ஷாந்தி டீச்சர் கணித பாடத்தைத் தொடங்கும்போது கூடலூர் வித்யோதயா பள்ளி வகுப்பறைக்குள் கானகம் நுழைந்துவிடுகிறது. இவ்வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் 9 வயது மாணவர்கள். அவர்கள் நீண்ட கம்புகளை தேடி வெளியில் திரிந்து, மரங்களில் தாவி, வனப்பகுதிக்குள் நுழைந்து சேகரிக்கின்றனர். அக்கம்புகளில் மீட்டர் அளவீடுகளை குறித்துக் கொண்டு தங்கள் வீடுகளை அளக்கின்றனர். இப்படி தான் அளவீட்டிற்கான எளிய வகுப்புகள் தொடங்குகின்றன.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்காவில் உள்ள இப்பள்ளியில் பழங்குடியின வாழ்க்கை முறையில், வனங்களை பற்றிய பாடத்திட்டங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. காலை ஒன்றுகூடலில் பழங்குடியினப் பாடல்களும், நடனங்களும் இடம்பெறுகின்றன. பழங்குடியின கைவினைக் கலைகளைக் கற்பதில் பகல் நேரங்கள் கழிகின்றன. வனங்களில் தினமும் இயற்கையுடன் நடப்பது, செடிகள், வழிப்பாதைகள், கவனிப்பது, அமைதியின் முக்கியத்துவம் போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர். சில நேரங்களில் பெற்றோரும் இக்குழுவை வழிநடத்துகின்றனர்.
வித்யோதயா பள்ளியின் பாடப் புத்தகமான தி ஃபுட் புக்கில் வேட்டையாடுதல், மீன்பிடித்தல், பண்பாடு, உள்ளூர் பழங்குடியினரின் பயிரிடும் மரபு குறித்த பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. நூலக வகுப்பின்போது, பள்ளியால் பாதுகாக்கப்படும் கிளின பெங்கா எனும் பனியன் பழங்குடியின சிறுகதைகளின் தொகுப்பு நூலை மாணவர்கள் எடுத்துக் கொள்ளலாம். பழங்குடியின வழக்கங்களை கற்பிக்க சில சமயம் பெற்றோரும் வருகைதரு ஆசிரியர்களாக பள்ளிக்கு வருகின்றனர். “பழங்குடியின பண்பாட்டை வளர்த்தெடுக்கவும், பழங்குடியின குழந்தைகளை பெற்றோரிடம் அந்நியப்படுத்தாத கல்வி முறையையும் பள்ளியில் நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்கிறார் பள்ளியின் அனைத்தையும் உள்ளடக்கிய கலைத்திட்டத்தின் முதன்மை வடிவமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ராம சாஸ்திரி. இக்குறிக்கோள்களுடன் பொறுப்புணர்வும், அன்பும் கொண்ட பழங்குடியின ஆசிரியர்களைப் பெற்றுள்ளதால் இப்பணி சரியாக நடக்கிறது. பனியன் பழங்குடியினரான மூத்த ஆசிரியை ஜானகி கற்பகம் சொல்கிறார்: “பள்ளிகளில் நம் பண்பாட்டை கற்பிப்பதில் ஒரு அவமானமும் கிடையாது. குழந்தைகளும் அவற்றை மறக்க மாட்டார்கள்.”










