அந்தக் குழுவில் கிட்டத்தட்ட அனைவருமே பெண்கள்தான் - பெரும்பாலும் அறுபது வயதைக் கடந்தவர்கள்; கையில் கோடரியும் மண்வெட்டியும் வைத்திருந்தார்கள். தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவையாறு தாலுகாவில் வரும் கீழதிருப்பந்துருத்தி கிராமத்தில் நாங்கள் இருந்தோம். கைகளில் கருவிகளோடு வயதான பெண்கள் நிற்கும் காட்சி நாங்கள் எதிர்பாராதது.
தஞ்சாவூர் நகரத்திலிருந்து கீழதிருப்பந்துருத்தி சுமார் 40 கிலோமீட்டர் இருக்கும். மே மாத வெயில் வாட்டி எடுக்க, குறுகலான சந்துகளின் ஊடே செல்கையில் நாங்கள் கண்ட சில காட்சிகள், இந்தியாவின் வளர்ச்சிக்கதை என்று நம்பிய சிலவற்றை உடைத்து, அந்தக் கதையின் மற்றொரு பக்கத்தை எங்களுக்குக் காட்டியது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களும் வேலை செய்துகொண்டிருந்தனர். முக்கால்வாசி பெண்கள் பலவீனமாகவும் சோர்வடைந்தும் காணப்பட்டனர். அனைத்து பெண்களும் ஒன்று நிலமற்ற கூலிகளாக இருந்தார்கள்; அல்லது குறு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அனைவரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தார்கள்; குறிப்பிடத்தக்க அளவில் தலித்துகள் இருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வயதான ஆண்களையும் பார்க்க முடிந்தது.
“இந்தக் குழுவில் கிட்டத்தட்ட 100 பெண்கள் இருக்கிறார்கள்”, என்றார் கிராம பஞ்சாயத்து உறுப்பினரான ஜே.ஆனந்தி. 42 வயதான அவர்தான் அந்தக் குழுவின் தலைவர்.
அந்தப் பெண்கள் வேலை செய்வதுபோல் என்னிடம் எந்தப் புகைப்படமும் இல்லை. காரணம், எங்களைக் கண்டதும் அவர்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டு என்னையும் என்னோடு வந்தவரையும் சூழ்ந்துகொண்டார்கள். எங்களை அரசாங்க அதிகாரிகள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டுவிட்டார்கள் என்பது புரிய எனக்கு சில நிமிடங்கள் ஆயின. “எப்பொழுது எங்களுக்கு சேர வேண்டிய பணத்தைக் கொடுப்பீர்கள்?”, என்று கேட்டார்கள்.
இரண்டு மூன்று மாதங்களாக மாநில அரசாங்கம் அவர்களுக்குக் கூலி தராமல் வைத்திருக்கிறது. “பத்தாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் வரை அரசாங்கம் எங்களுக்குத் தர வேண்டியிருக்கிறது”, என்று சிலர் கூறினர். ஏன் கூலி பாக்கி வைத்திருக்கிறது என்று கேட்டதற்கு மத்திய அரசைக் கைகாட்டினர். ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்குவதில் மத்திய அரசு தாமதம் காட்டியிருக்கிறது. இன்னொரு காரணம், 2016 டிசம்பரில் முதல்வர் ஜெ.ஜெயலலிதா இறந்ததிலிருந்து தமிழக அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.
ஒரு காலத்தில் மண்வளம் மிகுந்து செழித்த இந்த காவேரி டெல்டா பகுதி இன்று கடுமையான வறட்சியில் துவண்டு போயுள்ளது. காவேரி டெல்டாவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பலநூறு கிராமங்களில் ஒன்றுதான் கீழதிருப்பந்துருத்தி. தென் மேற்குப் பருவமழை ஜூலை முதல் செப்டம்பர் வரை இந்தப் பகுதிகளில் பெய்யும். இந்த வருடம் அதுவும் பொய்த்துவிட்டது. 2016-லும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை வரும் என்று காத்திருந்தால், அதுவும் பொய்த்துவிட்டது. விளைவு, அறுவடை அதளபாதாளத்தில் விழுந்தது. அதோடு சேர்ந்து வருவாயும் குறைந்தது, வேலையும் இல்லாமல் போனது.



