மாற்றியமைக்கப்பட்ட மகிந்திரா வாகனம் - MH34AB6880 - கிராமத்தில் பரபரப்பாக இருக்கும் சதுக்கத்தில் சென்று நிற்கிறது. அப்பகுதி, 2920 MW அனல் மின் நிலையத்தின் கழிவுகள் சேர்ந்து சாம்பல் குன்றுகள் இருக்கும் பகுதிக்கும் சந்திரப்பூரின் புறநகரின் அடர்ந்த புதர்க்காடுகளுக்கும் இடையில் இருக்கிறது.
வாகனத்தின் இரு பக்கங்களிலும் முழக்கங்களும் புகைப்படங்களும் கொண்ட வண்ணங்கள் நிறைந்த போஸ்டர்கள் இருக்கின்றன. அக்டோபர் 2023ன் ஒரு ஞாயிறு காலையில் அந்த வாகனம் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. குழந்தைகளும் ஆண்களும் பெண்களும் யார் வந்திருக்கிறாரென பார்க்க விரைகின்றனர்.
வித்தால் பத்கால் வாகனத்தை விட்டு வெளியே வருகிறார். ஓட்டுநரும் உதவியாளரும் அவரது பக்கத்தில் நிற்கின்றனர். எழுபது வயதுகளில் இருக்கும் அவர், வலது கையில் மைக்கை எடுத்து இடது கையில் ஒரு டைரியை எடுக்கிறார். வெள்ளை வேட்டி, குர்தா, நேரு குல்லாய் அணிந்திருக்கும் அவர், மைக்கில் பேசத் தொடங்குகிறார். வாகனத்தின் முன்பக்க கதவில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்பீக்கர், அவரின் பேச்சை சத்தமாக ஒலிபரப்புகிறது.
அங்கு வந்திருக்கும் காரணத்தை அவர் விளக்குகிறார். 5,000 பேர் கொண்ட அந்த கிராமத்தின் மூலை முடுக்குகளில் அவரின் பேச்சு சென்று சேர்கிறது. அந்த கிராமத்தில் வசிப்போரின் பெரும்பான்மை விவசாயிகள். பிறர், அருகாமை நிலக்கரி ஆலைகளிலும் சிறு ஆலைகளிலும் தினக்கூலி வேலை செய்கின்றனர். ஐந்து நிமிடங்கள் நீடிக்கும் பேச்சு முடியும்போது, இரண்டு மூத்த கிராமவாசிகள் அவரை புன்னகையோடு வரவேற்கின்றனர். “வணக்கம் மாமா… வந்து உட்காருங்க,” என சொல்கிறார் 65 வயது விவசாயியான மகாதேவ் திவாசே. 65 வயது விவசாயியான அவர், கிராமத்தின் மையத்தில் ஒரு சிறு மளிகை கடை நடத்துகிறார்.
“வணக்கம்,” என பதிலளிக்கிறார் பத்கால் கைகளை கட்டிக் கொண்டு.
கிராமவாசிகள் சூழ அவர் அமைதியாக மளிகைக் கடையை நோக்கி நடந்து சென்று ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்கிறார். அவருக்கு பின்னால் இருக்கும் கடைக்காரர் திவாசே எதிர்பார்ப்புடன் இருக்கிறார்.
முகத்தில் வியர்வையை ஒரு மென்மையான வெள்ளை காட்டன் துணியால் துடைத்துக்கொண்ட அவர், மக்களை அமரவும் நிற்கவும் சொல்லி, தான் சொல்லவிருப்பதை கேட்க அறிவுறுத்துகிறார். அது 20 நிமிட பயிற்சியாக இருக்கப் போகிறது.
காட்டு விலங்குகளின் சூறையாடலால் நேரும் பயிரிழப்பு, பாம்புக் கடிகளால் நேரும் உயிரிழப்பு, புலி தாக்குதலால் நேரும் மரணங்கள் போன்றவற்றுக்கான நிவாரணம் கோருவதற்கான செயல்முறையை படிப்படியாக விளக்குகிறார் அவர். கடினமான செயல்முறை, எளிமையாக்கி கிராமவாசிகளுக்கு சொல்லப்படுகிறது. மழைக்காலங்களில் இடி தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்கான தடுப்பு முறைகளையும் அவர் சொல்கிறார்.
