சிலர் புன்னகைக்கிறார்கள். பலர் மீண்டும் செல்பேசிகளுக்கு திரும்பி, காதில் ஹெட் செட்களை மாட்டிக் கொள்கின்றனர். ரயில்பெட்டிக்குள் நடந்து செல்லும் பார்தி அவர்களிடம் காசு வேண்டுகிறார்.
சாரங்கியை எங்களின் கைகளில் கொடுத்து சென்றுவிட்டார். பள்ளிக்கு செல்லக்கூட நான் யோசித்ததில்லை. தொடர்ந்து இசைத்துக் கொண்டிருக்கிறேன்
“மக்கள் என்னை பார்த்து வாசிக்க அனுமதித்திருக்கிறார்கள்,” என்கிறார் கிஷன் சற்று துயரமாக. 10-15 வருடங்களுக்கு முன் வேறாக இருந்த நிலைமையை அவர் நினைவுகூருகிறார். “மதிப்பு அதிகமாக இருந்தது. இப்போது அவர்கள் செல்பேசிகளை பார்த்து, ஹெட் செட்டுகளை மாட்டிக் கொள்கின்றனர். என் இசையில் இப்போதெல்லாம் ஆர்வம் இருப்பதில்லை.” சற்று தாமதித்து அவர் இன்னொரு பாடலை இசைக்கிறார்.
“நாட்டுப்புற இசை, பஜனைகள், ராஜஸ்தானி, குஜராத்தி இசை, இந்தி பாடல்கள் ஆகியவற்றை என்னால் இசைக்க முடியும். எந்தப் பாடலையும் கேளுங்கள். நான்கைந்து நாட்கள் அதைக் கேட்டு, என் மனதில் பதிய வைத்து சாரங்கியில் வாசித்து விடுவேன். ஒவ்வொரு இசைக்குறிப்பும் சரியாக இருக்க பலமுறை வாசித்து பயிற்சி பெறுவேன்,” என்கிறார் அவர் அடுத்த இசைக்காக சாரங்கியை தகவமைத்துக் கொண்டே.
மறுபக்கத்தில், சில ஆண்களும் பெண்களும் பார்திக்கு போடுவதற்காக நாணயத்தையோ பணத்தையோ எடுக்க பர்ஸ்களை தோண்டிக் கொண்டிருந்தனர். ரயிலின் சக்கரங்கள் போல வேகமாக அவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்த ஸ்டாப் வருவதற்குள் எல்லா பயணிகளையும் அணுகி விட வேண்டுமென நடந்து கொண்டிருந்தார்.
கிஷனின் நாள் வருமானம் மாறும். சில நேரங்களில் 400 ரூபாய் கிடைக்கும். சில சமயம் 1,000 ரூபாய் வரை கூட கிடைக்கும். மேற்கு மும்பையின் நல்லாசோபராவின் முதல் நகர்ப்புற ரயிலில் மாலை 5 மணிக்கு ஏறி ஆறு ரயில்களில் மாறி மாறி ஏறுவதில் இந்த வருமானம் அவருக்குக் கிட்டுகிறது. நிலையான ரயில் தடங்கள் என அவருக்கு எதுவும் கிடையாது. சர்ச்கேட்டுக்கும் விராருக்கும் இடையில் செல்லும் ரயில்களில் வரும் கூட்டத்தையும் அதிலுள்ள இடத்தையும் பொறுத்து மாறி மாறி ஏறுவார்.
“காலையில் வேலைக்கு செல்லும் மக்களால் ரயில்கள் நிரம்பியிருக்கும். யார் என் இசையைக் கேட்பார்?” என கிஷன் கேட்கிறார் மாலை நேர ரயில்களை தேர்வு செய்யும் காரணத்தை விளக்கி. “அவர்கள் வீட்டுக்கு திரும்பி செல்கையில் ஓரளவுக்கு ஓய்வாக இருப்பார்கள். சிலர் என்னை தள்ளுவார்கள். நான் அவர்களை பொருட்படுத்துவதில்லை. வேறு வழி என்ன இருக்கிறது?”
