மாயா மொஹிதே பிறந்து மூன்று மாதமே ஆன ஷீத்தலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம், குழந்தையின் தாய் பூஜா அவர்களின் கூடாரங்களில் அருகே ஓர் இடத்தில் வேலை செய்கிறார். சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் இரண்டு துணி மற்றும் தார்ச்சாலை கூடாரங்கள்தான் அவர்களின் ‘வீடுகள்’. பூங்காவில் ஓர் ஓடையில் இருந்து நிரப்பப்பட்ட தண்ணீரில் பாத்திரங்களை கழுவும் வெளிப்படுபாறையின் மேல் மாயா அமர்ந்திருக்கிறார். குழந்தை தனது தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கிறது - அது சிவப்பு போர்வையின் கீழுள்ள ஒரு பழைய பாலிதீன் சிமெண்ட் பை.
"இங்கே ஒரு கார் நிறுத்துமிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன" என்று மாயா கூறுகிறார். மும்பையின் போரிவலி கிழக்கு பூங்காவின் நுழைவாயிலில் வாகன நிறுத்தும் இடம் கட்டப்பட்டு வருகிறது. மாயா 2018 டிசம்பரில் தனது ஏழு குடும்பத்தினருடன் இந்த நகரத்திற்கு வந்தார்; அவர்களுள் பூஜா, அவரது நாத்தினார். அவர்களில் சிலர் மும்பையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் கோபோலியில் உள்ள ஒரு கட்டுமான இடத்திலிருந்து இங்கு வந்திருக்கின்றனர். குடும்பத்தில் உள்ள ஒரு சிலர் ராஜஸ்தானிலுள்ள தளங்களில் வேலை முடித்த பிறகு போரிவலிக்கு வந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில்,மொஹியர்கள் ஜல்னா மாவட்டத்தின் ஜஃபெராபாத் தாலுகாவில் உள்ள தங்கள் கிராமமான ஹர்பலாவுக்குத் திரும்புவார்கள். இந்த குடும்பம் பெல்தார் சமூகத்தைச் சேர்ந்தது (சில மாநிலங்களில் நாடோடி பழங்குடியினராக பட்டியலிடப்பட்டுள்ளது). மாயாவின் பெற்றோரும் அவரது மூன்று சகோதரர்களும் ஹர்பலாவிலும் அதைச் சுற்றியுள்ள கட்டுமான தளங்களிலும் வேலை செய்கின்றனர். அல்லது, அவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். “நான் திருமணம் செய்துகொண்டப்போது மிகவும் இளமையாக இருந்தேன். அந்த நேரத்தில் நான் வயல்களில் வேலை செய்தேன்,”, என்று இப்போது 25 வயதாகும் மாயா கூறுகிறார்.
நீண்ட காலமாக, மாயாவின் மாமியார் குடும்பம் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் கட்டுமான தளங்களில் பணியாற்றினர். "பின்னர் அவர்கள் கிராமத்தில் ஓர் ஏக்கர் நிலத்தை வாங்கி திரும்பிச் சென்றனர்", என்று அவரது மைத்துனர் முகேஷ் மொஹித் கூறுகிறார். சில ஆண்டுகளாக அவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக மட்டுமே வேலை செய்ய முயன்றனர், ஆனால் அந்த வேலைக்கான தினசரி ஊதியம் மாறாமல் சுமார் ரூ. 150-200 ஆக இருந்தது, அதனால் அவர்களின் குடும்பம் கட்டுமான தளங்களுக்குத் திரும்ப முடிவு செய்தது, அங்கு தினசரி ஊதியமாக ரூ. 400-500 அளிக்கின்றனர்”, என்கிறார் முகேஷ்.
ஒப்பந்தக்காரர்களால் ஒதுக்கப்பட்ட வேலையைப் பொறுத்து அவர்களின் குடும்பம் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்கிறது. “நாங்கள் டெல்லி, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய இடங்களின் பணியாற்றியுள்ளோம். எங்கள் ஒப்பந்தக்காரர் 'இங்கே வாருங்கள், அங்கு செல்லுங்கள்' என்று கூறுவார், ”என்கிறார் மாயா. மழைக்காலத்தில், மொஹித்கள் ஹர்பலா கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் விவசாயத் தொழிலாளர்களாகவோ அல்லது கட்டுமானப் பணியாளர்களாகவோ பணியாற்றுகின்றனர்.