“காட்டு விலங்குகள், புலிகள், பாம்புகள், மின்னல் போன்றவற்றால் எங்களுக்கு பாதிப்பு உண்டு. அரசாங்கத்துக்கு எங்களின் பிரச்சினையை எப்படி தெரியப்படுத்துவது?” பத்கால் நல்ல மராத்தியில் பேசுகிறார். அவரின் அதிகார தொனி மக்களை கட்டுப்படுத்தி வைக்கிறது. “கதவுகளை நாம் தட்டாமல், அரசாங்கம் எப்படி விழித்தெழும்?”
அவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், அவர் சந்திரப்பூரில் இருக்கும் கிராமங்கள் முழுக்க பயணித்து பயிரிழப்புக்கான நிவாரணம் பெறும் வழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
விரைவில் பத்ராவதி டவுனில் ஒரு விவசாயிகள் ஊர்வலம் நடக்கவிருப்பதாக சொல்கிறார் அவர். “நீங்கள் அனைவரும் அங்கு இருக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்திவிட்டு, அடுத்த கிராமத்துக்கு வாகனத்தில் கிளம்புகிறார்.
*****
இளம் மாணவர்கள் அவரை ’குரு’வென அழைக்கிறார்கள். அவரின் ஆதரவாளர்கள் ‘மாமா’ என அழைக்கிறார்கள். அவரைப் போன்ற விவசாயிகள் அன்பாக அவரை துக்கர்வாலே மாமா என அழைக்கிறார்கள். துக்கர் என்றால் மராத்தியில் காட்டுப் பன்றி என அர்த்தம். அவர் தொடர்ச்சியாக காட்டுப் பன்றி உள்ளிட்ட காட்டு விலங்குகளின் சூறையாடலுக்கு எதிராக இயங்கி வருவதால் அப்பெயரை பெற்றிருக்கிறார். அரசாங்கம் அப்பிரச்சினையை அங்கீகரித்து, நிவாரணம் வழங்கி, தீர்க்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.
பயிர் இழப்புகளுக்காக விவசாயிகள் நிவாரணம் பெறுவது, கடினமான செயல்முறைகளினூடாக நிவாரணங்களுக்கான கோரிக்கை மனுவை அனுப்புவது, கள ஆய்வு செய்யவும் படிவங்களை சமர்ப்பிக்கவும் பயிற்சியளிப்பது என ஒற்றை ஆளாக தன்னார்வத்துடன் செய்து வருகிறார் பத்கால்.
தடோபா அந்தாரி புலிகள் சரணாலயத்தை சுற்றி இருக்கும் சந்திரப்பூர் மாவட்டம்தான் அவரின் களம்.
இப்பிரச்சினையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கென பல கோரிக்கைதாரர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த மனிதரின் பெரும் முயற்சியால்தான் மகாராஷ்டிரா அரசாங்கம் இப்பிரச்சினையின் பக்கம் முதன்முறையாக கவனத்தை திருப்பியது. “புது வகை பஞ்சம்” போல விலங்குகளால் விளைச்சல் நிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ரொக்க நிவாரணம் வழங்கும் புதிய தீர்மானத்தை 2003ம் ஆண்டு அந்த அரசு நிறைவேற்றியது. அதுவும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டி, ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்திய ஐந்து-ஆறு வருடங்களுக்கு பிறகுதான் நேர்ந்தது என்கிறார் பத்கால்.
1996ம் ஆண்டில் நிலக்கரி மற்றும் இரும்புத் தாது சுரங்கங்கள் பத்ராவதியை சுற்றி பெருகியபோது, பொதுத்துறையின் அமைப்பான வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடட் (WCL) என்கிற அமைப்பு தொடங்கிய திறந்தவெளி சுரங்கத்துக்கு தன் மொத்த நிலத்தையும் இழந்தார் அவர். பத்காலின் சொந்த ஊரான தெல்வாசா-தோர்வாசா ஆகிய கிராமங்கள் மொத்தமும் சுரங்கங்களுக்கு கையக்கப்படுத்தப்பட்டன.
