1937ம் ஆண்டு ரத்தவெள்ளத்தில் நடந்த பிரிவினையின் விளைவாக இரண்டு நாடுகளின் எல்லைகளைக் குறிக்கும் ராட்க்ளிஃப் கோடு, பஞ்சாபையும் இரு பாதிகளாக பிரிக்கிறது. எல்லை வாரியங்களின் தலைவராக பணியாற்றிய பிரிட்டிஷ் வழக்கறிஞரின் பெயர் சூட்டப்பட்டிருக்கும் கோடு, பகுதிகளை பிரிப்பதோடு மட்டுமின்றி, பஞ்சாபி மொழியின் எழுத்துருக்களையும் பிரித்திருக்கிறது. “இலக்கியத்துக்கும் பஞ்சாபி மொழியின் இரு எழுத்துருக்களுக்கும் நீங்கா ரணத்தை பிரிவினை ஏற்படுத்தியிருக்கிறது,” என்கிறார் லூதியானா மாவட்டத்தின் பயால் தாலுகாவிலுள்ள கதாஹ்ரி கிராமத்தை சேர்ந்த கிர்பால் சிங் பன்னு.
பிரிவினை காயத்தின ரணத்தை தணிக்க தன் முப்பது வருட வாழ்க்கையை அர்ப்பணித்தவர் இந்த 90 வயது முன்னாள் ஆயுதக் காவல்படைவீரரான பன்னு. எல்லை பாதுகாப்பு படையின் ஓய்வு பெற்ற துணை தளபதியான பன்னு, குரு கிரந்த் சாகிப், மகான் கோஷ் (பஞ்சாபில் பெரிதும் மதிக்கப்படும் தகவல் களஞ்சியம்) போன்ற புனித நூல்களையும் பிற இலக்கியங்களையும் குர்முகியிலிருந்து ஷாமுகிக்கும் ஷாமுகியிலிருந்து குர்முகிக்கும் ஒலிபெயர்த்திருக்கிறார்.
உருது போல வலமிருந்து இடப்பக்கம் எழுதப்படும் ஷாமுகி எழுத்துருக்கள், 1947ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் பஞ்சாபில் பயன்படுத்தப்படவில்லை. 1995-1996-ல், குரு கிராந்த் சாகிபை குர்முகியிலிருந்து ஷாமுகிக்கும் ஷாமுகியிலிருந்து குர்முகிக்கும் ஒலிபெயர்க்கும் ஒரு கணிணி ப்ரோக்ராமை பன்னு உருவாக்கினார்.
பிரிவினைக்கு முன், உருது பேசுபவர்களும் ஷாமுகி எழுத்துருக்கள் கொண்டு எழுதப்பட்ட பஞ்சாபி மொழியை வாசிக்க முடிந்தது. பாகிஸ்தான் உருவானதற்கு முன் பல இலக்கியங்களும் அதிகாரப்பூர்வ ஆவணங்களும் ஷாமுகியில்தான் வெளியாகின. அந்த காலக்கட்டத்தின் பாரம்பரிய கதைசொல்லல் வடிவமான கிஸ்ஸா கூட, ஷாமுகியைதான் பயன்படுத்தியது.
இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கத்துக்கு எழுதப்பட்டு தேவநாகரி எழுத்தைப் போல் இருக்கும் குர்முகி எழுத்துருக்கள் பாகிஸ்தானிலிருக்கும் பஞ்சாபில் பயன்படுத்தப்படுவதில்லை. விளைவாக, பிறகு வந்த பஞ்சாபி பேசும் பாகிஸ்தானியர் தலைமுறைகளால் குர்முகி வாசிக்க முடியவில்லை. அவர்களுக்கான இலக்கியத்திலிருந்தே அவர்கள் அந்நியமானார்கள். அவர்களுக்கு தெரிந்த ஷாமுகி எழுத்துருக்களில் வெளியானால்தான், பிரிக்கப்படாத பஞ்சாபின் பெருமைக்குரிய இலக்கியங்களை அவர்கள் வாசித்தறிய முடியும்.













