தேர்தலில் பப்லு கைப்ரடா வாக்களிப்பதற்கான இரண்டாவது வாய்ப்பு இது.
கடந்த தேர்தலில் முதன்முறையாக பப்லு வாக்களிக்க சென்றபோது, அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதித்தனர். வரிசையில் அவர் காத்திருக்கவில்லை. மேற்கு வங்க புருலியா மாவட்டத்தின் பல்மா கிராமத்திலுள்ள வாக்குச்சாவடிக்குள் சென்ற பிறகு, எப்படி வாக்களிப்பது என பப்லுவுக்கு தெரியவில்லை.
24 வயதாகும் பப்லு பார்வைத் திறன் குறைபாடு கொண்டவர். ப்ரெய்ல் வாக்குச் சீட்டுகளுக்கோ ப்ரெய்ல் முறை வாக்கு இயந்திரத்துக்கோ 2019 தேர்தல் வாக்குப்பதிவு நடந்த உள்ளூர் ஆரம்பப் பள்ளியில் சாத்தியம் இல்லை.
“எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. எனக்கு உதவுபவர் சின்னங்களை குறித்து பொய் சொன்னால் என்ன செய்வது?” இரண்டாம் வருட இளங்கலை படிக்கும் மாணவரான பப்லு கேட்கிறார். அந்த நபர் உண்மையையே சொன்னாலும் கூட, ரகசிய வாக்குப்பதிவு என்கிற ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டதாகி விடுமே என வாதிடுகிறார். அந்த நபர் காட்டிய பொத்தானைதான் பதட்டத்துடன் பப்லு அழுத்தினார். வெளியே வந்த பிறகு அதை உறுதி செய்தும் கொண்டார். “நல்லவேளையாக அந்த நபர் பொய் சொல்லவில்லை,” என்கிறார் அவர்.
ப்ரெய்ல் வாக்குச்சீட்டுகளும் வாக்கு இயந்திரங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது. “பல விதிமுறைகள் செய்தித்தாளில் இருந்தன,” என்கிறார் கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ருதி மாற்றுத்திறனாளி உரிமைகள் மையத்தின் இயக்குநரான ஷம்பா சென்குப்தா. “ஆனால் அமலாக்கம்தான் மோசமாக இருக்கிறது.”
மீண்டும் தேர்தல் வந்துவிட்டது. ஆனால் ஆறாம் கட்ட வாக்குப்பதிவுக்கு வீட்டிலிருந்து கிளம்பி செல்வதா என பப்லு யோசிக்கிறார். பப்லு வாக்காளராக பதிவு செய்திருக்கும் புருலியா மாவட்டத்தில் மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.





