“கிட்டத்தட்ட 450 பறவைகளின் சத்தங்கள் எனக்குத் தெரியும்.”
மிகா ராயின் முக்கியமான திறன் அது. ஒரு வன புகைப்படக் கலைஞராக அரிய பறவைகளையும் விலங்குகளையும் படம் பிடிப்பது பெரும் காத்திருப்பு இருக்கும் வேலை. சத்தத்தை கண்டறிய முடிந்தால் மொத்தமுமே கைவசப்படும்.
சிறகு கொண்ட உயிரினங்கள் தொடங்கி ரோமம் கொண்ட பாலூட்டிகள் வரை, மிகா 300 வகை உயிர்களை இதுவரை படம் பிடித்திருக்கிறார். மிக அரிதாக கண்ணில் படும் திரகோபன் கோழியை ( Tragopan blythii ) பற்றி நினைவுகூருகிறார்.
அக்டோபர் 2020-ல் மிகா ஒரு சிக்மா 150 மிமீ-600 மிமீ டெலிஃபோடோ சூம் லென்ஸ் வாங்கியிருந்தார். அதில் திரகோபன் கோழியை படம் பிடித்துவிட வேண்டுமென அவர் தீர்மானித்திருந்தார். கோழியின் அழைப்புகளை தொடர்ந்து விடா முயற்சியுடன் சென்றார். “பல மாதங்களாக தொடர்ந்தும் புகைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை.”
இறுதியாக மே 2021-ல் மீண்டும் மிகா, திரகோபன் கோழியின் சத்தங்களை கேட்டு அருணாச்சல பிரதேசத்தின் ஈகுள்நெஸ்ட் வன உயிர் சரணாலயத்தின் அடர் காடுகளில் அலைந்தார். அங்குதான் கோழி கண்ணில் பட்டது. நிகான் D7200-டன் சிக்மா 150 மிமீ-600 மிமீ டெலிபோட்டோ லென்ஸுடன் சரியான இடத்தில் இருந்தார். ஆனால் அவர் பதற்றம் குலைத்து விட்டது. “மங்கலான புகைப்படம்தான் கிடைத்தது. அதில் பயனில்லை,” என நினைவுகூருகிறார்.
இரு வருடங்கள் கழித்து, மேற்கு காமெங்கின் போம்பு முகாம் அருகே, அந்த மாயப் பறவையின் பளீர் சிவப்பு நிறம், சற்று இலைகளில் மறைந்து தெரிந்தது. இம்முறை மிகா தவறவிடவில்லை. 30-40 பதிவுகளில் அவர் 1-2 நல்ல புகைப்படங்கள் பெற்றார். முதன்முறையாக அது பாரியில் பதிப்பிக்கப்பட்டது. சுரங்கத்தில் கேனரி பறவை
பெங்களூருவின் இந்திய அறிவியல் மையம் (IISc), அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமேங் மாவட்டத்தின் கிழக்கு இமயமலைகளிலுள்ள பறவைகள் மீது காலநிலை மாற்றம் செலுத்தும் தாக்கம் குறித்து நடத்தும் ஆய்வுக்காக அறிவியலாளர்களுக்கு உதவும் உள்ளூர்வாசிகளில் மிகாவும் ஒருவர்.
“மிகா போன்றவர்கள்தான் நாங்கள் ஈகுள்நெஸ்ட்டில் செய்யும் பணியின் முதுகெலும்பு. களத்தில் வேலை பார்த்து, எங்களுக்கு தேவையான தரவுகளை சேகரிக்கும் பணி அவர்களின்றி சாத்தியப்பட்டிருக்காது,” என்கிறார் பறவையியலாளரான டாக்டர் உமேஷ் ஸ்ரீநிவாசன்.
