உலகிலேயே பெரிய அளவில் அமைதியாக நடத்தப்பட்ட ஒரு ஜனநாயகப் போராட்டம் - தொற்று உச்சம் பெற்றிருந்த நிலையில் கூட பெரியளவில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த போராட்டம் - பெருவெற்றி அடைந்திருக்கும் உண்மையை ஊடகங்கள் ஒருபோதும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியாது.
ஒரு பாரம்பரியத்தை முன்செலுத்தும் வெற்றி. ஆண், பெண் உள்ளிட்ட - பழங்குடி மற்றும் தலித் சமூகங்களையும் உள்ளடக்கிய - விவசாயிகள் இந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றனர். இந்தியச் சுதந்திரத்தின் 75வது ஆண்டில் சுதந்திரத்துக்கான போராட்ட உணர்வை தில்லியின் எல்லையில் மீண்டும் விவசாயிகள் மீட்டெடுத்திருக்கின்றனர்.
இந்த மாத 29ம் தேதி தொடங்கவிருக்கும் குளிர்கால கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுமென பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ‘கடும் முயற்சிகள் எடுத்தும் குறிப்பிட்ட சில விவசாயிகளை சமரசத்துக்கு’ உடன்பட வைக்க முடியாததால் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக சொல்லியிருக்கிறார். கவனித்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட சில விவசாயிகள்தான். மூன்று வேளாண் சட்டங்கள் அந்தக் குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கும் கூட நன்மை பயக்குமென பேசி சமரசம் செய்ய முடியவில்லை என சொல்லியிருக்கிறார் பிரதமர். வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தில் இறந்துபோன 600 விவசாயிகளைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை. அவருடைய தோல்வி என்பது அந்தக் ‘குறிப்பிட சில விவசாயிகள்’ உண்மையின் ஒளியைப் பார்க்க வைக்க முடியாத அவரது திறமைக் குறைவினால்தான் என தெளிவுப்படுத்தி இருக்கிறார். அவர் குறிப்பிடும் தோல்விக்குள் வேளாண் சட்டங்களோ அல்லது தொற்றுக்காலத்தில் அவற்றைக் கட்டாயப்படுத்தி நிறைவேற்றிய அரசோ இல்லவே இல்லை.
அதாவது, திடுமென தற்போது ‘குறிப்பிட்ட சில விவசாயிகள்’ என்கிற நிலைக்கு ஏற்றம் பெற்றிருக்கும் காலிஸ்தானிகள், தேசவிரோதிகள், போலிச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் திரு.மோடியின் அற்புதமான சமரச முயற்சிகளை நிராகரித்து விட்டார்களாம். சமரசத்தை மறுத்து விட்டார்களா? சமரசம் செய்யப்பட்ட முறையும் தன்மையும் என்ன? தங்களின் குறைகளை சொல்ல தலைநகருக்கு வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பதுதான் சமரச முறையா? அல்லது, குழிகளையும் முள்வேலிகளையும் கொண்டு அவர்களின் பாதைகளை அடைப்பதா? அல்லது அவர்களின் மீது நீர் பீய்ச்சப்படுவதா? இல்லையெனில், அவர்களின் வசிப்பிடங்களை முகாம்களாக மாற்றுவதா? அல்லது வணிக ஊடகங்கள் தினந்தோறும் விவசாயிகளை தீயவர்களாக்கிக் காட்டியதே, அப்படியா? அல்லது வாகனங்களை ஏற்றி அவர்களை கொல்ல முயன்றதா? அதுவும் அந்த வாகனத்தின் உரிமையாளராக ஒன்றிய அமைச்சர் அல்லது அவரின் மகனாக இருக்க வைத்ததா? சமரசம் என்பதற்கு இந்த அரசு கொண்டிருக்கும் கருத்து இதுதானா? இவைதான் இந்த அரசின் ‘சிறந்த சமரச முயற்சிகள்’ எனில், மோசமான முயற்சிகளை நாங்கள் பார்க்க விரும்பவில்லை.











