சுஷிலாவின் குடும்ப உறுப்பினர்கள் ஐவரும் அவர்களின் சிறு வீட்டு வராண்டாவில், தன் சம்பளத்துடன் சுஷீலா வருவதை எதிர்பார்த்து அமர்ந்திருக்கின்றனர். இரண்டு வீட்டில் வேலை பார்த்து அவர் 5,000 ரூபாய் சம்பாதித்திருக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு 45 வயது சுஷீலா, உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியிலுள்ள அமரா கிராமத்திலுள்ள அந்த வீட்டுக்குள் நுழைந்தார்.
”இரண்டு வீடுகளில் பாத்திரம் துலக்கியும் தரையை சுத்தப்படுத்தியும் அம்மா 5,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்,” என்கிறார் 24 வயது வினோத் குமார் பாரதி. “மாதந்தோறும் ஒன்றாம் தேதி அவருக்கு சம்பளம் வந்து விடும். இன்று ஒன்றாம் தேதி. அப்பா, ஒயரிங் வேலை செய்து ஒரு எலக்ட்ரீஷியனுக்கு உதவியாக இருக்கிறார். வாய்ப்பிருந்தால் அவருக்கு ஒரு நாள் வேலை கிடைக்கும். நிலையான வருமானம் எங்களுக்கு கிடையாது. நான் தொழிலாளராக வேலை பார்க்கிறேன். கூட்டாக மாதந்தோறும் நாங்கள் 10-12,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறோம். எனவே 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கான வரி விலக்கு எங்களுக்கு எப்படி பயன்படும்?”
”சில வருடங்களுக்கு முன் வரை நாங்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்த்தோம். இப்போது வேலை இல்லையென அவர்கள் சொல்கிறார்கள்.” சுஷிலா காட்டும் அட்டையில் 2021ம் ஆண்டு வரை பதிவு போடப்பட்டிருக்கிறது. அதற்கு பிறகுதான் எல்லாமும் டிஜிட்டல்மயமாகி விட்டது. இது பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதி ஆகும்.