ராஜஸ்தானின் லுனியாபுரா கிராமத்திலிருந்து மும்பைக்கு முதன்முதலாக இடம்பெயர்ந்தபோது அவரின் தந்தை மிதாஜி ஜோகி உள்ளூர் ரயில்களிலும் சாலைகளிலும் சாரங்கி வாசித்தார். “பெற்றோர், தம்பி விஜயுடன் மும்பைக்கு வந்தபோது எனக்கு இரண்டு வயது இருக்கும்,” என நினைவுகூருகிறார். தந்தையுடன் செல்லத் தொடங்கியபோது கிஷனுக்கு வயது இப்போது பார்தி கொண்ட வயதைக் காட்டிலும் குறைவு.
ஜோகி சமூகத்தை (ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகம்) சேர்ந்த மிதாஜி, தன்னை கலைஞராக முன்னிறுத்தினார். கிராமத்தில் அவரது குடும்பம் பிழைப்புக்காக ராவணஹதா கருவியை வாசித்திருக்கின்றனர். நாட்டுப்புற இசையில் பயன்படுத்தப்படும் பழமையான வில் கொண்ட நரம்பிசைக் கருவி அது. கேட்க: உதய்ப்பூரில் ராவணனை காப்பாற்றுதல்
“பண்பாட்டு விழாவோ மத விழாவோ நடந்தால் என் தந்தையும் பிற கலைஞர்களும் இசை வாசிக்க அழைக்கப்படுவர்,” என்கிறார் கிஷன். “ஆனால் அது அரிதான விஷயம். நன்கொடைப் பணமும் எல்லா கலைஞர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.”
குறைவான வருமானத்தால் விவசாயத் தொழிலாளர்களாகவும் பணிபுரியும் கட்டாயத்தில் மிதாஜியும் அவரது மனைவி ஜம்னா தேவியும் இருந்தனர். “கிராமத்திலிருந்த வறுமைதான் மும்பைக்கு எங்களை தள்ளியது. வேறு தொழிலோ வேலையோ கிராமத்தில் இல்லை,” என்கிறார் அவர்.
மும்பையில் மிதாஜிக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே முதலில் ராவணஹதாவை அங்குமிங்கும் வாசித்தவர், பிறகு சாரங்கி இசைக்கத் தொடங்கினார். ராவணஹதாவில் அதிக நரம்புகள் உண்டு. ஆனால் ஸ்தாயி குறைவாகவே வரும்,” என்கிறார் கிஷன் ஓர் அனுபவம் வாய்ந்த கலைஞருக்கான நுட்பத்துடன். “ஆனால் சாரங்கியில் தீர்க்கமான சத்தம் வரும். நரம்புகள் குறைவாக இருக்கும். மக்களுக்கு பிடித்ததால் என் தந்தை சாரங்கி இசைக்கத் தொடங்கினார். இசையில் அது பல வகைகளை கொடுக்கவல்லது.”
கிஷனின் தாய் ஜம்னா தேவி, கணவருடனும் இரண்டு குழந்தைகளுடனும் ஒவ்வொரு இடமாக மாறிக் கொண்டிருந்தார். “இங்கு நாங்கள் வந்தபோது பிளாட்பாரம்தான் வீடாக இருந்தது,” என நினைவுகூருகிறார். ”கிடைத்த இடத்தில் தூங்கினோம்.” அவருக்கு எட்டு வயதானபோது,இரண்டு சகோதரர்கள் சுராஜ் மற்றும் கோபி பிறந்துவிட்டனர். “அந்த நேரத்தை நினைவுகூர கூட நான் விரும்பவில்லை,” என கிஷன் சங்கடமாக சொல்கிறார்.
தந்தையின் இசையை மட்டும்தான் நினைவில் கொள்ள அவர் விரும்புகிறார். தான் உருவாக்கிய மர சாரங்கியில் கிஷனும் சகோதரர்களும் வாசிக்கக் கற்றுக் கொடுத்தார். “தெருக்களும் ரயில்களும்தான் அவரின் மேடை. எல்லா இடத்திலும் அவர் வாசித்தார். யாரும் அவரை நிறுத்தியதில்லை. எங்கு வாசித்தாலும் பெரும் கூட்டத்தை அவர் ஈர்த்தார்,” என்கிறார் கிஷன், வந்து சேர்ந்த கூட்டத்தை விவரிக்க அகலமாக கைகளை திறந்து உற்சாகமாக காட்டி.
