கை நீண்டு திறந்திருக்கும் உள்ளங்கையில் தேங்காயை கொண்டிருக்கும் பூசாரி ஆஞ்சநேயலு, முட்டலப்புரம் வயல்களினூடாக நடந்து செல்கிறார். தேங்காய் அசைந்து, சுற்றி, கீழே விழ காத்திருக்கிறார். X அடையாளம் போட்டிருக்கும் ஒரு இடத்தை காட்டுகிறார். “இங்கு நீர் இருக்கும். இங்கு ஓர் ஆழ்துளைக் கிணறு தோண்டுங்கள். உங்களுக்கு தெரியும்,” என்கிறார் அவர் அனந்தப்பூர் மாவட்டத்தின் இக்கிராமத்தில்.

ஒரு கிராமம் தள்ளியிருக்கும் ராயுலு தோமதிம்மனா அடுத்த வயலுக்கு குனிந்து செல்கிறார். அவர் கையில் பிடித்திருக்கும் பெரிய சுள்ளி, ராயலப்படோடியில் நீர் இருக்கும் இடம் நோக்கி அவரை இட்டுச் செல்லும். “சுள்ளி மேல்நோக்கி நகரந்தால், அதுதான் இடம்,” என விளக்குகிறார். அவரின் உத்தி, “90 சதவிகிதம் வெற்றி” அடைந்திருப்பதாக கூறுகிறார்.

அனந்தப்பூரின் இன்னொரு மண்டலத்தில், தத்துவவியலாளர்களை காலந்தோறும் உலுக்கி வந்த கேள்வி சந்திரசேகர் ரெட்டியை பீடித்திருந்தது. மரணத்துக்கு பிறகு வாழ்க்கை இருக்கிறதா? தனக்கு பதில் தெரியுமென ரெட்டி நம்புகிறார். “நீர்தான் வாழ்க்கை,” என்கிறார் அவர். என்வே மயானத்தில் நான்கு ஆழ்துளைக் கிணறுகளை தோண்டியிருக்கிறார். அவரின் வயல்களில் 32 கிணறுகள் இருக்கின்றன. அவரின் நீர்நிலைகளிலிருந்து மொத்த ஜம்புலதனுக்கும் நீரை ஒரு எட்டு கிலோமீட்டர் குழாயில் எடுத்து சென்று மற்றவருக்கும் கொடுக்கிறார்.

நீருக்கான அனந்தப்பூரின் தேடலில் மூடநம்பிக்கை, அமானுஷ்யம், அரசாங்கம் தொழில்நுட்பம் மற்றும் தேங்காய்கள் என எல்லாமும் பங்களிக்கின்றன. அவை எல்லாமும் சேர்ந்து  அளிக்கும் பலன் சிறப்பானதாகவே இருக்கிறது. ஆனால் பூசாரி ஆஞ்சநேயலு வேறுவிதமாக சொல்கிறார்.

மென்மையாக பேசும் அவர், தனது உத்தி தோற்றதில்லை என கூறுகிறார். கடவுளிடமிருந்து அந்த திறமை அவருக்குக் கிடைத்திருக்கிறது. “தவறான நேரத்தில் மக்கள் இதை செய்யும்படி என்னை கட்டாயப்படுத்தும் சமயத்தில் மட்டும்தான் சரியாக இது நடக்காமல் போகும்,” என்கிறார் அவர். (ஒரு ஆழ்துளைக் கிணறு பகுதி கண்டுபிடிக்க, கடவுள் 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்). நம்மை வயல்களினூடாக கையில் தேங்காய் ஏந்தியபடி அழைத்து செல்கிறார்.

PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

பூசாரி ஆஞ்சநேயலு, அனந்தப்பூரின் முட்டலாபுர வயல்களில் ஆழ்துளைக் கிணறு எங்கே தோண்ட வேண்டுமென்பதை கண்டறிய தேங்காய் பயன்படுத்துகிறார்

PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

ராயலப்பொடாட்டீயில்  நீர் இருக்கும் இடத்தை கண்டறியும் வேலைய ராயலப்பா தோமாத்திம்மனா செய்கிறார். ‘90 சதவிகிதம் பலனளித்திருப்பதாக’ அவர் குறிப்பிடுகிறார்

அதிருப்தியாளர்கள் எப்போதுமே இருப்பார்கள். இந்த உத்தியை பயன்படுத்தி சரியாகாத ஒரு விவசாயி இருக்கிறார். “நாங்கள் நீர் கண்டுபிடித்த ஒரே இடம் தேங்காய்க்குள்தான்,” என்கிறார் அவர் கோபமாக.

ராயுலுவின் சுள்ளி மேலெழுந்தது. நீரை கண்டுபிடித்து விட்டார். அவருக்கு ஒரு பக்கத்தில் குளம் இருந்தது. இன்னொரு பக்கத்தில் இயக்கத்திலிருக்கும் ஆழ்துளைக் கிணறு இருந்தது. கடவுள் மீது நம்பிக்கை கிடையாது என்கிறார் ராயுலு. சட்டம், வேறு வழியில்லை. “இப்படி என் திறனை வெளிக்காட்டுவதால், மோசடிக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட மாட்டாது, சரிதானே?” என அவர் கேட்கிறார். நாங்களும் ஆமென உறுதி அளிக்கிறோம். அவரின் உத்தி அளித்த பலனின் விகிதம், அரசாங்கத்தின் நீர் சர்வே செய்பவர்களை விட அதிகம்தான்.

நிலத்தடி நீரியலாளர்களின் பணி மிகவும் குறைவுதான். சில இடங்களில் வேண்டுமானால் அவர்கள் சரியாகக் கண்டறிந்திருக்கலாம். நீர் கண்டறிபவர்கள் போல அலுவலகத்துக்கு வெளியே அவர்களும் பணிபுரிந்து பெருந்தோகை ஈட்டுவது சுலபம். ‘வல்லுநர்’ என்கிற பெயருடன் வந்தால், வாடிக்கையாளர்கள் உறுதி. வல்லுநர்கள் ஆறு மாவட்டங்களில் கண்டறிந்த இடங்களில் பெரும்பாலானவற்றில் நீர் கிடைக்கவில்லை. 400 அடி வரை ஆழ்துளைக் கிணறு சென்றும் பயனில்லை. எனவே பூசாரியும் ராயுலுவும், அதிகரித்து வரும் நீர் கண்டறியும் சமூகத்தின் இரண்டு உறுப்பினர்கள் மட்டும்தான்.

இந்த தொழிலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை பாணி இருக்கிறது. மாநிலம் முழுக்க இருக்கும் அவர்களின் உத்திகள் பலவற்றை இந்து நாளிதழில் பட்டியலிட்டிருக்கிறார் நால்கோண்டாவின் இளம் செய்தியாளரான எஸ்.ராமு. நீர் கண்டறிபவருக்கான முக்கியமான தேவை, அவர் ‘ஓ பாஸிட்டிவ்’ ரத்தப்பிரிவை கொண்டிருக்க வேண்டும். பாம்புகள் வசிக்கும் இடங்களுக்கு கீழே நீரை கண்டறியும் திறன் பெற்றிருக்க வேண்டும். அனந்தப்பூரிலும் இத்தகைய வித்தியாசங்களை கொண்டோர் இருக்கின்றனர்.

இத்தகைய வேடிக்கைகளுக்கு கீழ், வாழ்வதற்கான அச்சுறுத்தல் நிறைந்த ஒரு போராட்டம் மறைந்திருக்கிறது.  அடுத்தடுத்த நான்கு விவசாயப் பருவங்களும் பொய்த்திருக்கின்றன. ரெட்டியின் சுடுகாட்டு ஆழ்துளைக் கிணறுகளும் எதிர்பார்த்தளவுக்கு நீர் தரவில்லை. எல்லாவற்றையும் தாண்டி நீர் தேடும் படலத்தில் கிராம அலுவலர் பத்து லட்சம் ரூபாய் வரை செலவழித்திருக்கிறார். அவரின் கடன் மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. “கடந்த வாரம், அரசாங்க உதவி எண்ணுக்கு நான் தொடர்பு கொண்டேன்,” என்கிறார் அவர். “இப்படியே நான் தொடர முடியாது. கொஞ்சமேனும் நீர் எங்களுக்கு வேண்டும்.”

PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

சந்திரசேகர் ரெட்டி சுடுகாட்டில் நான்கு ஆழ்துளைக் கிணறுகள் தோண்டியிருக்கிறார். வயல்களில் அவருக்கு 32 கிணறுகள் இருக்கின்றன.  அவரின் நீர்நிலைகளிலிருந்து மொத்த ஜம்புலதனுக்கும் நீரை ஒரு எட்டு கிலோமீட்டர் குழாயில் எடுத்து சென்று மற்றவருக்கும் கொடுக்கிறார்

அதிகரிக்கும் விவசாய் நெருக்கடி மற்றும் விவசாயத் தற்கொலைகளை கையாளுவதற்காக ஆந்திராவின் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அரசாங்கத்தால் அந்த உதவி எண் உருவாக்கப்பட்டது. விவசாய தற்கொலைகள் நடக்கும் மாநிலத்தில், அனந்தப்பூர் மாவட்டத்தில்தான் தற்கொலைகள் அதிகம். கடந்த ஏழு வருடங்களில் மட்டும், 500-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக சொல்கிறது அரசாங்கத் தரப்பு. பிற தரவுகளில் அந்த எண்ணிக்கையை தாண்டிய அளவு இருக்கிறது.

உதவி எண்ணில் ரெட்டி அழைத்தது, தெளிவான எச்சரிக்கை அறிகுறியை அளித்திருக்க வேண்டும். தற்கொலைகள் அதிகம் நடக்கும் இடத்தில், எளிதில் பாதிக்கப்படத்தக்க சூழல் கொண்ட நபர் அவர். நீருக்கு கனவு கண்டு, கடனில் மூழ்கிக் கொண்டிருப்பவர். அதிகமாக அவர் முதலீடு செய்திருக்கும் தோட்டக்கலை நாசமாகி இருக்கிறது. அவருடைய ஆழ்துளைக் கிணறுகளுக்கும் அதுவே கதி.

இத்தகைய நெருக்கடியை சரியாக சுரண்டிக் கொள்ளும் இடத்தில் பணக்காரர்கள் இருக்கின்றனர். தனியார் நீர் சந்தைகள் உடனே உருவாயின. ஆதிக்கம் செலுத்தும் ‘நீர் பிரபுக்கள்’, தங்களின் ஆழ்துளைக் கிணறுகளில் எடுக்கப்பட்ட நீருக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கின்றனர்.

வயலை “நனைப்பதற்கு” மட்டும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 7,000 ரூபாய் வரையிலான விலைக்கு நீர் வாங்க வேண்டும். இதற்கு அர்த்தம், இருக்கும் நீரை எல்லாம் சேமித்து வைத்திருந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதே நீரை நீங்கள் ஒரு டாங்கரை வாங்கியும் பெறலாம்.

இத்தகைய சூழலில் வணிகம் எளிதாக மேலேழுந்து விடுகிறது. “இவை யாவும் விவசாய இடுபொருள் செலவை என்ன செய்யுமென யோசித்து பார்த்தீர்களா?” எனக் கேட்கிறார் ரெட்டி. நீர் கண்டறிபவர்கள் கூட தங்களின் அற்புதங்களை, நெடுஞ்சாலைக்கு அருகே இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை ஓட்டிதான் செய்கிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக இவை நேர்கிறது. குடிநீரும் பெரும் பிரச்சினைதான். 1.5 லட்சம் பேர் வசிக்கும் இந்துப்பூர் டவுன், குடிநீருக்காக வருடத்துக்காக எட்டு கோடி ரூபாய் செலவழிக்கிறது. ஒரு உள்ளூர் நீர் பிரபு, நகராட்சி அலுவலகத்தை சுற்றி இருக்கும் நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறார்.