பறவைகளின்பால் மிகா கொண்டிருக்கும் ஆர்வம் அறிவியலையும் தாண்டிய விஷயம். ஆசிர்வாதப் பறவை குறித்த நேபாள கதையை அவர் சொல்கிறார். “சித்தியின் கொடுமையில் பாதிக்கப்பட்ட ஒருவன் காட்டில் தஞ்சம் அடைகிறான். காட்டுப் பழங்களை உண்டு வந்து ஒரு கட்டத்தில் பறவையாக மாறுகிறான். இந்த வண்ணமயமான பறவை, மனிதர்களுக்கும் இயற்கைக்கும் நேபாளிய பாரம்பரியத்தில் இருக்கும் தொடர்பை அடையாளப்படுத்துகிறது,” என்கிறார் மிகா. அவர் சொல்லும் குரால் ஆந்தைதான் ஆசிர்வாதப் பறவையாக பலராலும் நம்பப்படுகிறது. அரிதாக இருக்கும் அதன் தன்மைதான் அதன் மாயத்தன்மைக்குக் காரணம்.
காட்டில் பறவைகளை தேடிச் செல்கையில், மிகாவும் பிறரும் உலகின் பெரிய மாட்டு விலங்குகளான இந்திய பைசன் விலங்குகளை எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது.
மிகாவும் இரண்டு நண்பர்களும் ஒரு மழை நாளில் மழைக்கு பிறகு சாலையை சுத்தப்படுத்த வந்திருக்கிறார்கள். மூவரும் 20 மீட்டர் தொலைவில் ஒரு பைசனை கண்டிருக்கின்றனர். “நான் சத்தம் போட்டேன். காட்டெருது எங்களை நோக்கி முழு வேகத்தில் ஓடி வந்தது!” உடனே ஒரு நண்பர் கடகடவென ஒரு மரத்தில் ஏறியக் கதையை சொல்லி சிரிக்கிறார் மிகா. அவரும் இன்னொரு நண்பரும் தப்பி விட்டனர்.
ஈகுள்நெஸ்ட் காட்டில் தனக்கு பிடித்த விலங்கென நடுத்தர அளவுள்ள வனப்பூனையான ஆசியப் பொன்னிறப் பூனையை சொல்கிறார் அவர். ஒருநாள் மாலைப் பொழுதில் போம்பு முகாமுக்கு செல்லும் வழியில் அவர் அப்பூனையைக் கண்டிருக்கிறார். “என்னிடம் ஒரு கேமரா (நிகான் D7200) இருந்தது. உடனே புகைப்படம் எடுத்து விட்டேன்,” என்கிறார் சந்தோஷமாக. “ஆனால் அதை மீண்டும் பார்க்கவில்லை.”
*****
மேற்கு காமெங்கின் டிராங்கில் பிறந்தவர் மிகா. பிறகு அதே மாவட்டத்திலுள்ள ராமலிங்கம் கிராமத்துக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. “அனைவரும் என்னை மிகா ராய் என அழைப்பார்கள். இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் மிகா ராய் என்கிற பெயரில்தான் இருக்கிறேன். ஆவணங்களில் ‘ஷம்பு ராய்’ என இருக்கும்,” என்கிறார் 5ம் வகுப்பில் படிப்பை நிறுத்தி விட்டவர். 29 வயதாகும் அவர், “பணம்தான் பிரச்சினை. என் தம்பிகள் படிக்க வேண்டும்,” என்கிறார்.
அடுத்த சில வருடங்கள் கடும் வேலையில் சென்றது. டிராங்கில் சாலைக் கட்டுமானப் பணியிலும் ஈகுள்நெஸ்ட் வன உயிர் சரணாலயத்தின் போம்பு முகாமிலும் லாமா முகாமிலும் சமையலராகவும் பணிபுரிந்தார்.
பதின்வயதுகளின் மத்தியில் மிகா ராமலிங்கத்துக்கு திரும்பினார். “பெற்றோருக்கு வயலில் உதவியபடி நான் வீட்டில் இருந்தேன்.” அவரின் குடும்பம் நேபாளை பூர்விகமாகக் கொண்டது. புகுன் சமூகத்திலிருந்து ஒத்திக்கு பெற்றிருக்கும் 4-5 பிகா நிலத்தில் முட்டைக்கோஸும் உருளைக்கிழங்குகளும் விளைவிக்கிறார்கள். விளைச்சலை நான்கு மணி நேரப் பயண தூரத்தில் இருக்கும் அசாமின் தெஜ்பூரில் விற்கின்றனர்.
