அசாமிய கோல் டிரம்கள், பெங்காலி கோலை விட குறைந்த (பாஸ்) ஒலி வடிவைக் கொண்டுள்ளன. தோலானது, நெகேராவை விட உயர்ந்த ஸ்ருதியைக் கொண்டுள்ளது. தாளவாத்தியங்களைத் தயாரிக்கும், கிரிபாட் பத்யோகர், இதனை நன்கு அறிவார். அந்த அறிவை அவர் தனது அன்றாட வேலைகளில் பயன்படுத்துகிறார்.
“இளம் சிறுவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை காமித்து, வாத்தியத்தின் டியூனிங்கை சரிசெய்யச் சொல்கிறார்கள்,” என்கிறார் அஸ்ஸாமில் உள்ள மஜூலியைச் சார்ந்த இந்த மூத்த கைவினைஞர். "எங்களுக்கு எந்த செயலியும் தேவையில்லை."
ட்யூனர் செயலியிலும், இது ஒரு சோதனை செயல்முறை தான் என்று கிரிபாட் விளக்குகிறார். தாள வாத்தியத்தின் தோல் சவ்வு, சரியாக சீரமைக்கப்பட்டு இறுக்கப்பட வேண்டும். "அப்போதுதான் இந்த ட்யூனர் செயலியும் கூட வேலை செய்யும்."
கிரிபாட் மற்றும் அவரது மகன் பொடூம் இருவரும், பத்யோகர்களின் (அல்லது பத்யகர்கள்) வம்சாவளியில் வந்தவர்கள். இவர்கள் துலி அல்லது சப்தாகர் என்றும் அழைக்கப்படுவர். இசைக்கருவிகள் தயாரிப்பதற்கும் பழுது பார்ப்பதற்கும் பெயர் பெற்ற இந்த சமூகம், திரிபுரா மாநிலத்தில் ஒரு பட்டியல் சாதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பொடூம் மற்றும் கிரிபாட், பொதுவாக டோல், கோல் மற்றும் தபலாவை உருவாக்குகின்றனர். "சத்ராக்கள் இங்கு இருப்பதால், எங்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும்" என்று பொடூம் கூறுகிறார். "இதனால் எங்களால் போதுமான அளவு சம்பாதிக்க முடிகிறது."













