உற்சாகத்துடன் இருக்கும் பயணிகளை, குல்மார்கின் பனிச்சரிவுகளில் சறுக்கு வண்டியில் கொண்டு செல்வதற்கு தயாராக இருந்தார் அப்துல் வகாப் தோகெர். ஆனால் ஜனவரி 14, 2024 அன்று, மனம் நொடிந்து போன தோகெர், அவரின் வண்டி மீதமர்ந்து, பொட்டலாக கிடக்கும் பழுப்பு நிற நிலப்பரப்பை பார்த்துக் கொண்டிருந்தார்.
“குளிர்காலத்தின் உச்சமான இந்த நேரத்தில் குல்மார்கில் பனி இல்லாமல் இருக்கிறது,” என்கிறார் அவர் குழப்பத்துடன். அவருக்கு வயது 43. 25 வருடங்களாக சறுக்கு வண்டிகள் இழுக்கும் வேலை செய்யும் அவர் இப்படியொரு நிலையை பார்த்திருக்கவில்லை. பதட்டத்தில் அவர், “இதே நிலை தொடர்ந்தால், சீக்கிரமே நாங்கள் கடனாளியாகி விடுவோம்,” என்கிறார்.
பனி போர்த்திய குல்மார்கின் மலைகள், ஜம்மு காஷ்மீரின் பராமுல்லா மாவட்டத்திலுள்ள பிரபலமான மலை வாசஸ்தலமாகும். உலகளவில் கோடிக்கணக்கான பேர் சுற்றுலாவாசிகளாக வருடந்தோறும் இங்கு வருகின்றனர். 2,000 பேர் (2011 கணக்கெடுப்பு) வசிக்கும் ஊரின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய அங்கம் வகிக்கிறது. தோகெர் போன்ற பிறரும் வேலைக்காக இங்கு பயணித்து வருகின்றனர்.
பராமுல்லாவின் கிராமமான கலாந்தராவில் வசிக்கும் அவர், அன்றாடம் வேலை கிடைக்கும் நம்பிக்கையில், 30 கிலோமீட்டர் உள்ளூர் போக்குவரத்தில் பயணித்து குல்மார்குக்கு வருகிறார். “ஒருவேளை வாடிக்கையாளர் கிடைத்தாலும் கூட, பனி இல்லாததால் 150-200 ரூபாய்தான் என்னால் ஈட்ட முடியும்,” என்கிறார் அவர். “அதிகபட்சமாக நாங்கள் உறைந்த நீரின் மேல் வாடிக்கையாளர்களை ஓட்டி செல்ல முடியும்.”
“குளிர்காலத்தில் குல்மார்க் ‘அற்புதமான அனுபவத்’தை தரும்,” என்கிறது ஜம்மு காஷ்மீரின் அதிகாரப்பூர்வ இணையதளம் . “சறுக்க விரும்பும் எவருக்கும் சொர்க்கமாக பனியால் போர்த்தப்பட்ட பகுதி இருக்கும். இங்குள்ள பனிச்சரிவுகள் அப்பழுக்கற்றவை. அற்புதமாக சறுக்கி செல்பவர்களுக்கும் சவால் விடுக்கக் கூடியவை!”
மேலே சொன்ன எதுவுமே பொய்யில்லை. இந்த குளிர்காலத்தில், இமயமலை சரிவுகளில் வாழ்பவரின் வாழ்வாதாரங்களை காலநிலை மாற்றம் கடுமையாக பாதித்திருக்கிறது. பாதிப்புகளும் பன்மடங்கானவை. சூழலியலிலும் பொருளாதாரத்திலும் தாக்கம் கொண்டவை. மேய்ச்சலை சார்ந்திருக்கும் மக்களுக்கான வருமானம், மேய்ச்சல் நிலங்கள் மீளுவதில்தான் இருக்கிறது. “உலகளவில் காலநிலை மாறி வருகிறது. காஷ்மீரை அது அதிகம் பாதித்தும் வருகிறது,” என்கிறார் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் சூழலியல்துறையின் அறிவியலாளரான முகமது முஸ்லிம்.
தோகெரின் வருமானத்தை பொறுத்தவரை, நல்ல வருடங்களில், நாளொன்றுக்கு 1200 ரூபாய் ஈட்டியதாக சொல்கிறார் அவர். பயணம் மற்றும் குடும்பம் ஆகியவற்றுக்கான செலவுகள் தற்போதைய சூழலில் கிடைக்கும் வருமானத்தை மிஞ்சுகிறது. “200 ரூபாய்தான் கிடைக்கிறது. ஆனால் 300 ரூபாய்க்கு செலவு இருக்கிறது,” என புலம்புகிறார். தோகெரும் அவரின் மனைவியும் அவர்களின் இரு பதின்வயது குழந்தைகளும் அந்த குறைவான வருமானத்தில்தான் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
’மேற்கு இடையூறு’களால் இந்த வருடம் பனி குறைந்திருப்பதாக சொல்கிறார் டாக்டர் முஸ்லிம். இது ஒரு காலநிலை தன்மை. மத்தியதரைக்கடல் பகுதியில் துணை வெப்பமண்டல புயல்களாக தொடங்கி, கிழக்குப்பக்கமாக வலுவான காற்றாக நகர்ந்து இறுதியில் பனி மற்றும் மழைப்பொழிவாக பாகிஸ்தான் மேலும் வட இந்தியா மேலும் முடியும். இப்பகுதியின் நீர் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்கு மேற்கு இடையூறுகள் முக்கியம்.
