நான் சோர்வாக உள்ளேன். என் மனமும் உடலும் கனக்கின்றன. என் கண்கள் என்னைச் சுற்றி நிகழும் ஒடுக்கப்பட்ட மக்களது மரணங்களின் வலிகளால் நிறைந்து கிடக்கின்றன. நான் பணி செய்த பற்பல கதைகளை எழுத இயலாத படி என் மனநிலை மரத்துப்போயுள்ளது. இந்தக் கதையை நான் எழுதத் துவங்கும்போது கூட அரசாங்கம் சென்னை அனகாபுத்தூரில் தலித் மக்களின் குடியிருப்புக்களை இடித்துக் கொண்டிருக்கிறது. நான் மென்மேலும் முடங்கி போகிறேன்.
கடந்த அக்டோபர் 7, 2023 அன்று ஒசூரில் நிகழ்ந்த பட்டாசு தொழிலாளர் மரணங்களில் இருந்து இன்னும் என்னால் மீள இயலவில்லை. நான் தற்போது வரை 22 மரணங்களை ஆவணப்படுதியுள்ளேன். இவர்களுள் எட்டு பேர் 17 முதல் 21 வயதுள்ள மாணவர்களாவர். இவர்கள் அனைவரும் பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள். அந்த எட்டு மாணவர்களும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதோடு அதோடு நெருங்கிய நண்பர்களாவர்.
நான் ஒளிப்படக் கலையைக் கற்றுக்கொள்ளத் துவங்கியது முதலாகவே பட்டாசுக் கடைகள், கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தேன். வெகு நாட்கள் முயற்சித்தும் என்னால் புகைப்படம் எடுக்க அனுமதி பெற இயலவில்லை. இந்தத் தொழிற்சாலைகளோ, கிடங்குகளோ ஒருபோதும் அனுமதி அளிப்பதில்லை என்பதையும், உள்ளே செல்வதோ புகைப்படம் எடுப்பதோ அவ்வளவு எளிதல்ல என்பதையும் பின்னர் தான் விசாரித்தறிந்து கொண்டேன்.
என் பெற்றோர்கள் தீபாவளிக்காக புத்தாடைகளோ பட்டாசுகளோ எப்போதும் வாங்கித் தந்ததில்லை. அதற்கு வசதியும் இருக்காது. என் அப்பாவுடைய உடன்பிறந்த மூத்த சகோதரர் (பெரியப்பா) தான் புத்தாடை வாங்கித் தருவார். தீபாவளி கொண்டாடுவதற்காக நாங்கள் அவர் வீடுக்குச் சென்று விடுவோம். அவர் வாங்கித் தரும் பட்டாசுகளையே, அவர் பிள்ளைகள் உட்பட, அனைவரும் வெடிப்போம்.
எனக்கு பட்டாசு வெடிப்பதில் நிறைய ஆர்வம் இருந்தது. வளர்ந்த பின்னர் பட்டாசு வெடிப்பதோடு கூட தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடுவதையும் அடியோடு நிறுத்திக் கொண்டேன். ஒளிப்படக்கலைக்குள் வந்த பின்பு உழைக்கும் மக்களின் வாழ்க்கை குறித்துப் புறிந்து கொள்ளத் தொடங்கினேன்.
புகைப்பட கலை மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு வருடமும் தீபாவளியின் போது பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்துகள் நிகழ்ந்தன. இந்த விபத்துகள் பற்றி கவலைப்படாத ஒரு இடத்தில்தான் நான் இருந்தேன்.





