பறவையியலாளரும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் சூழலியல் அறிவியல்கள் மையத்தின் சூழலியல் உதவி பேராசிரியருமான டாக்டர் உமேஷ் ஸ்ரீநிவாசன், பறவைகளின் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ராமலிங்கத்துக்கு வந்தார். களப்பணியாளராக வேலை பார்க்க 2-3 இளைஞர்களை கேட்டார். நிலையான வருமானம் கிடைக்க அந்த வாய்ப்பை மிகா பிடித்துக் கொண்டார். ஜனவரி 2011-ல் 16 வயது மிகா, ஸ்ரீநிவாசன் குழுவில் களப்பணியாளராக பணியாற்ற ஆரம்பித்தார்.
தன்னுடைய உண்மயான கல்வி அருணாச்சல பிரதேச காடுகளில் தொடங்கியதாக அவர் சந்தோஷமாக சொல்கிறார். “மேற்கு காமெங் மாவட்ட பறவைகளின் சத்தங்களை அடையாளங்காணுவது எளிமையாக இருக்கிறது,” என்கிறார். அவருக்கு பிடித்த “சிக்கிம் தவிட்டுக் குருவி பறவை அதிகம் பார்க்க முடியவில்லை,” என்கிறார். “அதன் இயல்பு பிடிக்கும்,” என அவர் அப்பறவையில் தனித்துவமான அலகு மற்றும் வெள்ளை வட்டங்கள் கொண்ட கண்களை குறிப்பிடுகிறார். அரியப் பறவையான அதை சில இடங்களில்தான் பார்க்க முடியும். அருணாச்சல பிரதேசம், நேபாளின் கிழக்கு பக்கம், சிக்கிம் மற்றும் கிழக்கு பூடான் ஆகிய இடங்களில் பார்க்கலாம்.
“சமீபத்தில் நான் சோலைபாடி பறவையை [ Copsychus malabaricus ] 2,000 மீட்டர் உயரத்தில் படம்பிடித்தேன். வழக்கத்துக்கு மாறான விஷயம் இது. ஏனெனில் அப்பறவை வழக்கமாக 900 மீட்டர் அல்லது அதற்கும் குறைவான உயரங்களில்தான் வசிக்கும். வெப்பத்தினால், பறவை தன் இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது,” என்கிறார் மிகா.
அறிவியலாளர் ஸ்ரீநிவாசன் சொல்கையில், “கிழக்கு இமயமலைப் பகுதிகள்தான், உலகிலேயே இரண்டாவது பெரிய பன்மையப் பகுதிகளாகும். அங்கு காணப்படும் பல உயிர்கள் தட்பவெப்பத்துடன் நுட்பமாக இயைந்தவை. அந்த இடங்களில் காலநிலை மாற்றம் என்பது, பூமியின் உயிர்களில் கணிசமான அளவின் வாழ்க்கையை அச்சுறுத்தவல்லது,” என்கிறார். குறிப்பிட்ட உயரத்தில் வசிக்கும் பூர்விகப் பறவைகள் மெல்ல இன்னும் அதிக உயரங்களுக்கு செல்வதாக தங்களின் பணி தெரிவிக்கிறது என்கிறார். வாசிக்க: சுரங்கத்தில் கேனரி பறவை
காலநிலை மாற்றத்தில் ஆர்வம் கொண்ட சக புகைப்படக் கலைஞராக நான், பறவைகளின் புகைப்படங்களை செல்பேசியில் மிகா காட்டுவதை பரவசத்துடன் பார்க்கிறேன். அவர் அதை சுலபமான விஷயம் போல் சொல்கிறார். ஆனால் என் சொந்த அனுபவத்தில், அது கடுமையான வேலை என்பது தெரியும். சரியாக காட்சி அமைய அர்ப்பணிப்பு உணர்வும் பெரும் காத்திருப்பும் தேவை.
