களைப்புற்ற அவர்களது கண்கள்
எதனைப் பார்க்கும்?
சிதறிக் கிடக்கிற அழுக்கான ஒரு கனவு!
சிதறிக் கிடக்கிற சொர்க்கம் போன்ற ஒரு திட்டம்!
(ஸ்ரீரங்கம் சீனிவாசராவ் 1935இல் ‘பரஜிதுலு’ (தமிழில் நட்டம் என்று அர்த்தம்) என்ற தலைப்பில் எழுதிய தெலுங்கு கவிதை)
அதிகாலை ஐந்து மணிக்கு அவர்கள் இடிப்பதற்காக வந்தனர். “ வீட்ல இருந்த எங்களோட சாமான்கள எடுத்துக்கக்கூட எங்களுக்கு அவங்க டைம் கொடுக்கல” என்கிறார் 40 வயதான டி. கங்குலம்மா. ஆந்திராவின் அனந்தபூர் நகரத்துக்கு வெளியே உள்ள விஜயநகர் காலனியில் வசிக்கிற தினக்கூலி தொழிலாளி. “அவர்கள் எங்களது வாழ்க்கையை ரோட்டுக்குக் கொண்டுவந்துட்டாங்க” என்கிறார்.
எட்டு புல்டோசர்களும் சுமார் 200 போலீஸ்காரர்களும் வந்திருப்பார்கள் என்கிறார்கள் பகுதி மக்கள். 300 வீடுகளைக் கொண்ட சுமார் 150 குடியிருப்புகளை ஒன்பது மணி அளவில் இடிக்கத் தொடங்கும்போது எட்டு பெண் போலீஸ்காரர்களும் வந்திருக்கின்றனர். பெரும்பாலான வீடுகள் கடந்த மூன்று நான்கு வருடங்களில் கட்டியவை. அந்தப் பகுதியில் வாழ்பவர்களிலேயே மிகவும் ஏழைகளாக இருப்பவர்கள் வசிக்கிற வீடுகள் அவை.
பயத்திலும் அவசரத்திலும் மக்கள் விட்டு வந்த, உடைந்த பிளாஸ்டிக் பக்கெட்கள், கிழிந்த பள்ளிப் புத்தகங்கள்,, சேறு படிந்த உடைகள் உள்ளிட்ட பொருள்கள் வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையே கிடக்கின்றன.