“நாங்கள் முன்பணமாக ரூ. 20,000 (ஒப்பந்தக்காரரிடமிருந்து) பெற்றுள்ளோம், ”என்கிறார் மாயா. இவற்றில் சில கூடாரங்களை அமைக்க பயன்படுத்தப்பட்டன. வாராந்திர செலவினங்களுக்காக மும்பையில் உள்ள தேசிய பூங்காவில் 10 பேர் கொண்ட குடும்பத்திற்கு (மாயாவின் மகன் அவினாஷ் மற்றும் குழந்தை ஷீத்தல் உட்பட) வாரத்தின் தேவை மற்றும் பேரம் பொறுத்து ஒப்பந்தக்காரரிடமிருந்து 5,000-10,000 வரை பெற்றுக்கொள்வார்கள். “ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் ரேஷன் வாங்கச் செல்கிறேன்; மீதமுள்ளவை [வாராந்திர தொகை] என் மாமியாருக்கு அனுப்புவேன், ”என்று மாயா கூறுகிறார். இந்த வாராந்திர பணம் பின்னர் இந்த வேலையின் முடிவில் அவர்களுக்கு வழங்கப்படும் தொகையிலிருந்து கழிக்கப்படும்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் காலை 7:00 மணிக்கு வேலையைத் தொடங்குவார்கள், அவர்கள் வழக்கமாக மாலை 6: 30-7: 00 மணிக்குள் திரும்புவார்கள். 10 பேர் கொண்ட குடும்பத்தில் மாயா மற்றும் இரண்டு பெண்கள் (பூஜா மற்றும் லட்சுமி, அவர்களுடன் இருக்கும் உறவினர்கள்) சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த முடிவதால் நிம்மதி அடைகிறார்கள். மற்ற இடங்களில், "நீண்ட தொலைவுக்கு எதுவும் இருக்காது, நாங்கள் காத்திருக்க வேண்டும்." என்று மாயா கூறுகிறார்,
ஒப்பந்தக்காரரால் ஒதுக்கப்பட்ட பணிகளைப் பொறுத்து வேலை நேரம் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாக இருக்கும். இந்த திட்டத்தின் முக்கிய ஒப்பந்தக்காரரான துளசிதாஸ் பாட்டியா, “ஒவ்வொரு தொழிலாளியும் வெவ்வேறு பிரிவில் உள்ளனர். சிலர் ஒரு நாளுக்கு ரூ. 200, மற்றவர்கள் ரூ.2,000 வரை சம்பாதிக்கின்றனர்.”. என்று கூறுகிறார். யாருக்கு ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் கிடைக்கும் என்று, அவரிடம் கேட்டால், அவர், யார் "கடின உழைப்பாளிகளோ”. என்று பதிலளிக்கிறார். பாட்டியாவுடன் பணிபுரியும் துணை ஒப்பந்தக்காரர்கள் தொழிலாளர்களை - மொஹித் குடும்பத்தைப் போல - வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பல்வேறு கட்டுமான தளங்களுக்கு அழைத்து வரப்படுக்கின்றனர்.
ஹர்பலாவில் உள்ள அவரது மாமனாரை தவிர அவரது குடும்பத்தில் யாருக்கும் வங்கி கணக்கு இல்லை என்று மாயா கூறுகிறார். அவர்கள் தங்கள் வருவாயை, செலவுகளுக்குப் பிறகு மீதமுள்ளவற்றை அவருக்கு அனுப்புகின்றனர், "நாங்கள் பணத்தை வங்கியில் வைத்திருக்க மாட்டோம், வங்கியில் வைக்க கொஞ்சம் பணம் இருக்க வேண்டும்!", என்று முகேஷ் கூறுகிறார். அவருக்கு தேவைப்பட்டால், அவரது மூத்த சகோதரர் ராஜேஷிடமிருந்து வாரத்திற்கு 200 ரூபாய் பெற்றுக்கொள்வார். அவரிடம் எதற்காக என்று கேட்டால், அவர், “சில சமயங்களில் புகையிலைக்கும், மீதமுள்ளவை எனது தொலைபேசியை ரீசார்ஜ் செய்வதற்கும்.”, கூச்சத்துடன் கூறுகிறார்.