அச்சமயத்தில், நிலங்களை சூறையாடும் வன விலங்குகளின் சம்பவங்கள் அதிகரித்தது. இருபது முப்பது வருடங்களில் மெதுவாக மாறி வந்த காடுகளின் தரமும் மாவட்டங்கள் முழுக்க புதிய சுரங்கத் திட்டங்களின் அதிகரிப்பும் அனல் மின் நிலையங்களில் விரிவாக்கமும் மனித - வனவிலங்கு மோதலை அதிகரித்திருத்ததாக அவர் சொல்கிறார்.
மனைவி மந்தத்தாயுடன் பத்கால், 2002ம் ஆண்டில் பத்ராவதிக்கு இடம்பெயர்ந்தார். சமூகப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஊழல் மற்றும் போதை ஆகியவற்றுக்கு எதிராகவும் இயங்குபவர். அவரின் இரு மகன்கள் மற்றும் மகள் ஆகியோருக்கு திருமணம் முடிந்து விட்டது. அப்பாவை போலன்றி தம்மளவில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வருமானத்துக்காக அவர் சிறு நிலம் வைத்திருக்கிறார். மிளகாய், மஞ்சள் பொடி மற்றும் இயற்கை வெல்லம், மசாலா போன்றவற்றை விற்கிறார்.
விலங்குகளால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி இத்தனை வருடங்களில் சந்திரப்பூர் மற்றும் அருகாமை மாவட்டங்களை சுற்றி பேரணிகள் நடத்தியிருக்கிறார் அவர்.
2003ம் ஆண்டில் முதல் தீர்மானத்தை அரசு நிறைவேற்றியபோது, நிவாரணம் வெறும் சில நூறு ரூபாய்களாகத்தான் இருந்தது. தற்போது அது ஒரு குடும்பத்துக்கு இரு ஹெக்டேர் நிலம் வரை 25,000 ரூபாய் நிவாரணம் ஒவ்வொரு ஹெக்டேருக்கும் வழங்கப்படும் கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுவும் போதாது. ஆனால் நிவாரணத்தை அரசாங்கம் உயர்த்தியிருப்பதே இப்பிரச்சினையை அது அங்கீகரித்திருப்பதற்கான அடையாளம் என்கிறார் பத்கால் மாமா. “மாநிலம் முழுக்க இருக்கும் விவசாயிகள் நிவாரணம் கோருவதில்லை என்பதுதான் பிரச்சினை,” என்கிறார் அவர். இன்று அவர் முன் வைக்கும் கோரிக்கையான ஒரு வருடத்துக்கு ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.70,000 நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பது “போதுமான அளவுக்கான இழப்பீடு ஆகும்.”
கால்நடை மரணங்கள், பயிரிழப்பு மற்றும் விலங்குகளால் நேரும் மரணங்கள் ஆகியவற்றுக்கு 80-100 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கவென வருடந்தோறும் வனத்துறை நிதி ஒதுக்குகிறது என்றார் 2022ம் ஆண்டு காட்டு பாதுகாப்பு தலைவராக இருந்த சுனில் லிமாயே
“அது மிகவும் குறைவு,” என்கிறார் மாமா. “பத்ரவாதி (அவரது சொந்த தாலுகா) மட்டுமே வருடந்தோறும் 2 கோடி ரூபாய் அளவு நிவாரணம் பெறுகிறது. அந்த தாலுகாவின் விவசாயிகள் பெரும்பாலானோர் நிவாரணத்துக்கு விண்ணப்பிக்க பயிற்சி பெற்றிருப்பதால் அது சாத்தியப்பட்டது,” என்கிறார் அவர். “பிற இடங்களில் அது நடக்கவில்லை,” என்கிறார் அவர்.
“25 வருடங்களாக இதை நான் செய்து வருகிறேன்,” என்கிறார் அவர் சந்திரப்பூர் மாவட்டத்தின் பத்ராவதி டவுனில் இருக்கும் அவர் வீட்டில். “வாழ்க்கையின் மிச்சத்துக்கும் கூட இதைத்தான் செய்வேன்.”
இன்று பத்கால் மாமாவுக்கு தேவை மகாராஷ்டிரா முழுவதும் இருக்கிறது.