ஆனால் அதே போல் தெருக்கள் மகனுக்கு இரக்கம் காட்டவில்லை. ஜுஹு - சவுபட்டி கடற்கரையில் சுற்றுலாவாசிகளுக்கு வாசித்து காட்டியதற்கு காவலர்கள் 1,000 ரூபாய் அபராதம் விதித்த அவமானகரமான சம்பவம் அவ்ருக்கு நேர்ந்தது. அபராதம் கட்ட முடியாததால் லாக்கப்பில் ஒன்றிரண்டு மணி நேரங்கள் அடைத்து வைக்கப்பட்டார். “என்ன தவறு செய்தேன் என்று கூட எனக்கு தெரியவில்லை,” என்னும் கிஷன் அச்சம்பவத்துக்கு பிறகு ரயில்களில் வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அவரது இசை, தந்தையின் இசையை எட்ட முடியாது என்கிறார் அவர்.
”அப்பா இன்னும் நன்றாக, என்னைக் காட்டிலும் லயிப்போடு வாசிப்பார்,” என்கிறார் கிஷன். வாசிக்கும்போது மிதாஜி பாடக் கூட செய்வார். ஆனால் கிஷன் பாட வெட்கப்படுவார். “பிழைப்பை ஓட்ட நானும் என் சகோதரனும் வாசிக்கிறோம்.” கிஷனுக்கு 10 வயது இருக்கும்போது தந்தை இறந்துவிட்டார். அநேகமாக காசநோய் காரணமாக இருக்கலாம். “எங்களிடம் சாப்பாட்டுக்கு கூட வழியிருக்கவில்லை. மருத்துவமனைக்கு போகவெல்லாம் வாய்ப்பே இல்லை.”
இளம்வயதில் இருந்து கிஷன் பிழைப்புக்காக வருமானம் ஈட்டி வருகிறார். “வேறொருவரை பற்றி யோசிக்க எப்படி நேரம் கிடைக்கும்? அப்பா, சாரங்கியை எங்களின் கைகளில் கொடுத்து சென்றுவிட்டார். பள்ளிக்கு செல்லக்கூட நான் யோசித்ததில்லை. தொடர்ந்து இசைத்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர்.
தந்தையின் மரணத்துக்குப் பிறகு, விஜய் மற்றும் கோபி ஆகிய இரண்டு தம்பிகளும் தாயுடன் ராஜஸ்தானுக்கு சென்றுவிட்டனர். சூரஜ் நாசிக்குக்கு சென்றுவிட்டார். “மும்பையின் நெரிசல் அவர்களுக்கு பிடிக்கவில்லை. சார்ங்கி இசைக்கவும் அவர்களுக்கு விருப்பமில்லை,” என்கிறார் கிஷன். “சூரஜ் இன்னும் இசைக்கிறார். பிற இருவரும் பிழைப்புக்காக கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.”
“மும்பையில் ஏன் வாழ்கிறேனென எனக்கு தெரியவில்லை. ஆனால் எப்படியோ எனக்கான சிறு உலகத்தை இங்கு உருவாக்கிக் கொண்டேன்,” என்கிறார் கிஷன். அவரது உலகின் ஒரு பகுதியாக வடக்கு மும்பையின் மேற்கு நல்லாசோபராவில் மண் தரை போட்ட ஒரு கொட்டகையும் இருக்கிறது. 10 X 10 அளவிலான இடத்துக்கு சுவர்களாக ஆஸ்பஸ்டாஸும் கூரையாக தகரமும் இருக்கிறது.
அவரின் முதல் காதலும் 15 வருட மனைவியும் பார்தி மற்றும் யுவராஜ் ஆகியோரின் தாயுமான ரேகா நம்மை வரவேற்கிறார். இச்சிறு அறையில் நால்வரும் வசிக்கின்றனர். ஒரு சிறு தொலைக்காட்சியும் சமையலறையும் அவர்களின் உடைகளும் அங்கு இருக்கின்றன. பொக்கிஷமென அவர் வர்ணிக்கும் சாரங்கி, கான்கிரீட் தூணருகே இருக்கும் சுவரில் தொங்குகிறது.
ரேகாவுக்கு பிடித்தமான பாடலைக் கேட்டதும் கிஷன் உடனே “ஹர் துன் உஸ்கே நாம்” (அவளுக்கென ஒரு ராகம் இல்லை) என பதிலளிக்கிறார்.
