“தற்போதைய பட்ஜெட் எங்களின் பிழைப்பை பற்றி எதுவும் சொல்லவில்லை. இது மத்திய தர வர்க்கத்தை, குறிப்பாக ஊதியம் வாங்குபவர்களை மட்டும்தான் பிரதானமாக கவனம் செலுத்தியிருக்கிறது,” என்கிறார் கீதா வழச்சல்.
எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி குழுவாக (PVTG) வரையறுக்கப்பட்டிருக்கும் காடர் சமூகத்தை சேர்ந்த 36 வயது கீதா, கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அதிரப்பள்ளி நீர் மின்சார திட்டத்துக்கான பகுதியில் வசிக்கிறார்.
சாலக்குடி ஆற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் அணையால், அவரது சமூகம் நான்காவது முறை இடம்பெயர்த்தப்படவிருக்கிறது. “நாடு முழுவதும் நடந்து வரும் பெருமளவுக்கான உள்கட்டமைப்பு பணிகளின் விளைவாக நாங்கள் பெருமளவில் இடப்பெயர்வுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம். மேலும் எங்களின் நிலம், காடுகள் மற்றும் வளம் ஆகியவற்றை கைப்பற்றிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகளை பற்றிய பேச்சும் இல்லை,” என சுட்டிக் காட்டுகிறார் கீதா. அணைக்கு எதிரான போராட்ட இயக்கத்தின் முகமாக அவர் மாறியிருக்கிறார்.
“காடுகளில் வாழும் பழங்குடி சமூகங்களுக்கு காலநிலை மாற்றம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் எங்களின் காடுகளும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டு வருகிறது,” என்கிறார் கீதா. கேரளாவின் ஒரே பழங்குடி பெண் தலைவர் அவர்தான்.