தலைநகர் ஸ்ரீநகரில், கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு ஜனவரி 14ம் தேதி அதிகபட்ச வெப்பநிலையாக 15 டிகிரியை எட்டியது. வட இந்தியாவின் மிச்சப் பகுதிகள், அதே நேரத்தில் பல டிகிரி குறைவாகவும் குளிராகவும் இருந்தன.
“இதுவரை பெரியளவில் பனிப்பொழிவு காஷ்மீரில் எங்கும் நேரவில்லை. வானிலையும் வெப்பமாகிக் கொண்டே வருகிறது. 15, ஜனவரி அன்று உச்சபட்ச வெப்பநிலையான 14.1 டிகிரியை பகால்கம் எட்டியது. இதற்கு முன் 2018ம் ஆண்டிலிருந்து 13.8 டிகிரி செல்சியஸ்தான் உச்சபட்ச வெப்பநிலை,” என்கிறார் ஸ்ரீநகர் வானிலை மையத்தின் இயக்குநர் டி.முக்தார் அகமது.
சோன்மார்க் மற்றும் பகால்கம் ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்க பனிப்பொழிவு எதுவும் இல்லை. எல்லா பக்கங்களும் வெப்பநிலைகள் உயர்ந்து, இப்பகுதியில் வெப்பமான குளிர்காலங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், இமயமலை வெப்பமடையும் வேகம், உலக சராசரியை விட அதிகமாக இருப்பதாக பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்படையக்கூடிய இடமாக இமயமலை மாறியிருக்கிறது.
குளிர்ப்பரப்பை உள்ளூர்வாசிகள் தற்போது ‘பாலைவனம்’ எனக் குறிப்பிடுகின்றனர். அந்த நிலை சுற்றுலாத்துறையை நொறுக்கிவிட்டது. ஹோட்டல்காரர்கள், வழிகாட்டிகள், சறுக்கு வண்டி இழுப்பவர்கள், சறுக்கு பயிற்சியாளர்கள், ATV (எல்ல வகை பரப்புகளிலும் ஓடக் கூடிய) வாகன ஓட்டிகள் போன்றவர்கள் சிரமப்படுகின்றனர்.
”ஜனவரியில் மட்டும் 150 பதிவுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதே நிலை நீடித்தால், எண்ணிக்கை அதிகரிக்கலாம்,” என்கிறார் குல்மார்கின் ஹோட்டல் கலீல் பேலஸின் மேலாளர் முதாசீர் அகமது. “இத்தகைய மோசமான வானிலையை என் வாழ்க்கையில் நான் சந்தித்ததே இல்லை,” என்கிறார் அந்த 29 வயதுக்காரர். இந்த சீசனுக்கான நஷ்டங்கள் ஏற்கனவே 15 லட்ச ரூபாய் வரை ஏற்பட்டுவிட்டதாக அகமது கணக்கிடுகிறார்.
ஹில்டாப் ஹோட்டலில், பதிவு முடிவதற்கு முன்பே வெளியேறும் ஆட்களையும் பணியாட்கள் கவனித்திருக்கின்றனர். “பனியை பார்க்க இங்கு வருபவர்கள் ஏமாந்து போகிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களின் பதிவு முடியும் முன்னதாகவே வெளியேறுகிறார்கள்,” என்கிறார் ஹில்டாப்பின் 35 வயது மேலாளரான அய்ஜாஸ் பட். அந்த ஹோட்டலில் 90 பேர் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான குல்மார்க் ஹோட்டல்களுக்கும் இதுவே நிலை, என்கிறார் அவர். “கடந்த வருடம், 5-6 அடி பனி இந்த நேரத்திலெல்லாம் இருந்தது. ஆனால் இந்த வருடம், சில அங்குலங்கள்தான் பனி இருக்கிறது.”
பனிச்சறுக்கு வழிகாட்டியான ஜவாய்து அகமது ரெஷி, இந்த சூழலியல் மாற்றங்கள் உள்ளூர்வாசிகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை விளக்குகிறார். “குல்மார்குக்கு சுற்றுலாவாசிகள் வந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக நான் குற்றஞ்சாட்ட மாட்டேன்,” என்கிறார் 41 வயதாகும் அவர். “நாங்கள்தான் குல்மார்கை அழித்தோம்.”
ATV ஓட்டுநரான முஷ்டாக் அகமது பட், இந்த வாகனங்களை பத்தாண்டுகளுக்கு மேலாக ஓட்டி வருகிறார். குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் சமயத்தில் ATV போக்குவரத்து மட்டும்தான் இயங்கும். ஒரு சவாரிக்கு, ஓட்டுநர்கள் 1,500 ரூபாய் வரை கட்டணம் கேட்பார்கள். ஒரு சவாரி ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும்.