“அவர் வாசிப்பது எனக்கு பிடிக்கும். ஆனால் அதை மட்டுமே சார்ந்து இருக்க முடியவில்லை,” என்கிறார் ரேகா. “அவருக்கென ஒரு நிலையான வேலை இருக்க வேண்டுமென விரும்புகிறேன். முதலில் நாங்கள் இருவர் மட்டும்தான் இருந்தோம். இப்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.”
கிஷனுடன் ரயில்களில் செல்லும் பார்தி, அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். நெலிமோரில் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து கொஞ்ச தூரத்தில்தான் பள்ளி இருக்கிறது. பள்ளி முடிந்ததும் தந்தையுடன் அவர் செல்கிறார். “என் தந்தை வாசிப்பது எனக்கு பிடிக்கும். ஆனால் அன்றாடம் அவருடன் செல்வது எனக்கு பிடிக்கவில்லை,” என்கிறார் அவர். ”விளையாடவும் நண்பர்களுடன் ஆடவும் எனக்கு பிடிக்கும்.”
“அவளை அழைத்து செல்ல தொடங்குகையில் அவளுக்கு ஐந்து வயது இருக்கும்,” என்கிறார் கிஷன். “என்ன செய்வது? அவளை உடன் அழைத்து செல்ல எனக்கும்தான் விருப்பமில்லை. ஆனால் நான் இசைக்கும்போது பணம் சேகரிக்க யாரேனும் ஒருவர் வேண்டும். வேறு எப்படி நாங்கள் சம்பாதிப்பது?”
நகரத்தில் பிற வேலைகளும் கிஷன் தேடுகிறார். ஆனால் கல்வித் தகுதி இல்லாமல் அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ரயில் பயணிகள் அவருடைய எண்ணை கேட்கும்போது, பெரிய நிகழ்வில் வாசிக்க அவர்கள் அழைப்பார்கள் என அவர் நம்பிக்கை கொள்கிறார். விளம்பரங்களில் பின்னணி வாசிக்க சில வாய்ப்புகள் கிடைத்தன. மும்பையை சுற்றி இருக்கும் ஃபிலிம் சிட்டி, பரேல் மற்றும் வெர்சோவா போன்ற ஸ்டுடியோக்களுக்கு அவர் சென்றிருக்கிறார். அவை யாவும் ஒரு நேர வாய்ப்பாக மட்டுமே முடிந்து போயின. 2,000லிருந்து 4,000 ரூபாய் வரை அந்த வாய்ப்புகள் அவருக்கு பெற்று தந்தன..
அந்த வாய்ப்புகள் கிடைத்தும் நான்கு வருடங்கள் கழிந்து விட்டன.
பத்து வருடங்களுக்கு முன் ஒரு நாளைக்கு 300, 400 ரூபாய் கிடைத்தாலே போதுமானதாக இருந்தது. இப்போது நிலை அப்படி இல்லை. வீட்டுக்கு மாத வாடகை ரூ.4,000. இன்னும் உணவு, நீர், மின்சாரம் ஆகிய தேவைகளும் இருக்கிறது. கிட்டத்தட்ட 10,000 ரூபாய் மாதத்துக்கு ஆகிவிடும். அவரின் மகளின் பள்ளி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 400 ரூபாய் கட்டணம் கேட்கிறது.
கணவரும் மனைவியும் சிந்திவாலாக்களாகவும் வேலை பார்க்கின்றனர். வீடுகளில் பழைய துணிகளை வாங்கி வெளியில் விற்கும் வேலை. அந்த வருமானமும் நிலையானது கிடையாது. வேலை வந்தால் கூட நாளொன்றுக்கு அவர்கள் 100லிருந்து 500 ரூபாய் வரை மட்டுமே ஈட்ட முடியும்.
“தூக்கத்தில் கூட என்னால் வாசிக்க முடியும். எனக்கு தெரிந்தது இது மட்டும்தான்,” என்கிறார் கிஷன். “ஆனால் சாரங்கி இசைப்பதில் வருமானம் கிடைப்பதில்லை.”
“இது என் தந்தையின் பரிசு. நானும் கலைஞனாகத்தான் உணருகிறேன். ஆனால் கலை சோறு போடுமா என்ன?”
தமிழில்: ராஜசங்கீதன்