மகாராஷ்டிர அரசாங்கம் நிவாரணத் தொகையை அதிகரித்திருக்கிறது. பிரச்சினை இருப்பதற்கான அங்கீகாரம் இது என்கிறார் பத்கால். ஆனால் மாநிலத்தின் பல விவசாயிகளுக்கு நிவாரணத்துக்கு விண்ணப்பிக்க தெரியவில்லை. நிவாரணத்தை அதிகப்படுத்தும்படி அவர் கோரி வருகிறார்
*****
பிப்ரவரி 2023-ம் ஆண்டில் குளிரும் காற்றும் நிறைந்த நாளொன்றில் அவருடன் இணைந்து பாரி, பத்ராவதி தாலுகாவின் அருகாமை கிராமங்களுக்கு சென்றது. பெரும்பாலான விவசாயிகள் குறுவை அறுவடை செய்து கொண்டிருந்தனர்.
நான்கைந்து கிராமங்களுக்கு சென்றதில், சூறையாடும் விலங்குகளால் எல்லா சாதியினரும் எல்லா அளவு நிலம் கொண்டவர்களும் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையை புரிந்து கொள்ள முடிந்தது.
”இதை பாருங்கள்,” என்கிறார் பாசிப்பயறு செடிகளுக்கு நடுவே நிற்கும் ஒரு விவசாயி. “என்ன மிச்சம் இருக்கிறது இதில்?” அந்த வயல் முந்தைய இரவு காட்டுப் பன்றிகளால் சூறையாடப்பட்டிருந்தது. கடந்த இரவில், இப்பகுதியின் பயிரை அவை தின்றுவிட்டன என்கிறார் விவசாயி கவலையோடு. இன்று இரவும் அவை திரும்ப வரும். மிச்சத்தை காலி செய்யும். “என்ன செய்வது மாமா?”, எனக் கேட்கிறார் அவர்.
வயலில் நேர்ந்திருக்கும் இழப்பை ஆராயும் பத்கால் தலையை அவநம்பிக்கையுடன் குலுக்கிவிட்டு சொல்கிறார்: “கேமராவுடன் ஓர் ஆளை நான் அனுப்பிகிறேன். அவர் புகைப்படங்களும் காணொளிகளும் எடுக்கட்டும். ஒரு படிவத்தை நிரப்பி உன் கையெழுத்தையும் அவர் பெறுவார். உள்ளூர் காட்டிலாகா ரேஞ்சரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.”
இதை செய்ய வருபவர், கவுராலா கிராமத்தின் நிலமற்ற பெண்ணான 35 வயது மஞ்சுளா பத்கால். சிறு துணி உற்பத்தி மையத்தை நடத்தும் அவர், விவசாயிகளுக்கென இந்த தொழில்முறை உதவியும் செய்கிறார்.
வருடம் முழுக்க, குறிப்பாக குளிர்காலத்தில் தன் ஸ்கூட்டியில் அவர் 150 கிராமங்களுக்கு சென்று நிவாரணம் கோரி விண்ணப்பிக்கும் முறையை கற்றுக் கொடுக்கிறார்.
“புகைப்படங்கள் எடுப்பேன். அவர்களின் படிவங்களை நிரப்புவேன். தேவைப்பட்டால் பிரமாண பத்திரமும் உருவாக்குவேன். நிலத்தில் பங்கு இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் கையெழுத்து பெறுவேன்,” என்கிறார் மஞ்சுளா பாரியிடம்.
ஒரு வருடத்தில் எத்தனை விவசாயிகளுக்கு இப்படி செய்கிறார்?
“ஒரு கிராமத்தில் 10 விவசாயிகள் என எடுத்தால் கூட, கிட்டத்தட்ட 1,500 பேர் ஆகிறார்கள்,” என்கிறார் அவர். ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 300 ரூபாய் கட்டணம் பெறுகிறார். 200 ரூபாய் அவரின் பயணத்துக்கும் நகலெடுப்பதற்கும் பிற செலவுகளுக்கும். 100 ரூபாய் அவரது உழைப்புக்கு. அதை கொடுக்க எந்த விவசாயியும் தயாராகவே இருக்கிறார்கள் என்கிறார் அவர்.
