முன்பொரு காலத்தில் லாலாநிலம் என்கிற ராஜ்ஜியத்தை, கடவுளுக்கு ஒப்பான ரந்தி நடிமோரே என்கிற அரசர், இரும்பு (சத்தற்ற) கரங்கள் கொண்டு ஆண்டு வந்தார். அவர் உண்ணவில்லை. பிறர் எவரையும் உண்ணவும் விடவில்லை. அதனால்தான் அந்த பெருமைக்குரிய ஆரோக்கிய (குறைபாடு) நிலை விளைந்தது. என்ன? ஒரு வார்த்தை விடுபட்டுவிட்டதா? ஓ அது, மேற்குப்புறத்திலிருந்து வந்த பிரபு அகெளதா தனிமுக்கு ஏலத்தில் கொடுக்கப்பட்டுவிட்டது.
ஒருநாள், அரசரின் மேன்மைமிகு புரோகிதரான அஷாத்மிக்கு ஒரு கொடுங்கனவு வந்தது. அரசனின் அரியணைக்கு போட்டியாக குல்காந்திரா என்கிற ஒருவன் உருவாகியிருப்பதை கனவில் புரோகிதன் கண்டான். உண்மையிலேயே கொடுமையான ஆச்சரியம்தான் அது. ஏனெனில் ஜனநாயகம் போன்ற மோசமான சடங்குகளை பின்பற்றும் கூட்டத்தை சேர்ந்தவன் அவன். அவசரமாக அறிஞர் குழு கூட்டப்பட்டது. புனிதத் தீர்வை எட்டினார்கள்! 108 அடி நீள ஊதுபத்தி ஒன்றை, குழுக்களின் தெய்வமான தாகோமாவின் சுத்தமான கழிவிலிருந்து உருவாக்க வேண்டும்.
தாகோமா வயிறு காலி செய்யப்பட்டு, தேவையான குழுக்கள் சேர்க்கப்பட்டு, இறுதியில் ஊதுபத்தி கொளுத்தப்பட்டது. அது கொடுத்த அந்த மணம் இருக்கிறதே! அருமை. விவசாய வெறுப்பும், கட்டுக்கதையும் உருவாக்கும் ஓர் அருமையான மணம்! அதிலிருந்து கிளம்பிய புகை வெளிப்படையாக பரந்து, பசி நிறைந்த வானத்துக்கு பரவியதும் அரசன் ரந்தி, அகெளதாவுடனும் அஷாத்மியுடனும் சேர்ந்து களி நடனம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. தோஷம் தவிர்க்கப்பட்டதா, இல்லையா? யாரால் சொல்ல முடியும்? அதற்குப் பிறகு எப்போதும் லாலாநில மக்கள் இ(து)ன்புற்று வாழ்ந்தார்கள் என்பது மட்டும்தான் நமக்கு தெரியும்.
அரசர் நீடுழி வாழ்க!
1)
எது எதுகையானால் மோனை உதையாக முடியும்?
கவிதையா, புலம்பலா அல்லது வேடிக்கை
பாவகையா?
வாக்கு இயந்திரத்தின் மீது வைத்து
மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட
அதுதான்
நூற்றியெட்டு அடி நீண்ட ஊதுபத்தி.
2)
கோடிக்கணக்கான ’ஆம்’களுடனும்
சில ’முடியாது’களுடனும்
நாற்பத்தைந்து நாட்களுக்கு எரியுமது நீடித்து
உறுதியற்ற கடவுளாகினும்
அப்பழுக்கற்ற பக்தியுடன் சொல்லலாம்
சம்புகன் கிடப்பான் தலையற்று தொடர்ந்து
3)
பாபரின் கல்லறை மேல்
ஒரு சாம்ராஜ்யம் வளர்கிறது
வாட்சப்பும் பசுக்களும் பஜ்ரங் தளப் படையினர் உதவியோடு
ஆனால் என்ன வாசனை அது?
சொர்க்கத்தின் மணமா, நரகத்தின் நாற்றமா?
உவ்வேக்! நாட்டுக்கு என்னவென தெரிய
வேண்டும் அது.
4)
நூற்றியெட்டு அடி காவி உருளை
நாங்கள் வாக்களித்தது கயவாளிக்கல்ல, அரசருக்கு.
அவர் வளர்த்து வருவது ஒரு முதலை.
கேமராக்கள் தயாராகட்டும்.
நூற்றியெட்டு அடி நீண்டு உயரும் ஊதுபத்திக்கு.
5)
பட்டினி விவசாயிகளும் ஃபத்வாக்களும்
கலவரங்களும் லாலாநில நாட்டின் அன்றாடம்.
ஊதி அனைவரையும் விரட்டும்
புல்டோசரால் இடித்து ஊதுபத்தி ஏற்றப்படும்.
இடதுக்கும் காங்கிரஸுக்கும் புரியாதிது
எப்போதும்.
தமிழில்: ராஜசங்கீதன்