“ கூதலு! கூதலு! பாத்ரே கூதலு (முடி! முடி! முடிக்கு பாத்திரம்!)”
சரஸ்வதியின் உச்சஸ்தாயியி குரல், முடி சேகரிக்க அவர் வீடு வீடாக செல்லும் பெங்களூருவின் மதிகரேவின் தெருக்களை நிறைக்கிறது. முடிக்கு பதிலாக அவர், அலுமினியத்தாலான எடை குறைவான, நீர் கிண்ணங்கள், பானைகள், கடாய்கள், சமையல் கரண்டிகள், பெரிய சல்லடைகள் போன்றவற்றை தருகிறார்.
“இத்தொழிலை என் அண்ணி ஷிவம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன். நிறைய வாடிக்கையாளர்களுக்கு கேட்கும் வகையில் குரல் கொடுத்து கத்தவும் அவர் எனக்கு சொல்லிக் கொடுத்தார்,” என்கிறார் பெங்களூரை சேர்ந்த 23 வயது வியாபாரி.
இந்த வேலையை செய்யும் மூன்றாம் தலைமுறையான சரஸ்வதி சொல்கையில், “என் தாய் கங்கம்மா, இந்த வேலையை திருமணத்துக்கு முன் செய்து கொண்டிருந்தார். முதுகு வலியும் முழங்கால் பிரச்சினைகளும் இருந்ததால் அவர் இந்த வேலையை குறைத்துக் கொண்டார்.” அவரின் தந்தை புல்லணா மற்றும் தாய் கங்கம்மா ஆகியோர் 30 வருடங்களுக்கு முன் ஆந்திராவிலிருந்து இங்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள்.
ஆந்திராவின் பிற்படுத்தப்பட்ட சமூகமான கொராச்சா சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்கள். தற்போது 80 வயதாகும் புல்லணா, காய்ந்த பனை இலைகள் கொண்டு துடைப்பம் செய்து, ஒவ்வொன்றையும் 20-50 ரூபாய் விலையில் விற்கிறார்.
தந்தையின் வருமானம் போதாததால், ஐந்து வருடங்களுக்கு முன் 18 வயதான பிறகு, பிகாம் படிப்பு படித்துக் கொண்டே வேலையும் பார்க்கத் தொடங்கினார் சரஸ்வதி. பெற்றோரும் இரண்டு அண்ணன்களும் அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் கொண்ட அவரது குடும்பம், வடக்கு பெங்களூருவின் கொண்டப்பா லே அவுட்டில் வசிக்கிறது.
சரஸ்வதி கல்லூரிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவரது நாள் அதிகாலை 6 மணிக்கு தொடங்கும். பல்வேறு வீடுகளிலிருந்து முடி சேகரிப்பார். கிளம்புவதற்கு முன் குடும்பத்துக்கு உணவு சமைப்பார். “நாங்கள் சென்ற பிறகு குழந்தைகளுக்கு பசிக்கும். எனவே நான் கொஞ்சம் அதிகமாக சமைப்பேன்,” என்கிறார் அவர்.
சரஸ்வதியும் அவரது அண்ணி ஷிவாம்மாவும் தேவையான உபகரணங்களுடன் வேலைக்கு கிளம்புவார்கள். அலுமினியப் பாத்திரங்களை வைக்கவென ஒரு சாம்பல் நிற தோள் பையும் பால்காரர் கொண்டு வரும் பாத்திரம் போல ஒன்றை முடி சேகரிக்கவும் வைத்திருப்பார்கள்.
“வேலை தொடங்குவதற்கு முன் நன்றாக சாப்பிடுவதில் உறுதியாக இருப்போம்,” என்கிறார் சரஸ்வதி. வழக்கமாக அவர்கள் ஒரு தட்டு இட்லி, வடை, ஆம்லெட் அல்லது மசாலா சோறு வாங்குவார்கள்.
ஒவ்வொரு வாரமும் அவர்கள், மதிகரே, யெலகாங்கா புது டவுன், கல்யாண் நகர், பனஸ்வாடி மற்றும் விஜய்நகர் ஆகிய இடங்களுக்கு செல்வார்கள். குறைந்த வருமானம் கொண்டோரும் மத்திய தர குடும்பத்தாரும் வசிக்கும் வழியில் சரஸ்வதி செல்வார்.
இருவரும் வழக்கமாக 10 மணி நேரங்கள் வேலை செய்வார்கள். சாப்பிடவென இரண்டு இடைவேளைகள் எடுத்துக் கொள்வார்கள்.
சரஸ்வதி செல்லும் வீடுகளில் உள்ளவர்கள் முடிகளை பிளாஸ்டிக் பைகளிலும் பிளாஸ்டிக் உணவு பாத்திரங்களிலும் பிளாஸ்டிக் குடுவைகளிலும் தகரப் பெட்டிகளிலும் கிழிந்த பால் பாக்கெட்டுகளிலும் கூட சேகரித்து வைத்திருப்பார்கள்.