*****
குழுவின் முகாமிடம், உலகின் பறவையியலாளர்கள் விரும்பும் முக்கிய இடமான ஈகுள்நெஸ்ட் வன உயிர் சரணாலயத்துக்குள் இருக்கும் போம்பு முகாம். மரத் தடிகளையும் உடைந்த கான்க்ரீட்டை சுற்றி கட்டப்பட்ட தார்ப்பாயும்தான் வசிப்பிடம். ஆய்வுக்குழுவில் அறிவியலாளர்களும் ஒரு பயிற்சி பணியாளரும் மேற்கு காமெங்க் மாவட்டத்தை சேர்ந்த ஒரு களப் பணியாளரும் இருக்கின்றனர். டாக்டர் உமேஷ் ஸ்ரீநிவாசனின் தலைமையிலான குழுவில் மிகா முக்கிய அங்கம் வகிக்கிறார்.
மிகாவும் நானும் ஆய்வுக் குடிசையில் நிற்கும்போது நன்றாக காற்றடிக்கிறது. அடர்ந்த மேகக்கூட்டங்களுக்கு இடையே அவ்வப்போது சுற்றியிருக்கும் சிகரங்களின் முகடுகள் தலை காட்டுகின்றன. மாறும் காலநிலை பற்றி அவர் பேசுவதை கேட்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.
“குறைந்த உயரங்களில் நிறைய வெப்பம் இருந்தால், மலைப்பகுதியில் அது வேகமாக பரவும். இங்குள்ள மலைப்பகுதிகளில் வெப்பம் உயர்ந்து வருகிறது. காலநிலை மாற்றத்தால், மழைக்காலம் தலைகீழாக மாறிவிட்டது,” என்கிறார் அவர். “தொடக்கத்தில், வெப்பநிலையின் தன்மை மக்களுக்கு தெரியும். முதியவர்கள் பிப்ரவரியை குளிர்காலமாகவும் மேகங்கள் நிறைந்த காலமாகவும் நினைவில் வைத்திருக்கின்றனர்.” இப்போது பிப்ரவரியில், தவறி பெய்யும் மழையால் விவசாயிகளுக்கும் அவர்களின் பயிர்களுக்கும் பெரும் பிரச்சினை நேர்கிறது.
பறவைகளாலும் உயர் மரங்களாலும் சூழப்பட்டிருக்கும் ஈகுள்நெஸ்ட் சரணாலயத்தின் செழித்த காடுகளுக்குள்ளிருந்து காலநிலை மாற்றத்தின் பாதிப்பை ஒருவர் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்தியாவின் கிழக்கு முனையில் சூரியன் உதிக்கிறது. பணியாளர்கள் அதிகாலை 3.30 மணிக்கு விழிக்கின்றனர். வெயில் ஏறுகையில் கடும் உழைப்பில் இருக்கின்றனர். வெள்ளை பொதிகளாக மேகங்கள் மெதுவாக கடந்து செல்கின்றன.
ஸ்ரீநிவாசனின் வழிகாட்டலில் மிகா ‘பனி வலை’ கட்ட கற்றுக் கொண்டார். பறவைகளை பிடிக்கவென, நைலான் அல்லது பாலிஸ்டர் நூலால் இரண்டு மூங்கில் தடிகளுக்கு இடையே கட்டப்படும் நுண்ணிய வலை அது. பிடித்ததும் பறவைகளை ஒரு பைக்குள் வைப்பார்கள். சிறு பையிலிருந்து கவனமாக பறவையை எடுக்கும் மிகா அதை ஸ்ரீநிவாசனின் கையில் கொடுக்கிறார்.
