சுபாரி புட்டல் ஒரு தசாப்த காலமாக அவரால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு அதிகமான நாட்கள் மருத்துவமனையில் இருந்திருக்கிறார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட தனது 17 வயது மகனின் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார். பிறகு சிறிது நாள் அவரது கணவர் சுரேஷ்வராவிற்காக மும்பை சென்று வந்தார்.
அவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டில் நான்கு மாத கால இடைவெளியில் இறந்துவிட்டனர் அது சுபாரியை துக்கத்தில் ஆழ்த்தியது.
அவரது கணவர் சுரேஷ்வராவின் வயது வெறும் 44 தான். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரும் சுபாரியும் தங்களது சொந்த ஊரான ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மும்பை நகரத்திற்கு புலம்பெயர்ந்தனர். உள்ளூர் வேலை தரகர் அவர்களை ஒரு கட்டுமான வேலைக்கு எடுத்துக் கொண்டார். "நாங்கள் எங்களது கடனை திருப்பி செலுத்தவும் எங்களது வீட்டை கட்டி முடிப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்காக நாங்கள் சென்றோம்", என்று சுபாரி கூறினார். இருவரும் இணைந்து நாளொன்றுக்கு 600 ரூபாய் சம்பாதித்தனர்.
"ஒரு நாள் மாலை வேளை பணிபுரிந்து கொண்டிருக்கும் போதே அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது", என்று 43 வயதாகும் சுபாரி ஹியாலில் உள்ள தனது மண் வீட்டின் முன்னால் தரையில் அமர்ந்தபடி கூறினார், துரேகேலா வட்டத்திலுள்ள ஹியால் கிராமத்தில் 933 மக்கள் வசித்து வருகின்றனர். அவரது குடும்பம் மாலி சமூகத்தைச் சேர்ந்தது.
கட்டுமான மேற்பார்வையாளரும் சுபாரியும் சுரேஷ்வராவும் ஆட்டோ ரிக்ஷா மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் நகரின் சுற்று வட்டாரத்தில் உள்ள மூன்று மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர், இறுதியாக வடமத்திய மும்பையில் உள்ள சீயோனில் உள்ள லோக்மான்ய திலக் நகராட்சி பொது மருத்துவமனையை அடைந்தனர்.
"அந்த நேரத்தில் எங்களிடம் ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்கள் இல்லாததால் ஒவ்வொரு மருத்துவமனையும் எங்களை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி கொண்டே இருந்தது", என்று சுபாரி கூறுகிறார். "அவருக்கு மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் இருந்தன. இடுப்புக்கு கீழே அவரது உடல் செயலிழந்து போனது அதனால் அவரது பாதத்தை நான் தடவிக்கொண்டே இருந்தேன்", அவருக்கு என்ன நோய் என்பதை அவருக்கு தெரியவில்லை. மறு நாள் நவம்பர் 6ஆம் தேதி 2019 ஆம் வருடம் சுரேஷ்வரா அதே மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
"எங்களது மேற்பார்வையாளர் அவரை உடலை மும்பையிலையே அடக்கம் செய்யச் சொன்னார் ஏனென்றால் அவரது உடலை ஒடிசா விற்குக் கொண்டு வருவதற்கு அதிக பணம் செலவாகும் என்று கூறினார். நானும் சரி என்று கூறினேன்", என்று சுபாரி கூறுகிறார். இறுதிச் சடங்கிற்கு எனது மேற்பார்வையாளர் ஏற்பாடும் செலவும் செய்தார் எனது கணக்கை முடித்து விட்டு ஒரு கையில் சாம்பலுடன் இன்னொரு கையில் எனது கணவரின் இறப்புச் சான்றிதழ் கொடுத்து என்னை கணக்கை முடித்து அனுப்பி வைத்தார்", என்று கூறினார். அவரது சகோதரர் பாலங்கரில் உள்ள கர்லாபகலில் கிராமத்திலிருந்து இவரை ரயிலில் அழைத்துச் செல்வதற்காக நவம்பர் 11, 2019 ஆம் ஆண்டு மும்பைக்கு வந்தார், அவர்களது பயணத்திற்கு தான் சம்பாதித்து வைத்திருந்த 6 ஆயிரம் ரூபாயிலிருந்து செலவு செய்தார்.