அதிகரிக்கும் வாகன எண்ணிக்கை, அப்பகுதியின் நுண்ணிய காலநிலை தன்மையை பாதிப்பதாக கருதுகிறார் முஷ்டாக். “குல்மார்க் பகுதிக்குள் வாகனங்களை அனுமதிப்பதை அதிகாரிகள் நிறுத்த வேண்டும். அது இப்பகுதியின் பசுமையான சூழலை அழிக்கிறது. பனிப்பொழிவை இல்லாமல் ஆக்குகிறது. எங்களின் வருமானம் இதனால் மோசமான பாதிப்பைக் கண்டிருக்கிறது,” என்கிறார் 40 வயதுக்காரரான அவர்.
வாடிக்கையாளர் வந்து மூன்று நாட்கள் ஆகி விட்டது. முஷ்டாக் பதட்டத்தில் இருக்கிறார். ஏனெனில் அவரது ATV வாகனம், 10 லட்ச ரூபாய் கடனில் வாங்கப்பட்டது. அதை வாங்கியபோது நல்ல வணிகம் வாய்க்கப் போவதாக நம்பினார் அவர். சீக்கிரமாகவே கடனை அடைத்துவிட முடியுமென நினைத்தார். “ஆனால் இப்போதோ கடனை அடைக்க முடியுமா என்றுகூட தெரியவில்லை. இந்த கோடைகாலத்தில் ATV வாகனத்தை விற்றாலும் விற்றுவிடுவேன்.”
துணிகளை வாடகைக்கு விடும் கடைகளும் காலியாக இருக்கின்றன. “எங்களின் வணிகம் முற்றிலுமாக பனிப்பொழிவைத்தான் நம்பியிருந்தது. ஏனெனில் நாங்கள், குல்மார்குக்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கு பனிக் கோட்டுகளும் காலணிகளும் கொடுப்போம். இப்போதோ 500-1000 ரூபாய் கிடைப்பது கூட கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார் 30 வயது ஃபயாஸ் அகமது தெதெத். வாடகைக்கு துணி கொடுக்கும் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். குல்மார்கிலிருந்து ஒன்றரை மணி பயண தூரத்தில் இருக்கும் தன்மார்க்கிலுள்ள இக்கடை கோட், பூட் கடை என அழைக்கப்படுகிறது.
தெதேவும் 11 ஊழியர்களும் பனிப்பொழிவுக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் வணிகம், வழக்கமாக இருந்ததை போல் மாறும் என நம்புகிறார்கள். தலா 200 ரூபாய் கட்டணத்தில் 200 கோட் மற்றும் ஜாக்கெட்டுகளை வாடகைக்கு விட்டு நாளொன்றுக்கு 40,000 ரூபாய் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தனர். கடும் குளிருக்கு தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் இப்போது சுற்றுலாவாசிகளுக்கு தேவைப்படுவதில்லை.
பாதிப்பிலிருப்பது சுற்றுலாக் காலம் மட்டுமல்ல. “மொத்தப் பள்ளத்தாக்கிலும் பனி இல்லாமல் இருக்கப் போகிறது. குடிநீரோ விவசாய நீரோ கூட இருக்காது. தங்க்மார்கிலுள்ள கிராமங்கள் ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறையை சந்திக்கத் தொடங்கிவிட்டன,” என்கிறார் பனிச்சறுக்கு வழிகாட்டியான ரெஷி.
குளிர்கால பனிப்பொழிவு வழக்கமாக பனிப்படலம் மற்றும் கடல் பனிப் பாறைகள் (பூமியின் பெரிய நன்னீர் கிடங்குகளாக கருதப்படுபவை) மீண்டும் உருவாக உதவும். இவைதாம் அப்பகுதியின் நீர் பாதுகாப்பை உறுதி செய்யும். “பனிப்படலத்தில் சிறு குறை இருந்தாலும் விவசாயப் பாசனத்தை அது பாதிக்கும். காஷ்மீரின் உயரப்பகுதிகளின் பனி உருகுவதுதான் நீருக்கான பிரதான மூலம்,” என்கிறார் முஸ்லிம், “ஆனால் இப்போது மலைகளில் பனி இல்லை. பள்ளத்தாக்கில் மக்கள் கஷ்டப்படுவார்கள்.”
தன்மார்கின் துணிக்கடையில், தெதெதும் சக ஊழியர்களும் தங்களின் கவலைகளை குறைக்கமுடியவில்லை. “இங்கு பன்னிரெண்டு பேர் பணிபுரிகின்றனர். எல்லாருக்கும் 3-4 பேர் கொண்ட குடும்பங்கள் இருக்கிறது.” நாளொன்றுக்கு அவர்கள் தற்போதைய சூழலில் 1,000 ரூபாய் சம்பாதித்து சமமாக பங்கிட்டுக் கொள்கின்றனர். “குடும்பங்களுக்கு எப்படி நாங்கள் உணவளிப்பது?” எனக் கேட்கிறார் விற்பனையாளர். “இந்த வானிலை எங்களை கொல்கிறது.”
தமிழில்: ராஜசங்கீதன்