“தலைமுடிப் பூச்சு இன்னும் முடியை வெள்ளையாக்கும்,” என்கிறார் புஷ்பவேணி பிள்ளை. “இது போல,” என அவர் வெள்ளை நீலம் கலந்த ஓடுகள் பதித்த தரையைச் சுட்டிக் காட்டிச் சொல்கிறார். 60களின் பிற்பட்ட வயதுகளில் இருந்தாலும் சில நரைமுடிகள்தான் அவருக்கு இருந்தன. “தேங்காய் எண்ணெயும் லைஃப்பாய் சோப்பும் மட்டும்தான்,” என்கிறார் அவர், ‘மட்டும்’ என்கிற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து.
ஓடு பதிக்கப்பட்ட அந்தத் தரையில் ஒரு மதியவேளை அமர்ந்து கடந்து போன வருடங்களைப் பற்றியும் நிகழ்காலத்தைப் பற்றியும் பேசினார். “என் தாயின் காலத்தில், அவரின் மாமியார் ஒரு தேங்காய்த் துண்டை அவருக்குக் கொடுப்பார். அதை அவர் குளிக்கும்போது மென்று பின் தலையில் தேய்த்துக் கொள்வார். அதுதான் அவருக்கு தேங்காய் எண்ணெய்,” என்கிறார் அவர்.
அவருக்கு அருகே அமர்ந்திருக்கும் வசந்திப் பிள்ளையும் ஆமோதிக்கிறார். இரு பெண்களும் (தூரத்து உறவு) 50 வருடங்கள் தாராவியில் ஒரே தெருவில் தனி ஓரறைகளில் வாழ்ந்திருக்கிறார்கள். இருவரும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி திருப்தியுடன் பேசுகின்றனர். பல்லாண்டு கால நட்பால் இருவரும் இணைக்கப்பட்டிருக்கின்றனர். மாறியிருக்கும் உலகைப் பற்றி ஏகப்பட்ட நினைவுகளை அவர்கள் கொண்டிருக்கின்றனர்.
புஷ்பவேணி 14-15 வயதில் தாராவிக்கு இளம் மணமகளாக வந்தார். அதே தெருவில் இருந்த மைதானத்தின் மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமகனும் தாராவிக்காரர்தான். “அவருக்கு 40 வயது,” என்கிறார் அவர். அவ்வளவு வயதானவரா? “ஆமாம், அவர் குட்டையானவர் (எனவே எங்களுக்குத் தெரியவில்லை). மேலும் அந்தக் காலக்கட்டத்தில் இந்த விஷயங்களைப் பற்றி யாரும் யோசிக்க மாட்டார்கள். திருமணம் முடிந்த பிறகு, சாம்பார் சாதம் போட்டு விருந்து நடந்தது,” என அவர் நினைவுகூர்ந்து, “சைவம் மட்டும்தான்,” என்கிறார்.
கணவர் சின்னசாமி வாங்கியிருந்த ஓரறைக்குள் அவர் குடிபுகுந்தார். அந்த அறையின் விலை ரூ.500. அந்தக் காலக்கட்டத்தில் அது பெரிய தொகை. அறுவை சிகிச்சைக்கான நூல்களும் ஒயர்களும் தயாரிக்கும் ஒரு பட்டறையில் அவர் பணிபுரிந்தார். தொடக்க ஊதியம் ரூ.60. 1990களின் நடுவே அவர் ஓய்வுபெறும்போது 25,000 ரூபாய் மாத வருமானம் பெற்றுக் கொண்டிருந்தார்.







