ஜூலை மாத இறுதியில் தெலுங்கானாவின் அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள சத்னாலா நீர்த்தேக்கம் நிரம்பியிருந்தது. தங்கள் பயிர்களுக்கு சம்பா மற்றும் குறுவை என இரண்டு பருவங்களிலும் நீர்ப்பாசனம் செய்யலாம் என்று கரஞ்சி கிராமத்து விவசாயிகள் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் எதிர்பாராமல் 200 மிமீ மழை பெய்தது. இதனால் சத்னாலா நீரத்தேக்கத்தில் (கோதாவரியில் இணையும் பெங்கங்காவின் ஒரு துணை நதி இது), நீரோட்டத் திசையிலும் நீரோட்டத்தின் எதிர்திசையிலும் உள்ள கால்வாய்களின் இரு கரைகளிலும் உள்ள வயல்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் பயிர்கள் அனைத்தையும் அடித்துச் சென்றுவிட்டது – முக்கியமாகப் பருத்தி மற்றும் சிறிது சோயா. இப்போது நிலங்களில் கற்களும் மண்ணும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கிடையே, வழக்கமாகப் பெய்யும் 880 மிமீ மழையை விட, அதிலாபாத் 44 சதவிகிதம் அதிக மழையைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, இதே மாதங்களில், மாவட்டத்தின் இயல்பை விட 27 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. பல விவசாயிகளுக்கு 2017 குறைந்த வருமானம் உள்ள ஆண்டாக இருந்தது. ஆனால் 2018 வருமானமே இல்லாத ஆண்டாக மாறிவிட்டது.
அந்த விவசாயிகளில் ஒருவர்தான் குந்தவர் சங்கீதா. இவர் சத்னாலா அணையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 1360 மக்கள் வசிக்கும் கிராமமான ஜைனத் மண்டலத்தில் உள்ள கரஞ்சியைச் சேர்ந்தவர். ஜூன் மாதம் அவரும் அவரது கணவர் கஜானனும் தங்களது முதல் பயிரான பருத்தியைப் பயிரிட்டனர். 2019 ஜனவரி-பிப்ரவரியில் அறுவடை செய்யலாம் என்கிற நம்பிக்கையில்.
தங்களது சொந்த நிலத்தில் முதல் சாகுபடி செய்வதற்கு முன் சங்கீதா விவசாயக் கூலியாக வேலை செய்து வந்தார். கஜானனும் ஆண்டுக்கு ரூ.86,000 சம்பளத்திற்கு விவசாயக் கூலியாக வேலை செய்தார். சங்கீதாவும் அதே நிலத்தில் வேலை செய்ய வேண்டுமென்கிற நில உரிமையாளரின் நிபந்தனையின் படி அவர் பணியமர்த்தப்பட்டிருந்தார். சங்கீதாவுக்கு அங்கு எப்போதாவது தான் வேலை இருக்கும். நாட்கூலியாக ரூ.120 கிடைக்கும். “கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் ஒரு நில உரிமையாளர் கீழ் வேலை செய்தோம்”, என்கிறார் சங்கீதா. வேலை இல்லாத நாட்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (MGNREGS) கீழ் வழங்கப்படும் கூலி வேலை கைகொடுக்கும். “அல்லது நான் [பெங்கங்காவிலிருந்து, ஒரு தனியார் ஒப்பந்தக்காரருக்கு] டிராக்டர்களில் மணல் ஏற்றவும் இறக்கவும் செய்வேன்,” என்கிறார் கஜானன்.








