“என்னுடைய இடது கண்ணில் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. பளீர் வெளிச்சம் கண்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது. பெரும் வலி கொடுக்கிறது. நான் இத்தகைய சவால் நிறைந்த சூழலில் இருக்க இதுதான் காரணம்,” என்கிறார் மேற்கு வங்க தெற்கு 24 பர்கனாஸின் பங்காவோன் டவுனை சேர்ந்த இல்லத்தரசியான பிரமிளா நாஸ்கர். 40 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் அவர், கொல்கத்தாவின் பார்வையியல் வட்டார நிறுவனம் நடத்தும் விழி வெண்படல நோய்க்கான வாராந்திர மையத்துக்கு வந்திருந்த இடத்தில் எங்களுடன் பேசினார்.
பிரமிளா நஸ்காரை என்னால் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு புகைப்படக் கலைஞருக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லையென்றாலும் பெரும் சிக்கல். எனக்கு இடது கண்ணில் விழி வெண்படல அல்சர் 2007ம் ஆண்டில் இருந்தது. கிட்டத்தட்ட பார்வை பறிபோகும் சூழல். நான் வெளிநாட்டில் அச்சமயத்தில் இருந்ததால் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது. ஒன்றரை மாதங்களாக, சிகிச்சைக்கு பிறகு முழு பார்வை கிடைக்க பெரும் சித்ரவதை அனுபவித்தேன். எனினும் கண் சரியான பிறகு பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எனக்கு பார்வை பறிபோய் விடுமோ என்ற பயம் இருக்கிறது. பார்வை போனால் என்னை போன்ற ஒரு புகைப்படக் கலைஞருக்கு அது எத்தனை பெரிய துயரமாகும் என்பதை கற்பனை செய்து பார்த்துக் கொள்வேன்.
உலக சுகாதார நிறுவனத்தின்படி (WHO) உலகளவில் “குறைந்தபட்சம் 2.2 பில்லியன் மக்களுக்கு பார்வைக் கோளாறு இருக்கிறது. குறைந்தபட்சமாக 1 பில்லியன் - கிட்டத்தட்ட பாதி - பாதிப்புகளில் பார்வை பறிபோவதை தவிர்த்திருக்க முடியும்…”
உலகளவில் பார்வை பறிபோவதற்கான காரணங்களில் முதன்மையான கண்புரை நோய். அதற்கு அடுத்தபடியாக இருப்பது விழி வெண்படல நோய். விழி வெண்படல பார்வை பறிபோகும் நோயின் பரவும் தன்மை மிகவும் நுட்பமானது. பல வித எரிச்சல் மற்றும் வைரஸ் தொற்று காரணங்களால் விழி வெண்படலத்தில் பிரச்சினை ஏற்படத் தொடங்கி, இறுதியில் பார்வை பறிபோகும் நிலை ஏற்படுகிறது. கூடுதலாக, விழி வெண்படல் நோயின் பரவும் எண்ணிக்கையும் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.





