PHOTO • P. Sainath

ஆழ்துளைக் கிணறு தோண்டும் கருவிகள் பகுதிகள் முழுக்க நகர்ந்து பயணிக்கிறது

நீருக்கான அனந்தப்பூரின் தேடலில் மூடநம்பிக்கை, அமானுஷ்யம், அரசாங்கம் தொழில்நுட்பம் மற்றும் தேங்காய்கள் என எல்லாமும் பங்களிக்கின்றன. அவை எல்லாமும் சேர்ந்து  அளிக்கும் பலன் சிறப்பானதாகவே இருக்கிறது

இறுதியில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. நான்கு நாள் மழை, விதைப்பை முன் நகர்த்தும். தற்கொலைகள் நின்று, நம்பிக்கை மீண்டும் வரலாம். எனினும் பிரச்சினை முடிந்த பாடில்லை. நல்ல விளைச்சல் நல்ல வரவேற்பை பெற்றாலும், பிற பிரச்சினைகளையும் உருவாக்கவல்லது.

“நல்ல பயிர், புதிய தற்கொலைகளை உருவாக்கலாம்,” என்கிறார் அனந்தப்பூரின் கிராம மேம்பாடு அறக்கட்டளையின் சூழல் மைய இயக்குநரான மல்லா ரெட்டி. “ஒரு விவசாயி அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம். ஆனால் பல வருட விவசாயம் பொய்த்ததில், அவர் அடைக்க வேண்டிய கடனே 5-6 லட்சம் ரூபாய் அளவுக்கு இருக்கும். நெருக்கடி பல திருமணங்களை தாமதித்திருக்கிறது. அவை இனி நடக்கும்.

“கடுமையான புதிய இடுபொருள் செலவுகளை வேறு சமாளிக்க வேண்டும். இத்தனையையும் விவசாயி எப்படி எதிர்கொள்வார்? கடன்காரர்களின் அழுத்தம் சில மாதங்களில் அதிகரிக்கும். கடன்களும் தீராது.”

விவசாயப் பிரச்சினைகளை பொறுத்தவரை, அவை இங்கு மிக அதிகம். நீருக்கான கனவில், கடனில் மூழ்கும் நிலை.

தமிழில்: ராஜசங்கீதன்

P. Sainath

ପି. ସାଇନାଥ, ପିପୁଲ୍ସ ଆର୍କାଇଭ୍ ଅଫ୍ ରୁରାଲ ଇଣ୍ଡିଆର ପ୍ରତିଷ୍ଠାତା ସମ୍ପାଦକ । ସେ ବହୁ ଦଶନ୍ଧି ଧରି ଗ୍ରାମୀଣ ରିପୋର୍ଟର ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିଛନ୍ତି ଏବଂ ସେ ‘ଏଭ୍ରିବଡି ଲଭସ୍ ଏ ଗୁଡ୍ ଡ୍ରଟ୍’ ଏବଂ ‘ଦ ଲାଷ୍ଟ ହିରୋଜ୍: ଫୁଟ୍ ସୋଲଜର୍ସ ଅଫ୍ ଇଣ୍ଡିଆନ୍ ଫ୍ରିଡମ୍’ ପୁସ୍ତକର ଲେଖକ।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ ପି.ସାଇନାଥ
Translator : Rajasangeethan

ରାଜସଙ୍ଗୀତନ୍‌ ଚେନ୍ନାଇରେ ରହୁଥିବା ଜଣେ ଲେଖକ। ସେ ଏକ ଅଗ୍ରଣୀ ତାମିଲ ସମାଚାର ଚାନେଲରେ ସାମ୍ବାଦିକ ଭାବେ କାର୍ଯ୍ୟରତ ଅଛନ୍ତି।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Rajasangeethan