இவற்றுக்கிடையில் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குவதை மாமா தொடர்கிறார். விவசாயியின் நிவாரண விண்ணப்பத்தை உறுதி செய்ய, அதிகாரிகள் குழு வந்து கள ஆய்வு செய்ய காத்திருக்கும்படி அவரிடம் சொல்கிறார். ஒரு தலாத்தி, வன அதிகாரி மற்றும் விவசாய உதவியாளர் வந்து வயலை ஆய்வு செய்வார்கள் என்கிறார் அவர். :”தலாத்தி, நிலத்தை அளவிடுவார். விவசாய உதவியாளர் அழிக்கப்பட்ட பயிரை குறித்துக் கொள்வார். வன அதிகாரி எந்த விலங்கு வந்து அழித்தது என கண்டறிவார்,” என விளக்குகிறார். இதுதான் நடைமுறை என்கிறார் அவர்.
“உங்களுக்கு கிடைக்க வேண்டியவை கிடைக்கும்; கிடைக்கவில்லை எனில் நாம் போராடுவோம்,” என உறுதியாக பத்கால் சொல்லும் விதம் விவசாயியின் மனநிலையை மட்டும் உயர்த்தாமல், அவர் வேண்டி நின்ற ஆறுதலையும் ஆதரவையும் கொடுக்கிறது.
“கள ஆய்வுக்கு அதிகாரிகள் வரவில்லை என்றால் என்ன செய்வது?,” கவலையுடன் கேட்கிறார் விவசாயி.
பொறுமையாய் பதிலளிக்கிறார் பத்கால்: சம்பவம் நடந்த 48 மணி நேரங்களில் நிவாரணம் கேட்டு விண்ணப்பிக்கப்பட வேண்டும். ஏழு நாட்களுக்குள் குழு வர வேண்டும். நிலத்தை ஆராய்ந்து 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். விவசாயி 30 நாட்களுக்கும் நிவாரணம் பெற வேண்டும், என்கிறார் அவர்.
“விண்ணப்பித்து 30 நாட்களில் அவர்கள் வரவில்லை எனில், நம்முடைய கள ஆய்வும் புகைப்படங்களும் அத்துறையால் சான்றாவணமாக ஏற்கப்பட வேண்டுமென்ற விதி இருக்கிறது,” என விவரிக்கிறார் பத்கால்.
”மாமா, என்னுடைய விதி உங்களுடைய கையில்தான் இருக்கிறது,” எனக் கெஞ்சுகிறார் அந்த விவசாயி கைகட்டியபடி. மாமா அவரின் தோளை தட்டி, “கவலைப்படாதே,” எனத் தேற்றுகிறார்.
அவருடைய குழு இந்த ஒருமுறை செய்து கொடுக்கும் என சொல்லும் அவர், இனி அந்த விவசாயியே இதை செய்ய கற்றுக் கொள்ள வேண்டுமென கூறுகிறார்.
நேரடியாக செல்வதையும் தாண்டி, பிரசாரத்தின்போதே நிவாரண விண்ணப்பம் போன்றவற்றையும் கிராமவாசிகளுக்கு மாமா விநியோகிக்கிறார்.
“கையேட்டை கவனமாக படியுங்கள்,” என அக்டோபர் 2023-ல் அவர் பிரசாரம் செய்த தடாலி கிராமவாசிகளிடம் கையேடுகளை விநியோகித்து சொல்கிறார்.
“ஏதேனும் கேள்வி இருந்தால் சொல்லுங்கள். நான் தெளிவுபடுத்துகிறேன்.” அவரின் படிவங்கள் மராத்தியில் சுலபமாக படிக்கும் வண்ணம் இருக்கின்றன. அவற்றில் தனித்தகவல்கள், நில அளவு, பயிர் செய்யும் தன்மை ஆகியவை குறித்த தகவல்களை நிரப்பும் இடமும் இருக்கிறது.
”இந்த படிவத்துடன் உங்களின் நிலப்பட்டா, ஆதார் அட்டை, வங்கி தகவல்கள் மற்றும் வன விலங்குகளால் சூறையாடப்பட்ட வயலின் தெளிவான புகைப்படம் ஆகியவற்றை நீங்கள் இணைக்க வேண்டும்,” என்கிறார் பத்கால். “புகார் மற்றும் நிவாரண படிவத்தை எந்தவித தவறும் இன்றி சமர்ப்பிக்க வேண்டும். ஒரே பருவகாலத்தில் பல முறை செய்ய வேண்டுமென்றாலும் நீங்கள் அதை செய்ய வேண்டும்,” என்கிறார் அவர். ”வலியின்றி பலனில்லை,” என்கிறார் அவர்.