மும்பை செல்வதற்கு முன்பாக சுபாரி மற்றும் சுரேஷ்வரா ஆகியோர் தங்களது சொந்த கிராமத்திலோ அல்லது பாலங்கீரின் கண்டபஞ்சி நகரிலோ அல்லது சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரிலோ தினக்கூலியாக வேலை செய்து நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் வரை சம்பாதித்து வந்தனர். ஒடிசா அரசாங்கத்தின் ஜூலை 2020 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி திறமையற்ற தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 303 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. அவர்கள் சுரேஷ்வராவின் ஆறு சகோதரர்களுடன் நிலத்தை பகிர்ந்து வந்தனர் (சுபாரிக்கு எவ்வளவு நிலம் இருந்தது என்பது தெரியவில்லை) ஆனால் அந்த நிலம் முழுவதும் இந்த பகுதியில் இருக்கும் தண்ணீர் பற்றாக்குறையால் தரிசாக விடப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.
2016 முதல் 2018 ஆம் ஆண்டுக்கு இடையில் இரண்டு முறை மெட்ராஸுக்கு செங்கல் சூளையில் பணி புரிவதற்காக சென்று வந்ததாக சுபாரி கூறுகிறார். எனது குழந்தைகள் வளர்ந்து வந்தனர் பித்யாதரும் நோய்வாய்ப்பட்டதால் எங்களுக்கு பணம் அதிகம் தேவைப்பட்டது. அவன் பத்து வருடங்களுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டிருந்தான்.
பித்யாதர் அவர்களது நடு குழந்தை. சுபாரிக்கு 22 வயதாகும் ஜனனி என்ற மகளும் 15 வயதாகும் தனூதர் என்ற இளைய மகனும் இருக்கின்றனர். அவரது 71 வயதாகும் மாமியார் சுப்பூலும் அவர்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரும் அவரது கணவர் லோகநாத் புட்டேலுடன் அவர்களது நிலத்தில் விவசாயியாக பணிபுரிந்து வந்திருக்கிறார் மேலும் இப்போது வயதானவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை வைத்து காலத்தை கழித்து வருகிறார். ஜனனி 18 வயதில் நௌபதா மாவட்டத்திலுள்ள சீகுவான் கிராமத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டாள். மேலும் பத்தாம் வகுப்பு படிக்கும் தனூதர் அவரது அண்ணன் இறந்த பிறகு அவரது பெற்றோர் மும்பைக்கு புலம்பெயர்ந்து சென்ற பிறகு தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார்.
17 வயதில் எந்த புற்றுநோய் தனது மகனைக் கொன்றது என்பது பற்றி சுபாரிக்கு தெரியவில்லை. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பித்யாதர் போராடி வந்தார் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைக்கு அவர்களது குடும்பம் சென்று வந்துள்ளது. நாங்கள் சம்பல்பூர் மாவட்டத்திலுள்ள புருலா மருத்துவமனைக்கு மூன்றாண்டுகள் சென்றோம் பாலங்கீரில் உள்ள மருத்துவமனைக்கு மூன்று ஆண்டுகள் சென்றோம், ராமகிருஷ்ணா மருத்துவமனை சென்றோம் என்று அவர் நினைவு கூர்கிறார். கடைசியாக சுபாரி இருக்கும் ஹியாலுக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையமான கண்டபஞ்சியிலிருந்து ரயிலில் சென்றால் 190 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராய்ப்பூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பித்யாதரின் சிகிச்சைக்காக பல ஆண்டுகளாக இக்குடும்பத்தினர் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உள்ளூர் கடன் கொடுப்பவர்கள் ஆகியோரிடமிருந்து கடன் வாங்கி இருக்கின்றனர். தனது மகனின் மருத்துவ செலவிற்கு 50 ஆயிரம் ரூபாய் பிரட்டுவதற்காக சுபாரி தனது மகள் ஜனனியின் நகையை கண்டபஞ்சியில் உள்ள அடகு கடையில் அடமானம் வைத்திருக்கிறார்.
