“கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு வர பார்த்தார் அவர். ஆனால் நடந்தது இது தான்“ என்கிறார் இறந்துபோன விவசாயி பாண்டுரங்கின் மனைவி இந்துபாய். 60 அடி ஆழத்துக்கு தோண்டிய பிறகும் பாண்டுரங் அத்சுல் மற்றும் அவரது பணியாளர்களால் நிலத்திலிருந்து “ஒரு குவளை தண்ணீரைக் கூட” எடுக்கமுடியவில்லை.
பருத்திக்கும், சோயா பயிர்களுக்கும் தண்ணீர் இல்லாத தன் குடும்பத்தின் முடிவில்லாத துயரம் காரணமாக ஒரு கிணறு வெட்டுவதற்கு தீர்மானம் செய்த பாண்டுரங் 2012ம் ஆண்டில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வங்கிக் கடனாய் பெற்றிருந்தார். சொந்தக்காரர்களிடமிருந்தும் சிறு சிறு தொகைகள் கடன் பெற்றார். கிணற்று நீரின் உதவியால் கிடைக்கும் என நம்பிய வளமான விளைச்சலால் அந்த கடன்களையெல்லாம் அடைக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால், வறட்சி பாதித்த மராத்வாடா பகுதியின் ஓஸ்மானாபாத் மாவட்டத்தில் கலம்ப் தாலுகாவில் உள்ள போகாஜி கிராமத்தின் நிலம், தண்ணீரை வழங்கவில்லை. வாங்கிய கடன் குறித்த பதட்டம் மெல்ல மெல்ல பாண்டுரங்கினுள் கிணற்றை விட ஆழமாகியது. 2014-ல் ( இந்துபாய்க்கு எப்போது என்று சரியாக நினைவில்லை) பாண்டுரங் தன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “நான் அப்போது களத்தில் இருந்தேன்,” “பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அங்கு ஓடி வந்து அவர் (கணவர்) தன்னை வீட்டுக்குள் பூட்டிக் கொண்டார்..” என சொன்னதாக நினைவுகூர்கிறார் இந்துபாய்.
பாண்டுரங்கின் இழப்பால் ஏற்பட்ட உணர்வுப்போராட்டமே இன்னும் முடியாத நிலையில், இந்துபாய்க்கு அடுத்த கட்ட போராட்டங்கள் தொடங்கி விட்டன: அரசாங்கத்தினுடைய (ஏட்டளவில் விவசாய தற்கொலைகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட) விசித்திரமான விதிகள் படி இந்துபாயின் கணவருடைய தற்கொலை “தகுதியான” ஒன்றாக ஏற்கப்படவில்லை. அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு பாண்டுரங் தற்கொலை செய்து கொண்டிருந்தால் இந்துபாய்க்கு இந்நேரம் ஒரு லட்சம் ரூபாய் - 30 ஆயிரம் ரொக்கமும், 70 ஆயிரம் வங்கி டெபாசிட்டும் - மாநில அரசிடமிருந்து இழப்பீடாக கிடைத்திருக்கும்.









