“ஜுன் மாதத்தில் SDM (துணை பிரிவு மாஜிஸ்திரேட்) வந்து, ‘வெளியேற்றத்துக்கான நோட்டீஸ் இது’ எனக் கொடுத்தார்.’”
வழக்கமாக மக்கள் கூடும் பெரிய ஆலமரத்தை பாபுலால் ஆதிவாசி கஹ்தாரா கிராமத்தின் நுழைவாயிலில் சுட்டிக் காட்டுகிறார். இந்த கிராமத்து மக்களின் எதிர்காலம் அங்குதான் மாற்றப்பட்டது.
மத்தியப்பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்துக்குள்ளும் சுற்றியும் இருக்கும் 22 கிராமங்களிலுள்ள ஆயிரக்கணக்கானோர், தங்களின் வீடுகளையும் நிலங்களையும் அணைக்காகவும் ஆறு இணைப்பு திட்டத்துக்காகவும் விட்டுக் கொடுத்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இறுதி சுற்றுச்சூழல் அனுமதிகள் 2017ம் ஆண்டிலேயே கிடைத்துவிட்டது. தேசியப் பூங்காவில் மரம் வெட்டும் வேலை தொடங்கப்பட்டு விட்டது. உடனடி வெளியேற்றத்துக்கான சூழல் வேகம் பெற்றுவிட்டது.
இருபது வருடங்களாக பணியில் இருந்த 44,605 கோடி ரூபாய் (முதல் கட்டம்) மதிப்பிலான திட்டம், கென் மற்றும் பெத்வா ஆறுகளை 218 கிலோமீட்டர் நீள கால்வாய் கொண்டு இணைக்கவிருக்கிறது.
கடும் எதிர்ப்பை இத்திட்டம் எதிர்கொண்டது. “இத்திட்டத்துக்கான நியாயம் என எதுவும் இல்லை. நீரியியலில் கூட இத்தகைய ஒரு திட்டத்தை ஆதரிக்க முடியாது,” என்கிறார் நீர்த்துறையில் 35 வருடங்களாக இயங்கி வரும் அறிவியலாளர் ஹிமான்ஷு தக்கர். “முதலில், கென்னில் உபரி நீர் இல்லை. நம்பிக்கைக்குரிய ஆய்வோ இலக்குடன் கூடிய ஆராய்ச்சியோ நடத்தப்படவில்லை. எல்லாம் முன்னனுமானங்கள்தான்,” என்கிறார் அவர்.
தெற்காசிய அணைகள், ஆறுகள், மக்கள் வலைப்பின்னல் அமைப்பின் (SANDRP) ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் தக்கர். 2004ம் ஆண்டு நீர்வளத்துறையால் (தற்போது ஜல் ஷக்தி) ஆறுகளை இணைக்கவென உருவாக்கப்பட்ட வல்லுனர் குழுவில் உறுப்பினராக இருந்தவர் அவர். திட்டத்தின் அடிப்படையை அதிர்ச்சிக்குரியது என்கிறார் அவர். “ஆறுகள் இணைப்பு என்பது காடு, ஆறு, பன்மையச் சூழல் ஆகியவற்றின் மீது பாரிய அளவில் சூழலியல் ரீதியாகவும் சமூகரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது. இங்கும் பந்தென்ல்காந்த் மற்றும் பிற இடங்களிலும் மக்களை வறுமைக்கு தள்ளும்.”





