கடன்கள் அதிகரித்து கொண்டே வந்ததால் அந்த அழுத்தத்தின் காரணமாக 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அத்தம்பதியினர் மும்பைக்கு புலம்பெயர்ந்தனர். ஆனால் அந்த ஆண்டு ஜூன் மாதம் அவர்களது மகனின் உடல்நிலை மோசம் அடைந்ததால் சுபாரி ஹியாலுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது பின்னர் ஜூலை மாதம் சுரேஷ்கரும் தங்களது கிராமத்திற்கு திரும்பி விட்டார். "அவன் பல மாதங்களாக அவதிப்பட்டு ரத யாத்திரையின் போது (ஜூலை மாதம்) இறந்து போனான்", என்று சுபாரி நினைவு கூர்கிறார்.
பித்யாதர் இறந்த உடன் அக்குடும்பத்திற்கு பிரதான் மந்திரி ஆவாஸ் (கிராமின்) திட்டத்தின் கீழ் வீடு அனுமதி வழங்கப்பட்டது. புதிய வீடு கட்டுவதற்கு தவணைமுறையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அவர்கள் பெற்றனர். ஆனால் சுபாரியும் சுரேஷ்வராவும் தங்களது மகனின் சிகிச்சைக்காக வாங்கியிருந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கு அந்தத் தொகையில் ஒரு பகுதியை செலுத்த வேண்டியிருந்தது அதனால் அவர்களது கட்டுமானம் பாதியிலேயே நின்று போனது. "எனக்கு மூன்று தவணையில் பணம் வந்தது முதல் தவணை 20,000 ரூபாய் இரண்டாவது தவணை 35 ஆயிரம் ரூபாய் மூன்றாவது தவணை 45 ஆயிரம் ரூபாய். முதல் இரண்டு தவணையை சிமென்ட், ஜல்லி போன்ற பொருட்களை வீட்டிற்கு வாங்குவதற்கு நாங்கள் பயன்படுத்தினோம் ஆனால் கடைசி தவணையை எங்களது மகனின் சிகிச்சைக்கு பயன்படுத்தினோம்", என்று கூறினார் சுபாரி.
துரேகேலாவில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டை ஆய்வு செய்து அரைகுறையாக இருப்பதை கண்டு அவர்களை கண்டித்தனர். நாங்கள் வீட்டை கட்டிமுடிக்க விட்டால் அவர்கள் எங்களது மீது வழக்குப் போடுவார்கள் என்று கூறினர். நாங்கள் வீட்டை கட்டி முடிக்காவிட்டால் கடைசி தவணை வழங்கப்படமாட்டாது என்று அவர்கள் கூறினர்", என்று சுபாரி கூறினார்.
எங்கள் மகன் இறந்து ஒரு மாதம் தான் ஆகி இருந்தது ஆனால் வீட்டை கட்டி முடிப்பதற்கு பணம் சம்பாதிக்க நாங்கள் மீண்டும் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பைக்கு புலம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது , என்று தனது மண் வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் இருக்கும் பாதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் வீட்டை காண்பித்து சுபாரி கூறினார். அதில் மேற்கூரை, ஜன்னல், கதவு ஆகியவை இல்லை சுவர்களும் பூசப்படாமல் இருந்தது. "இந்த வீட்டை கட்டுவதற்கு எனது கணவரின் உயிரையே பணயம் வைக்க வேண்டியிருந்தது", என்று கூறினார்.
சுபாரியின் மாமியார் சுப்பூல் புட்டல் இன்னமும் தனது மகனின் இறப்பிற்கு வருந்துகிறார் மேலும் அவர் தனது மருமகள் சுபாரி தனது மகன் சுரேஷ்வரா எப்படி இறந்தார் என்பது குறித்து உண்மையைச் சொல்லவில்லை என்று நம்புகிறார். "எனது மகன் தொலைபேசியில் என்னிடம் பேசினான் அவன் நன்றாக இருந்ததாகத் தான் தோன்றியது. என்னால் நம்பவே முடியவில்லை அதன் பிறகு சிறிது நாளில் அவன் இறந்துவிட்டான். கட்டுமான தளத்தில் பணிபுரியும் போது எதோ விபத்தில் எனது மகன் இறந்துவிட்டான் என்று நம்புகிறேன் தன்னை யாரும் குற்றம் சாட்டி விடக்கூடாது என்பதற்காக எனது மருமகள் உண்மையை மறைக்கிறாள். "அவர் எப்போதும் என்னை இப்படி தேவையில்லாமல் குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறார் அது போன்ற நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை", என்று சுபாரி கூறுகிறார்.