இப்போது குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது, அவள் பசியுடன் இருக்கிறாள். வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள சுவர்களில் சிமெண்ட் பூசும் பணியுள்ள பூஜாவிடம் மாயா அழைத்துச் செல்கிறாள். "அவருடைய அப்பாவும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இன்னும் குழந்தையை பார்க்கவில்லை. ஏனென்றல, அவர்கள் இங்கு வேலை செய்துக்கொண்டிருக்கின்றனர். எல்லோரும் அவளைப் பார்க்க அழைக்கின்றனர். அவள் இங்கு வந்தபோது அவளுக்கு ஒரு மாதம்தான் ”என்று பூஜா கூறுகிறார். அவர் தனது 16 வயதில், இரண்டு வருடங்களுக்கு முன்பு ராஜேஷ் மொஹித்தை திருமணம் செய்து கொண்டார் (அவர் மதிப்பிடுகிறார்), அதன் பின்னர் அவரும் கட்டுமான தளங்களில் பணிபுரிந்து வருகிறார்.
ஒரு சிறுவன் ஓர் அலைபேசியை வைத்துக்கொண்டு கூடாரத்தை நோக்கி வருகிறான். அவர் மாயாவின் ஐந்து வயது மகன் அவினாஷ். அவரது இரண்டு மகள்கள், பூனம், 9, மற்றும் வைஷாலி, 7, அவரது மாமியார் குடும்பத்துடன் கிராமத்தில் தங்கியுள்ளனர். மேலும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை தான் விரும்பவில்லை என்று மாயா கூறுகிறார்: "அவன் பிறந்த பிறகு நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆபரேஷன் செய்துக்கொண்டேன்.", என்கிறார். அவரது கணவர் உராஜ் ஒரு வருடம் முன்பு அவரை விட்டுச் சென்றுவிடார். அவர் வேறொரு பெண்ணுடன் வாழ்கிறார் என்று அவர் நம்புகிறார். தனது மகள்களுக்கு குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்பித்து, பின்னர் அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய விரும்புகிறார்; ஆனால், அவர் தன் மகனை மேலும் கல்வி கற்பிக்க நம்புகிறார். அவன் தன் மாமாக்களுடன் வேலை செய்வதை அவர் விரும்பவில்லை.
மாயா பொதுவாக போரிவலியில் அருகிலுள்ள சந்தைகளுக்குச் சென்று குடும்பத்திற்கு காய்கறிகளையும் பொருட்களையும் வாங்குவார். ஆனால் ஒரு பெரிய விசேஷம் வருகிறது, விரைவில், வாராந்திர தேவைகளை விட அதிகமாக ஷாப்பிங் செய்ய வேண்டியிருக்கும். முகேஷ் திருமணம் செய்து கொள்கிறார். "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," மாயா கூறுகிறார். ‘[இந்த சமயத்தில்] எல்லோரும் சேர்ந்து பாடி சிரிப்பார்கள்.”
மும்பையில் மூன்று மாத வேலை காலம் முடிந்ததும், மாயாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனைத்தும் கழிக்கப்பட்ட பிறகு 40,000 ரூபாய் கிடைக்கும். முன்பணம் மற்றும் வாராந்திர ஊதியம் சேர்த்த பிறகு, இது 90 நாட்கள் வேலைக்கு எட்டு தொழிலாளர்களுக்கு ரூ.1,60,000 ஆக வருகிறது. - அல்லது ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் 225 ரூபாய் கிடைக்கிறது.
மார்ச் மாத இறுதியில், தேசிய பூங்கா கட்டுமான தளத்தில் வேலை முடிந்ததும், மொஹித் குடும்ப உறுப்பினர்களுள் சிலர் கிராமத்திற்குச் சென்றனர், மேலும் சிலர் கொபோலிக்குச் சென்று திருமணத்திற்கு முன்பு மேலும் சில பணத்தைச் சம்பாதிக்க முயற்சி செய்கின்றனர்.
திருமணத்திற்குப் பிறகு முழு குழுவும் ஒரு புதிய குடும்ப உறுப்பினருடன் மீண்டும் வேலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர் - அவர் முகேஷின் மனைவி ரூபாலி. அவர் முகேஷுடன் வேலை செய்யவில்லை என்றால், “அப்போது அவள் என்ன சாப்பிடுவாள்?”, என்கிறார் முகேஷ். இப்போது, மழை வரும்போது, அவர்கள் வயல்களில் வேலை செய்வதற்காக ஹர்பலாவுக்குத் திரும்புவார்கள்.
தமிழில்: ஷோபனா ரூபகுமார்