“முடியின் தரத்தை, இழுத்து பார்த்து பரிசோதிப்பேன்,” என்னும் சரஸ்வதி, “ஒப்பனை நிலையங்களில் வெட்டப்பட்ட முடிதான் இருக்கும். அது பயன்படாது,” என்றும் கூறுகிறார். ’ரெமி முடி’ எனப்படும் “மென்தோல் இருக்கும் வேரோடு கூடிய முடி”யை பெறுவதுதான் சூட்சுமம். முடி குறிப்பிட்ட நீளத்தில் இருக்க வேண்டும் என்கிற தேவையும் உண்டு. குறைந்தபட்சம் ஆறு அங்குலம்.
அளவைக்கு உபகரணம் ஏதுமின்றி, முடியை இருமுறை அவர்களின் கை முட்டியில் சுற்றி அளந்து கொள்கின்றனர். பிறகு உருண்டையாக உருட்டிக் கொள்கின்றனர்.
முடியை அளந்தபிறகு, சரஸ்வதியும் அண்ணியும் முடி கொடுப்பவருக்கு கனம் குறைந்த அலுமினியப் பாத்திரங்களில் இரண்டை எடுத்து ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளும்படி சொல்கின்றனர். “வாடிக்கையாளர்கள் சிக்கலானவர்கள் எனில், வாக்குவாதம் செய்து, சிறு அளவு முடிக்கு பெரிய பாத்திரம் வேண்டுமென சண்டையிடுவார்கள்,” என்கிறார் அவர்.
எல்லா வீடுகளிலும் பாத்திரங்கள் பயன்படுத்தப்படும் என்பதால், பரிவர்த்தனைக்கு அவை சிறந்த வழி. ஆனால் சில வாடிக்கையாளர்கள் பணமாக கேட்பார்கள் என்கிறார் அவர். “ஆனால் நாங்கள் பணம் கொடுக்க முடியாது. வெறும் 10-லிருந்து 20 கிராம் முடிக்கு அவர்கள் 100 ரூபாய்க்கும் மேலாகக் கேட்பார்கள்!”
ஒரு நாளில் ஒரு கையளவு முடிதான் அவருக்குக் கிடைக்கும். சில நேரங்களில் 300 கிராம் கூட கிடைக்காது. “முடி கேட்டு செல்லும் வீடுகளில் ‘முடி இல்லை’ என பதில் கிடைக்கும் சந்தர்ப்பமெல்லாம் உண்டு,” என்கிறார் அவர். ”முடி சேகரிக்கும் மற்றவர்கள் எந்த பகுதிகளுக்கு வந்து சென்றிருக்கிறார்கள் எனவும் தெரியாது.”
சேகரிக்கப்பட்ட முடியை பார்வதி அம்மா என்கிற தரகரிடம் சரஸ்வதி விற்கிறார்.
“முடியின் விலை மாறிக் கொண்டே இருக்கும். இதனால் குடும்பத்துக்கு நிலையான வருமானத்துக்கான உத்தரவாதம் இல்லை. ஒரு கிலோ கறுப்பு முடிக்கு 5,000-லிருந்து 6,000 ரூபாய் வரை கிடைக்கும். ஆனால் மழைக்காலத்தில், விலை 3,000-லிருந்து 4,000 ரூபாயாக கிலோவுக்கு சரியும்.”
பார்வதி அம்மா முடியை டிஜிட்டல் எடை இயந்திரத்தில் எடை பார்க்கிறார்.
பார்வதி அம்மாவிடமிருந்து நிறுவனங்கள் முடியை வாங்கி தலைக்கு அணியும் ‘விக்’குகளை தயாரிக்கின்றன. “முடியைப் பிரித்து சுத்தப்படுத்தும் வேலையில் கிட்டத்தட்ட 5,000 பெண்கள் வேலை பார்க்கின்றனர்,” என்கிறார் 50 வயது பார்வதி. “அவர்கள் சோப், எண்ணெய், ஷாம்பூ போன்றவற்றை பயன்படுத்திவிட்டு, இரவு முழுவதும் சுத்தமாகவும் காயவும் விட்டுவிடுவார்கள். பிறகு விற்பதற்கு முன் ஆண்கள் அவற்றின் நீளத்தை பரிசோதிப்பார்கள்.”
சரஸ்வதி திட்டமிட்டுக் கொள்கிறார். “இன்று நான் பாத்திரம் வாங்க வேண்டுமெனில், நேற்றைய முடிக்கான பணத்தை நான் பார்வதி அம்மாவிடம் வாங்க வேண்டும்,” என அவர் விளக்குகிறார். “முடியை விற்க ஒரு மாதத்துக்கு நான் காத்திருக்க மாட்டேன். கிடைத்ததும் அதை விற்றுவிடுவேன்.”
12லிருந்து 15 கிலோமீட்டர் வரை நடந்தே செல்வதாக சொல்லும் அவர், அதற்கான காரணமாக, “பேருந்தின் நடத்துநர்கள் மாநில அரசுப் பேருந்துகளில் நாங்கள் ஏற அனுமதிக்க மாட்டார்கள்,” என்கிறார்.
“இந்த வேலையால் என் உடல் பாதிக்கப்படுகிறது. உடம்பிலும் கழுத்திலும் எனக்கு வலி ஏற்படுகிறது,” என தோளுக்கு தோள் மாற்றி தூக்கி செல்லும் சிரமத்தை சொல்கிறார்.
”இந்த தொழிலால் குறைவாகத்தான் வருமானம் கிடைக்கிறது,” என்கிறார் அவர்.
தமிழில் : ராஜசங்கீதன்