குடும்பத்தலைவர் இறந்தால் தேசிய குடும்ப நல திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீடு இருபதாயிரம் ரூபாய் 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. எனது கணவரின் இறுதி சடங்கிற்கு நான் செய்த செலவினை திருப்பி செலுத்துவதற்கு இப்பணம் பயன்பட்டது என்று சுபாரி கூறுகிறார். 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தான் விதவைகளுக்கு வழங்கும் மாதம் 500 ரூபாய் ஓய்வூதியத்தை தான் பெற்றுவருவதாகக் கூறினார்.
ஒரு கட்டுமான தொழிலாளி என்ற முறையில் சுரேஷ்வராவின் குடும்பத்தினர் ஒடிசாவின் கட்டடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் விபத்து மரணம் என்கிற அடிப்படையில் இரண்டு லட்சம் ரூபாய் பெற தகுதி பெறுகின்றனர். ஆனால் சுரேஷ்வரா மாவட்ட தொழிலாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை என்பதால் அவர்களால் அத்தொகையைப் பெற முடியாது. "கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அது எங்களுக்கு உதவியாக இருக்கும்", என்று சுபாரி கூறுகிறார். அவர்களது வீடு இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது கடனும் இருந்துகொண்டுதான் இருக்கிறது சொந்தக்காரர்களுக்கு மட்டுமே இருபதாயிரம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டி இருக்கிறது.
சுபாரி தான் வீட்டில் ஒரே வருமானம் ஈட்டும் நபர் அவர் கிராமத்தை சுற்றி வேலை செய்து 150 ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். "எனக்கு தொடர்ந்து வேலை கிடைப்பதில்லை நாங்கள் பல நாள் பட்டினி கிடந்து இருக்கிறோம்", என்று அவர் கூறினார். தனூதர் அவன் அக்காவின் கிராமத்திலிருந்து தங்களது கிராமமான ஹியாலிர்கே திரும்பிவிட்டான். "எனது மகன் படிக்கவில்லை. அவனுக்கு படிப்பில் ஆர்வமே இல்லாமல் போய்விட்டது", என்று சுபாரி கூறுகிறார். பள்ளியில் இருந்து நின்றுவிட்டான் இந்த வருடம் (2021) நடைபெறும் பொதுத்தேர்வில் அவன் கலந்து கொள்ளவில்லை.
வீடு இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை பாதி கட்டப்பட்ட சுவர் மற்றும் தரையில் செடிகள் முளைத்து விட்டன. சுபாரி எப்போது எப்படி தன்னால் அதற்கான பணத்தை தயார் செய்து கட்டி முடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. "மேற்கூரை இல்லாவிட்டால் மழைக்காலத்தில் வீடு சேதமடையும். கடந்த ஆண்டு மழை ஏற்கனவே சுவர்களை சேதப்படுத்திவிட்டது. ஆனால் என்னிடம் பணம் இல்லை, நான் என்ன செய்வது?",என்று கேட்கிறார்.
குறிப்பு: செய்தித்தாளில் இருந்து சுரேஷ்வராவின் மரணத்தைக் குறித்து அறிந்ததும் இந்த நிரூபரும் அவரது நண்பரும் ஹியால் கிராமத்திற்கு சென்றனர். கண்டபஞ்சியைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பி பி சர்மாவுடன் அவர்கள் குடும்பத்தின் நிலை குறித்து விவாதித்தனர், அவர் தான் நிதி உதவி கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதற்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் துரேகேலாவின் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தேசிய குடும்ப பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவியை பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்திற்கு வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து சுபாரியின் வங்கி கணக்கில் 20 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு இருக்கிறது மேலும் அவருக்கு விதவை அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழில்: சோனியா போஸ்