சட்டப்படி 30 நாட்களில் பணம் வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்பட வேண்டுமென இருந்தாலும் பணத்தை போட அரசாங்கம் ஒரு வருடமாக்கி விடுகிறது. “முன்பெல்லாம் இந்த வேலை செய்ய காட்டிலாகா அதிகாரிகள் லஞ்சம் கேட்பார்கள்,” என்கிறார் அவர். ”தற்போது நாங்கள் வங்கியில் பணம் போடும்படி நிர்ப்பந்திக்கிறோம்.”
வயல்களை சூறையாடும் வன விலங்குகள் பிரச்சினையை பொறுத்தவரை பெரியளவிலான தடுப்பு முறைகள் சாத்தியமில்லை என்பதால் விவசாயிக்கு நிவாரணம் அளிப்பது மட்டும்தான் ஒரே வழி. விவசாய இழப்புகளை கணித்து நிவாரண விண்ணப்பங்களை விதிமுறைகளுக்கேற்ப பதிவு செய்வது கடினமான பணி.
ஆனால் பத்கால், “நாம் செய்ய வேண்டியிருந்தால் செய்துதான் ஆக வேண்டும்,” என்கிறார். மக்களின் அறியாமையை போக்கி அறிவை வழங்குவதுதான் ஒரே வழி என நம்புகிறார் அவர்.
மாமாவின் ஃபோன் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கும். விதர்பாவிலுள்ள மக்கள் அவரின் உதவி வேண்டி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் கூட அழைப்பு வருவதுண்டு என்கிறார் அவர்.
சரியான இழப்பை தீர்மானிப்பதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆய்வு பல நேரங்களில் உண்மையான நிலவரத்தை படம்பிடிப்பதில்லை. உதாரணமாக, “பருத்தியையோ சோயாபீன்ஸையோ வன விலங்குகள் சாப்பிட்டு, செடிகளை அப்படியே விட்டு செல்லும் போது அதை எப்படி அளவிடுவது,” எனக் கேட்கிறார். ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், பசிய செடிகள் நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அலுவலகத்துக்கு சென்று இழப்பேதும் இல்லை என அறிக்கை தருவார்கள். ஆனால் உண்மையில் அந்த விவசாயி பெரும் நஷ்டத்தை அடைந்திருப்பார்.
“நிவாரணத்துக்கான விதிகளில் விவசாயிக்கு உதவும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்,” என்கிறார் பத்கால்.
*****
பிப்ரவரி 2022லிருந்து இந்த கட்டுரையாளர் பத்காலுடன் இணைந்து சரணாலயக் காடுகளின் சுற்றுப்பகுதிகளில் இருக்கும் பல கிராமங்களுக்கு சென்றிருக்கிறார்.
விவசாயிகள், நன்கொடையாளர்கள், நலம் விரும்பிகள் போன்றோர் கொடுக்கும் நிதியுதவியுடன் அவர் தொடரும் பிரசாரத்தின் தினம் வழக்கமாக அதிகாலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு முடியும். 5லிருந்து 10 கிராமங்களுக்கு ஒருநாளில் அவர் சென்றுவிடுவார்.
ஒவ்வொரு வருடமும் பத்கால் 5,000 நாட்காட்டிகளை மராத்தி மொழியில், அரசின் தீர்மானங்கள், திட்டங்கள், பயிர் நிவாரண முறைகள் போன்ற விவசாயிகளுக்கு தேவைப்படும் தரவுகளுடன் அச்சிட்டு கொடுக்கிறார். நன்கொடை பணத்தில் இதை செய்கிறார். விவசாயி - தன்னார்வலர்கள், தகவல்களையும் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்ள சமூகதளத்தை பயன்படுத்துகிறார்கள்.
இந்த இயக்கத்தை சந்திரப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தவென பத்தாண்டுகளுக்கு முன், ‘ஷெத்காரி சம்ரஷன் சமிதி’ (விவசாயிகள் பாதுகாப்பு கமிட்டி) அமைப்பை அவர் உருவாக்கினார். இப்போது அதில் 100 தன்னார்வலர்கள் இருக்கின்றனர்.
