மோகன்லால் லோஹர், தன் நினைவுக்குத் தெரிந்த வரையில், சுத்தியலால் அடிக்கும் ஓசை, இசையாக அவரை ஈர்த்ததாகக் கூறுகிறார். தாளம் தப்பாமல் அடிக்கும் அந்த ஓசையுடன் தன்னை ஈடுபடுத்தப்போவது, தன் வாழ்நாள் கனவாக மாறும் என்பதை அவர் சிறுவயது முதலே அறிந்திருந்தார்.
மோகன்லால், ராஜஸ்தானின் பார்மேர் மாவட்ட நந்த் கிராமத்தில், உள்ள லோஹர்களின் (கொல்லர்கள்) வீட்டில் பிறந்தவர். அவர் தனது எட்டு வயதில், தனது தந்தை, மறைந்த பவ்ரராம் லோஹருக்கு, சுத்தியல் மற்றும் பிற கருவிகளைக் எடுத்து கொடுத்து உதவி செய்து, இந்த கைவினையைத் துவங்கினார். "நான் பள்ளிக்குச் சென்றதே இல்லை. இந்தக் கருவிகளுடன் மட்டுமே விளையாடுவேன்," என்று அவர் கூறுகிறார்.
ராஜஸ்தானில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் பட்டியலிடப்பட்டுள்ள, கடுலியா லோஹர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பம், மார்வாரி மற்றும் ஹிந்தி மொழி பேசுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு 1980 களின் முற்பகுதியில் அதிக வேலை தேடி ஜெய்சல்மேருக்கு வந்தபோது, மோகன்லால் ஒரு வாலிபராக இருந்தார். அப்போதிருந்து, அவர் அலுமினியம், வெள்ளி, எஃகு மற்றும் பித்தளை போன்ற பல்வேறு பொருட்களிலிருந்து மோர்ச்சாங்குகளை செய்துள்ளார்.
"ஒரு லோஹா [இரும்பு] துண்டைத் தொட்டு உணரும்போதே, அது நன்றாக இருக்குமா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியும்," என்று மோகன்லால் கூறுகிறார். அவர் 20,000 மணி நேரத்திற்கும் மேலாக செஞ்சூடான இரும்பை வளைத்து, மோர்ச்சாங்கை வடிவமைக்கிறார். இந்த தாள வாத்திய இசைக்கருவியை, ஜெய்சால்மரின் பாலைவனங்கள் முழுவதும் கேட்க முடிகிறது.
"ஒரு மோர்ச்சாங்கை உருவாக்குவது கடினம்," என்று கூறும், 65 வயதான அவர், இதுவரை எத்தனை மோர்ச்சாங்குகளை உருவாக்கியுள்ளார் என்பது நினைவில் இல்லை என்கிறார்: "கின்தி சே பாஹர் ஹேன் வோ [அதற்கு கணக்கே இல்லை]."
ஒரு மோர்ச்சாங் (மோர்ஸிங் என்றும் அறியப்படுகிறது) தோராயமாக 10 அங்குல நீளம் கொண்டது. இரண்டு இணையான ஃபோர்க்குகளுடன் ஒரு மெட்டல் லாட வடிவ வளை உள்ளது. அவற்றுக்கிடையே ஒரு உலோக நாக்கு உள்ளது. ஒரு முனையில் நிலையானதாக இருக்கும் இதனை, ட்ரிக்கர் என்று அழைக்கின்றனர். இசைக்கலைஞர் அதைத் தங்கள் முன் பற்களால் கடித்தவாறு அதன் வழியாக சுவாசிக்கிறார். ஒரு கையால், இசைக்கலைஞர் மோர்ச்சாங்கின் டங்கை (நாக்கு) அசைத்து, இசையை உருவாக்குகிறார். இன்னொரு கை, இரும்பு ரிம்மை பிடிக்க உதவுகிறது.