வேகமாக வேலை நடக்கிறது. பறவையின் எடை, சிறகின் நீளம், கால்களின் நீளம் ஆகியவை ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் அளக்கப்படுகிறது. காலில் ஓர் அடையாள வளையம் கட்டப்பட்ட பிறகு, பறவை விடப்படுகிறது. பறவையைப் பிடித்து, பனி வலை கட்டி, தற்காலிக மேஜைக்கு கொண்டு வரப்பட்டு, அளக்கப்பட்டு பிறகு மீண்டும் விடுவிக்கப்படும் இந்த மொத்த முறைக்கும் சுமாராக 15-20 நிமிடங்கள் ஆகிறது. குழுவினர் இந்த செயல்முறையை 20 நிமிடங்களிலிருந்து அரைமணி நேரம் வரை எட்டு மணி நேரங்களுக்கு செய்கின்றனர். 13 வருடங்களாக மிகா இந்த வேலையை செய்து வருகிறார்.
“முதலில் நாங்கள் பறவைகளை பிடிக்கத் தொடங்கியபோது, ஒயிட் ஸ்பெக்டகல்ட் வார்ப்லர் ( Seicercus affinis ) போன்ற வார்த்தைகளை சொல்வது கடினமாக இருந்தது. ஆங்கிலம் பேசும் பழக்கம் எங்களிடம் இருந்ததில்லை. இந்த வார்த்தைகளை நாங்கள் கேட்டதுமில்லை,” என்கிறார் மிகா.
ஈகுள்நெஸ்ட் சரணாலயத்தின் பயிற்சியால் மிகா, மேகாலயாவுக்கு பயணிக்க நேர்ந்தது. அங்கு பெருமளவு காடுகள் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கின்றன. “சிராபுஞ்சியில் (2012ம் ஆண்டில்) 10 நாட்களுக்கு சுற்றி திரிந்தும் 20 வகைகளுக்கு மேல் பறவைகளை நாங்கள் பார்க்க முடியவில்லை. பிறகுதான் ஈகுள்நெஸ்ட்டில் பணிபுரிய விரும்பினேன். ஏனென்றால் இங்கு பல வகைகள் இருக்கின்றன. போம்புவில் பல வகைகள் அமர்ந்திருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.”
“கேமராவில் ஆர்வம் 2012ம் ஆண்டில் வந்தது,” என்கிறார் மிகா. வருகைதரு அறிவியலாளரான நந்தினி வெல்ஹோவிடமிருந்து கேமராவை கடன் வாங்குவார். “பச்சைவால் தேன் சிட்டு ஒரு வழக்கமான பறவை. பயிற்சிக்காக அதை படம்பிடிக்கத் தொடங்கினேன்.”
சில வருடங்கள் கழித்து, பறவைகளை காண விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டத் தொடங்கினார். 2018ம் ஆண்டில் பம்பாய் இயற்கை வரலாறு குழு (BNHS) மும்பையிலிருந்து வந்திருந்தது. அவர்கள் கேட்ட புகைப்படங்களை அவர் எடுத்தார். படம் பிடிப்பதில் அவருக்கு இருந்த சந்தோஷத்தைக் கண்டு, குழு உறுப்பினர்களில் ஒருவர் நிகான் P9000-ஐ கொடுத்தார். “சார், நான் ஒரு DSLR வாங்க விரும்புகிறேன். இந்த கேமரா வேண்டாம்,” என சொன்னதாக நினைவுகூருகிறார்.
அதே குழுவின் நான்கு உறுப்பினர்கள் அளித்த பொருளுதவை மற்றும் தன் சேமிப்பை கொண்டு, “50,000 ரூபாய் சேகரித்தேன். ஆனால் விலை ரூ.55,000 எனவே என் தலைவர் (உமேஷ்) மிச்சத்தை கொடுப்பதாக சொன்னார்.” 2018ம் ஆண்டில் மிகா, தனது முதல் DSLR கேமராவை வாங்கினார். 18-55 மிமீ லென்ஸுடன் கூடிய நிகான் D7200 கேமரா அது.