நிவாரணப் படிவங்களை முறைப்படுத்தப்பட்ட படிவங்களாக, பிற ஆவணங்களுக்கான படிவங்களுடன் எல்லா மாவட்டங்களிலும் இருக்கும் விவசாய இடுபொருள் கடைகளில் பெறலாம். ஒவ்வொரு விவசாயியும் இந்த கடைகளுக்கு வருவார்கள். அவர்களின் உதவியுடன் இயக்கம் பற்றிய செய்தி பரவலாகும். அவர்களும் அதை விரும்பியே செய்கிறார்கள்.
பதட்டமான விவசாயிகளிடமிருந்து நாள் முழுக்க அழைப்புகள் பத்காலுக்கு வருகின்றன. சில நேரங்களில் அவை உதவி வேண்டும் அழைப்பாகவும் இருக்கிறது. சில நேரங்களில் கோபமான விமர்சனமாக இருக்கிறது. பெரும்பாலும் அவரின் அறிவுரை நாடியே அழைப்புகள் வருகின்றன.
“விவசாயிகளும் இருக்கின்றனர். வன விலங்குகளும் இருக்கின்றன. விவசாயத் தலைவர்களும் இருக்கின்றனர். வன உயிர் ஆர்வலர்களும் இருக்கின்றனர். பிறகு அரசாங்கமும் இருக்கிறது. வன, விவசாய மற்றும் வருவாய் அதிகாரிகள் இப்பிரச்சினையை தள்ளிப்போட மட்டுமே முயற்சி செய்கிறார்கள்.” பத்கால் தொடர்ந்து சொல்கிறார். “யாரிடமும் தீர்வு இல்லை.”
அவரால் அதிகபட்சமாக செய்ய முடிந்தது இழப்பீடு பெற்று கொடுப்பது மட்டும்தான் என்கிறார். ஏனெனில் அது ஒன்று மட்டுமே இருக்கும் ஒரே நிவாரணம்.
எனவே பேருந்திலோ யாருடனோ பைக்கிலோ கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து போராட்டத்துக்கு மாமா ஒருங்கிணைக்கிறார்.
“தேவையானவை கிடைத்ததும், கிராமங்களுக்கு செல்ல நான் திட்டமிடுவேன்,” என்கிறார் அவர்.
இந்த பிரசாரம் ஜூலை முதல் அக்டோபர் 2023 வரை நடந்தது. சந்திரப்பூர் மாவட்டத்தில் மட்டும் 1,000 கிராமங்களை சென்றடைந்தது.
“ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து விவசாயிகள் நிவாரண விண்ணப்பம் சமர்ப்பித்தால் கூட, இந்த பிரசாரத்துக்கான நோக்கம் நிறைவேறி விட்டதாக அர்த்தம்,” என்கிறார் அவர்.
தன்னார்வத்தில் விவசாயிகள் ஒருங்கிணைவது கடினம் என்கிறார் பத்கால். அவர்களின் தன்மை வருத்தப்படுவதாகதான் இருக்கும். திரும்பி சண்டையிடுவதாக இருக்காது. அழுவதும் அரசாங்கத்தை குறை சொல்வதும் சுலபம் என்கிறார் அவர். ஆனால் உரிமைகளுக்காக போராடுவதும் நியாயம் கோருவதும் பொது நோக்கத்துக்காக நம் வேறுபாடுகளை களைந்து நிற்பதும்தான் கடினம்.
இயற்கை பாதுகாவலர்களும் விலங்கு நல ஆர்வலர்களும் வல்லுநர்களும் புலி நேயர்களும் விலங்கு நலத்தை சரணாலயத்திலும் அதை சுற்றியும் கடுமையாக கடைபிடிக்கிறார்கள். ஆனால் மக்களின் பல முனை பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் அவர்களின் அணுகுமுறை இருக்கிறது என்கிறார் பத்கால்.
அவரின் இயக்கம் ஒரே எதிர்வினை மட்டுமே தருகிறது. இருபது வருடங்களில் விவசாயிகளின் குரலுக்கான தளத்தை அவர் உருவாக்கி இருக்கிறார்.
“இயற்கை பாதுகாவலர்களுக்கு எங்களின் பார்வைகள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இங்குள்ள மக்கள் வாழ்வா சாவா என்கிற அளவுக்கு பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,” என வலியுறுத்துகிறார் பத்கால்.
அவர்களின் நிலத்தில் தினமும் அப்பிரச்சினைகள் வருடம் முழுக்க நேர்கிறது.
தமிழில்: ராஜசங்கீதன்