”2-3 வருடங்களுக்கு சின்ன 18-55 மிமீ ஸூம் லென்ஸை பயன்படுத்தி வீட்டை சுற்றியிருக்கும் பூக்களை படம் பிடித்தேன்.” தூரத்தில் இருந்து கொண்டு பறவைகளின் க்ளோசப் புகைப்படங்களை எடுக்க சக்தி வாய்ந்த டெலிஃபோட்டோ லென்ஸ் தேவை. “சில வருடங்கள் கழித்து, 150-600 மிமீ சிக்மா லென்ஸ் வாங்க வேண்டுமென நினைத்தேன்.” ஆனால் அந்த லென்ஸை பயன்படுத்துவது மிகாவுக்கு கடினமாக இருந்தது. அபெர்ச்சர், ஷட்டர் ஸ்பீட் மற்றும் ஐஎஸ்ஓ ஆகியவற்றின் தொடர்பை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. “நான் படம் பிடித்த புகைப்படங்கள் மோசமாக இருந்தன,” என நினைவுகூருகிறார். ஒளிப்பதிவாளரும் மிகாவின் நண்பருமான ராம் அல்லுரிதான், DSLR கேமரா பயன்படுத்தும் நுட்பத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். “அவர் எனக்கு நுட்பங்களை கற்றுக் கொடுத்தார். இப்போது நான் மேனுவலாகவே படம் பிடிக்கிறேன்,” என்கிறார்.
அற்புதமான பறவை புகைப்படங்கள் எடுப்பது மட்டும் போதுமானதல்ல. அடுத்தக் கட்டம், ஃபோட்டோஷாப் பயன்படுத்தத் தெரிவது. 2021ம் ஆண்டில் மிகா, முதுகலை மாணவரான சித்தார்த் ஸ்ரீநிவாசனுடன் அமர்ந்து ஃபோட்டோஷாப் கற்றுக் கொண்டார்.
அவரின் புகைப்படத்திறன் பற்றிய செய்தி பரவியது. இமயமலை சார்ந்த கட்டுரைகளை பதிப்பித்த The Third Pole இணையதளத்தில் பிரசுரமான ‘Lockdown brings hardship to birder’s paradise in India’ கடுரைக்கு பயன்படுத்த புகைப்படங்கள் அவரிடம் கேட்கப்பட்டது. “என்னுடைய ஏழு புகைப்படங்களை அவர்கள் எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு புகைப்படத்துக்கும் பணம் கொடுக்கப்பட்டது. சந்தோஷம் அடைந்தேன்,” என்கிறார் அவர். களப்பணியில் தொடர்ச்சியாக பங்காற்றி உதவியதால், மிகாவின் பெயர் பல ஆய்வுப்பணிகளில் துணை ஆசிரியராக இடம்பெற்றது.
மிகா பல திறமைகளை கொண்டவர். கடுமையான களப் பணியாளர் என்பதைத் தாண்டி, ஆர்வம் கொண்ட புகைப்படக் கலைஞராகவும் பறவைகள் வழிகாட்டியாகவும் இருக்கும் அவர், கிடார் இசைக்கருவியும் வாசிக்கிறார். சித்ரே பஸ்டியிலிருக்கும் தேவாலயத்துக்குள் நுழைகையில், மிகாவின் இசை அவதாரத்தை பார்க்கிறேன். மூன்று பெண்கள் நடனமாட, அவர் கிடார் வாசித்துக் கொண்டிருக்கிறார். உள்ளூர் பாதிரியாரின் மகளின் திருமணத்துக்கான பாடல் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் விரல்கள் கிடார் நரம்புகளை வாசிப்பதில், கவனமாக பறவைகளை பனி வலையிலிருந்து எடுக்கும் நுட்பம் தெரிந்தது.
அவை யாவும் அடையாளம் குறிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களில் விடுவிக்கப்பட்டன. பறந்து சென்ற அவை யாவும் காலநிலை மாற்றத்துக்கான அறிவிப்புகள்.
தமிழில்: ராஜசங்கீதன்